நன்றி குங்குமம் டாக்டர்
பெண்கள் எப்போதுமே தன்னை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால்.. சரும பராமரிப்பிற்கு காட்டும் அக்கறையை உடலில் உள்ள மற்ற பாகங்களுக்குக் காட்டுவதில்லை. குறிப்பாக கால்களைப் பாதுகாக்க அவர்கள் எப்போதும் நினைப்பதில்லை. ஆனால், அழகு எனும்போது உச்சி முதல் பாதம்வரை
ஆரோக்கியமாக இருப்பதே ஆகும்.
அந்தவகையில், பாதங்களை அழகுப்படுத்துவது என்பது வெறும் ஆடம்பரத்திற்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் தசைகள் இறுக்கம் பெற்று நலமுடன் வாழ்வதற்கு வழிவகுக்கிறது. மேலும் கால்களில் ஆணி, பூஞ்சை தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்க உதவியாக உள்ளது. அதற்கு பெடிக்யூர் பெரிதும் உதவுகிறது. இதற்காக அழகு நிலையங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீடுகளிலேயே நாம் பெடிக்யூர் செய்து கொள்ள முடியும். எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்:
பெடிக்யூர் செய்யும் முறை
பெடிக்யூர் செய்வதற்கு முன்னதாக நக வெட்டி, உப்பு, நெயில் பாலிஷ் ரிமூவர், பிரஷ், வெதுவெதுப்பான தண்ணீர், காட்டன் துணி போன்றவற்றை முதலில் தயாராக வைத்துக் கொள்ளவும். பின்னர், கால்களில் நீளமாக வளர்ந்துள்ள நகங்களை வெட்டிக் கொள்ளவும்.நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் ஏற்கனவே நகங்களில் போட்டுள்ள நெயில் பாலிஷை அகற்றிக் கொண்டு, நகங்களை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்ச்சவும். தண்ணீர் ஓரளவிற்கு சூடானவுடன் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.இதையடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் காய்ச்சிய தண்ணீரை ஊற்றி கணுக்கால் வரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் கலந்து கொள்ளவும். இதனுடன் ஷாம்பு, தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா போன்றவற்றைக் கலக்கவும்.
எலுமிச்சை தோலைக் கொண்டு கால் விரல்களின் இடுக்குகள் மற்றும் பாதங்களில் நன்கு தேய்க்க வேண்டும். பின்னர் முன்னதாக கலந்து வைத்துள்ள தண்ணீருக்குள் கால்களை வைத்து மசாஜ் செய்யவும். பின்னர் காட்டன் துணியைக் கொண்டு கால்களை ஈரமில்லாமல் துடைத்தெடுக்கவும். இதையடுத்து மாய்ஸ்சரைகளைப் பயன்படுத்தவும்.
மற்றொரு செய்முறை:
தேவையான பொருட்கள்: பால் 4 கப், பேக்கிங் சோடா 3 டேபிள் ஸ்பூன். முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிதளவு தண்ணீர் கலந்து வெதுவெதுப்பான நிலையில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.பாதங்களை வைக்கக்கூடிய அளவில் ஒரு டப் எடுத்துக்கொள்ளவும். கணுக்கால் மூழ்கும் அளவுக்கு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பவும். அதில் சிறிது உப்பு சேர்க்கவும். நீங்கள் விரும்பும் எசன்ஷியல் ஆயில் சில துளிகள் சேர்க்கலாம். பாதங்களை இந்த தண்ணீரில் 15-20 நிமிடங்கள் வரை ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும்.
பின்பு பாதங்களை ஊற வைக்கும் வகையிலான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அந்த பாலுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அதில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப்பர் கொண்டு பாதங்களை தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.இறுதியில் துணியால் பாதங்களை துடைத்துவிட்டு, பாதங்களுக்கு எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பாதங்களில் வெடிப்புக்கள், வறட்சி போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு, பாதங்களின் அழகும், மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.
பெடிக்யூர் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
உடல் சுத்தமாக இருந்தால் நோய் எதுவும் அண்டாது என்பதால் எப்போதும் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். பாதங்களுக்கு கொடுக்கும் சிகிச்சை முறைகள் வெறும் அழகிற்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.சூடான தண்ணீரில் கால்களை உள்ளே வைக்கும் போது கால்களில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்குகிறது.
இதனால் குதிக்கால் வெடிப்பு, வறட்சி மற்றும் வெண்மையான தோல் போன்ற பிரச்சனை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் பாதங்களை அழகாக்குவது மட்டுமல்ல, கால்களுக்கு மசாஜ் கொடுக்கும் போது நல்ல ரிலாக்ஸான அனுபவத்தை நாம் பெறமுடியும்.வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்யும் செயலான பெடிக்யூரை செய்து வந்தால், பாதங்களில் உள்ள அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.
தொகுப்பு: ரிஷி