தஞ்சை: தஞ்சையில் நடைபெற்று வரும் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038ம் ஆண்டு சதய விழாவின் 2வது நாள் நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038ம் ஆண்டு சதய விழா 2 நாள் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி தஞ்சை பெரியகோவில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. 2ம் நாள் விழாவான இன்று தஞ்சை பெரியகோவிலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளங்கள், செண்டை மேளங்கள் முழங்க யானை மீது ராஜராஜன் மீட்டெடுத்து தேவார ஓலைச்சுவடிகள் வைத்தும் ஊருவளமாக எடுத்துச்செல்லப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தருமபுர ஆதினம், தமிழ் அறிஞர்கள், ஓதுவார்கள் ஊர்வலமாக சென்று ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுவதற்கு முதலமைச்சருக்கு தருமபுர ஆதீனம் பாராட்டு தெரிவித்தார். கும்பகோணம் அருகே உடையாளூரில் மாமன்னன் ராஜராஜ சோழன் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் மரியாதையை செலுத்தினர். இந்த இடத்தில ராஜராஜனுக்கு மணி மண்டபம் கட்டவேண்டும் என்றும் தொழில் ஆய்வு நடத்தவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே மன்னர்கள் காலத்திலேயே மக்களாட்சி முறையை நடைமுறை படுத்தியவர் ராஜராஜசோழன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார். சிறந்த நிர்வாகம் நீர் மேலாண்மை, விவசாயம், கட்டட கலை, மக்களின் பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தவர் ராஜராஜ சோழன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழனின் வீரத்தையும், ஆளுமையையும் எந்நாளும் போற்றி வணங்குவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.