நன்றி குங்குமம் தோழி
*டிபன் பாக்ஸில் தோசை வைக்கும் போது, தோசையை மூடி போட்டு வேகவிடவும். பின் தோசையின் மேல் எண்ணெய் தடவி, இட்லி மிளகாய் பொடி குழைத்து தடவி கொடுத்துவிட, தோசை சாப்பிடும் வரை சாஃப்டாக இருக்கும்.
*ஆம்லெட் செய்யும் போது, சீஸை உதிர்த்து சேர்த்து பின் இறக்க, மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
*ஃப்ரீசரில் வெண்ணெயை வைத்து, கட்டியானதும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொண்டு அதை தோசைக்கல்லில் தேய்த்து தோசை, அடை, ஆம்லெட் என தயாரிக்க சிறிதளவே வெண்ணெய் ஆகும். சீராகவும் பரவி இருக்கும்.
– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
*வடாம் மாவில் சிறிது சோம்பு கலந்து காயவைத்தால் பொரித்து சாப்பிடும் போது சுவையாக இருக்கும்.
*வடாம் பிழியும் முன்பு ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெயையும் தண்ணீரையும் கலந்து கொண்டு, சிறிய துணியால் பிளாஸ்டிக் பேப்பரில் துடைத்த பின்பு வடாம் பிழிந்தால், காய்ந்தபின் ஒட்டாமல் தனியாக வந்து விடும்.
* வெந்த ஜவ்வரிசியுடன் பச்சைமிளகாய், பூண்டை அரைத்து கலந்து வடாம் செய்தால் மணமாக இருப்பதுடன் வாயுவும் நீங்கும்.
– ஆர்.சாந்தா, சென்னை.
* அரிசி உப்புமா செய்யும்போது, அரிசி ரவையில் கொஞ்சம் நல்லெண்ணெயை பிசிறி வைத்து, உப்புமா செய்ய உப்புமா பொல பொல என்றிருக்கும்.
* கறிவேப்பிலை, புதினா, மல்லித்தழை, முருங்கை இலை இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித்தனியாக பொடி செய்து வைத்துக் கொண்டால், சாம்பார், கூட்டு இவைகள் செய்யும்போது தேவையான பொடிகளை கலந்து விடலாம்.
– மரகதம் ரமேஷ், சென்னை.
* முறுக்கு, தட்டை போன்ற பலகாரங்கள் தயாரிக்கும் போது அரிசி மாவை முதலில் வெயிலில் நன்றாக உலரவைத்து, சலித்து முறுக்கு, தட்டை தயார் செய்தால் மொறுமொறுவென சுவையாய் இருக்கும்.
* சாம்பார் வாசனையாக இருக்க கொதித்து இறக்கும் போது, அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயும், கறிவேப்பிலையும் போட்டு மூடி வைக்க வேண்டும்.
* வெண்ணெய் காய்ச்சிய வாணலியை தேய்க்காமல், அதில் உருளையை வதக்கினால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
– ஆர்.தஸ்மியா, கிருஷ்ணகிரி.
* இனிப்பு ேசாமாஸ் செய்யும்போது பூரணத்தில் சிறிது பால் பவுடர் கலந்து செய்தால் அருமையான சுவை கிடைக்கும்.
* ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பாலில் வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.
* ஓட்ஸ் லட்டு பிடிக்கும்போது சர்க்கரைக்கு பதில் தேன் கலந்தால் அருமையாக இருக்கும்.
– கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.
* வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து சேர்த்தால் பக்கோடா மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.
* சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
– பா.கவிதா, சிதம்பரம்.
* வத்தக்குழம்பில் கார்ன் ஃபிளவர் மாவைக் கரைத்து சேர்த்தால் சுவை சற்று தூக்கலாக இருக்கும்.
* வத்தக்குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் தேங்காய்ப்பால் சேர்த்தால் சரியாகிவிடும்.
* நெய்க்கு பதில் வெண்ணை சேர்த்து கிரேவி செய்தால், மணமும், சுவையும் அபாரமாக இருக்கும்.
* அடைக்கு பருப்புடன் சிறிது ஜவ்வரிசி, கோதுமையை ஊற வைத்துச் சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
– ேக.எல்.புனிதவதி, கோவை.
வேர்க்கடலை பருப்பு கறி
தேவையானவை:
பச்சை வேர்க்கடலை – ¼ கிலோ,
தக்காளி, பெரிய வெங்காயம் – தலா 1,
கேரட் துருவல், மாங்காய் துருவல், வெள்ளரி துருவல் – தலா 1 டேபிள்ஸ்பூன்,
மல்லி, புதினா – சிறிதளவு,
மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் – தலா ½ டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் தேவைக்கு.
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு.
செய்முறை: பச்சை வேர்க்கடலையை உடைத்து பருப்புகளை தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கேரட், மாங்காய், வெள்ளரி துருவல்களைச் சேர்த்து வதக்கி வேர்க்கடலை பருப்புகளைச் சேர்த்து உப்பு, நீர் சேர்த்து கொதிக்க விடவும். விரும்பினால் ஒரு பச்சை மிளகாயை கீறிப் போடவும்.
(வேர்க்கடலை பருப்புகளை உப்பு, நீர் சேர்த்து தனியாக வேகவிட்டு, வெந்த பருப்புகளை நீர் வடித்தும் சேர்க்கலாம்). மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்த்து மல்லி, புதினா போட்டு கடலைப்பருப்புகள் வெந்ததும் தேங்காய் துருவலை அரைத்து சேர்த்து நீர் வற்றும் வரை கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும். புரதமும், நார்ச்சத்தும் நிரம்பிய இந்தக் கறி சுவை மிகுந்தது. மதிய உணவோடும், கலந்த சாதங்களோடும் உண்ண ஏற்றது.
– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.