Sunday, September 1, 2024
Home » குடைவரை கோயில்களை ஆவணம் செய்யும் புகைப்படக் கலைஞர்!

குடைவரை கோயில்களை ஆவணம் செய்யும் புகைப்படக் கலைஞர்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

மூன்றாம் கண் வழியாக நாம் பார்க்கும் காட்சியினை அப்படியே தத்ரூபமாக படம் பிடிப்பதுதான் போட்டோகிராபி. இதனை பெரும்பாலான ஆண்கள்தான் செய்து வந்தனர். பெண்களுக்கும் புகைப்படத் துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன காலம் எல்லாம் மாறி இப்போது பெண்களும் கையில் கேமரா ஏந்த ஆரம்பித்துள்ளனர். அதில் பலர் வைல்ட் லைஃப், சினிமா என அவர்களுக்கு பிடித்த துறையினை தேர்வு செய்து அதில் மிளிர்ந்தும் வருகிறார்கள். அதன் வரிசையில் தனக்கு பிடித்த புகைப்படத் துறையில் ஒரு பாணியினை பின்பற்றி வருகிறார் ஈரோட்டை சேர்ந்த திலகவதி. இவர் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க உள்ள குடைவரை கோயில்களை படம் பிடித்து அதனை ஆவணப்படுத்தி வருகிறார்.

‘‘சென்னை அரக்கோணம்தான் என்னுடைய பூர்வீகம். படிச்சது எல்லாம் சென்னையில்தான். சின்ன வயசில் இருந்தே எனக்கு போட்டோகிராபி மேல் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. ஆனால் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று அந்த சமயத்தில் தெரியவில்லை. அதனால் எம்.ஏ படிச்சேன். படிப்பு முடிந்ததும் திருமணம். குழந்தைகள், குடும்பம் என்று தான் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருந்தது. ஆனாலும் போட்டோகிராபி மேல் இருந்த என் ஆர்வம் குறையவில்லை. கேமரா இல்லாத காரணத்தால், என்னுடைய மொபைல் போனிலேயே நான் போகும் இடங்கள் மற்றும் அங்கு காணும் பொருட்களைப் படம் பிடிக்க ஆரம்பித்தேன்.

கண்களுக்கு தென்படும் பூக்கள், மரங்கள், வீட்டிற்கு அருகில் இருக்கும் கோயில்கள் ஏன் சமையல் சார்ந்தும் நான் பல படங்களை செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் நான் எடுத்த புகைப்படங்களை என் கணவரிடம் காண்பித்த போது, அவர்தான் எனக்குள் ஒளிந்து இருந்த திறமைக்கு ஊக்கம் அளித்தார். என் பிறந்தநாளுக்கு ஒரு DSLR கேமராவை பரிசளித்தார்.

செல்போனில் புகைப்படம் எடுத்து வந்த எனக்கு இது பெரிய அளவில் உற்சாகத்தினை அளித்தது. என்னதான் போட்டோகிராபி மேல் ஆர்வம் இருந்தாலும், அதனை முறையாக கற்றுக் கொள்ள விரும்பி பயிற்சி எடுத்துக் கொண்டேன். குறிப்பாக கேமராவில் எப்படி புகைப்படங்கள் எடுக்க வேண்டும், அதனை பயன்படுத்தும் முறைகளை கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அதை எல்லாம் பார்த்தால் என் கனவினை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், மிகவும் கவனமாக பயிற்சியினை மேற்கொண்ேடன். ஆன்லைன் மூலம் பல போட்டோகிராபி சார்ந்த ேபாட்டியிலும் பங்கு பெற்று பரிசுகளும் பெற்றேன். அது மேலும் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது’’ என்றவர் குடைவரை ேகாயில்களை ஆவணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது குறித்து விவரித்தார்.

‘‘தமிழர்களின் வராலாற்றை பறை சாற்றுவதில் மிகவும் முக்கிய பங்கு குடைவரை கோயில்களுக்கு உள்ளது. நான் என்னுடைய புகைப்படங்கள் மூலம் அதனை ஆவணப்படுத்த விரும்பினேன். இதனால் தமிழகத்தில் உள்ள குடைவரை கோயில்கள் குறித்த ஆய்வில் இறங்கினேன். தமிழகத்தில் மட்டும் 119 குடைவரை கோயில்கள் உள்ளன. அதில் 60 கோயில்களை என்னுடைய புகைப்படம் மூலம் நான் பதிவு செய்திருக்கிறேன். இந்த கோயில்கள் அனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டது.

அதன் கலை நயங்கள் இன்று பார்த்தாலும் மனதை ஈர்க்கும் வகையில் இருக்கும். நான் தற்போது தமிழகத்தில் உள்ள குடைவரை கோயில்களை மட்டுமே படம் பிடித்து வருகிறேன். இங்குள்ள ேகாயில்களை முடித்த பிறகு தான் இந்தியாவில் அமைந்திருக்கும் மற்ற கோயில்களை படம் பிடிக்கணும். மேற்குவங்கம், அசாம், பஞ்சாப், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மிகவும் அழகான குடைவரை கோயில்கள் உள்ளன. கண்டிப்பாக அதனையும் நான் என்னுடைய கேமராவில் பதிவு செய்ேவன். என்னால் முடிந்தவரை இந்தக் கோயில்கள் அனைத்தையும் படம் பிடித்து அதற்கான தரவுகளுடன் ஒரு கட்டிடக்கலை நூலாக வெளியிட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இதன் மூலம் இந்த கோயில்கள் பற்றிய விவரங்களை அதன் உயி ரோட்டத்திலேயே அடுத்து வரும் தலைமுறையினருக்கு கடத்த வேண்டும்’’ என்றவர் குடைவரை கோயில்கள் பற்றி விவரித்தார்.

‘‘தமிழகத்தின் முதல் கிறிஸ்துவ குடைவரை என்று சொன்னால் அது மணப்பாட்டில் உள்ள பிரான்சிஸ் சேவியார் குடைவரை. 1506ம் ஆண்டு, யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியினருக்கு, ஸ்பெயின் நாட்டில் பிறந்தார். இவரின் தந்தை அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார். தன் ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பில் அரண்மனையில் படித்து வந்தார். ஸ்பானிஷ் மற்றும் பாஸ்க் மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

தன் கல்லூரிக் காலத்தில் தன்னை கடவுளுக்காக அர்ப்பணித்து, ‘இயேசு சபை’ என்ற இயக்கம் மூலம் இறைப்பணி செய்து வந்தார். தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார். மணப்பாட்டில் அவர் தங்கியிருந்த குகை மற்றும் அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன இன்றும் உள்ளன. கிணறு கடற்கரைபகுதியில் இருந்தாலும் அதில் உள்ள தண்ணீர் உப்புகரிக்காது, மக்கள் அதனை குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். பல இடங்களில் இறைப்பணி செய்தவர் சான்சியான் தீவில் உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.

அங்கு அவரின் உடல் புதைக்கப்பட்டாலும், அவரின் உடலில் இருந்து ஒரு எலும்பாவது இந்தியாவில் புதைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார் அவரின் சீடர் அந்தோணியர். புதைக்கப்பட்ட உடலை தோண்டிய போது, அது எந்தவித மாற்றமும் இல்லாமல், உருக்குலையாமல் அப்படியே இருந்தது. அவரது உடல் 1554ல், கோவா கொண்டு வரப்பட்டு, ‘பாம் இயேசு தேவாலயத்தில்’ இன்றுவரை பாதுகாக்கப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. இவரின் நினைவாக மணப்பாட்டில் குடைவரை அமைக்கப்பட்டுள்ளது.

நான் இதுவரை 50க்கும் மேற்பட்ட குடைவரைகளை படம் பிடித்து இருக்கிறேன். அதில் எனக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமானது திருக்கழுக்குன்றம் குடைவரை கோயில். செங்கல்பட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. ‘ஒரு கல் மண்டபம்’ என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலில் சிவனுக்காக ஒரு குடைவரை உள்ளது. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தின் கல்வெட்டுகள் இங்கு கிடைத்துள்ளன. இது போன்ற சிறப்புமிக்க குடைவரை கோயில்களை தேடி பயணிக்க வேண்டும், அதை என் புகைப்படம் மூலம் எதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் நான் படம்பிடித்த அனைத்து படங்களையும் குறிப்புகளுடன் ஒரு புகைப்பட கண்காட்சி நடத்த வேண்டும்’’ என்றார் திலகவதி.

தொகுப்பு: ஷன்மதி

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi