தமிழகத்தில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில், தென்னை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில், தென்னையில் உள்ள தேங்காய் மட்டையிலிருந்து பிரித்து எடுக்கப்படும் நார் மற்றும் நார் கழிவுகளின் உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. இப்படி, தேங்காய் மட்டையிலிருந்து நாரை பிரித்தெடுக்க பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட நார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் நார் மற்றும் நார் கழிவுகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வெள்ளை மற்றும் பிரவுன் கலரில் இரண்டு தரத்துடன் கூடிய நார் உற்பத்திக்கு பிறகு, தீவைத்து எரிக்க ஒதுக்கிவைக்கப்படும் நார் கழிவு துகளின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் விவசாய பணிகளுக்கு நார் கழிவுகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், காய்கறி விளைச்சல் அதிகரிக்க செய்யவும் நார் கழிவு பயன்படுத்தப்படுகிறது. இந்த நார் கழிவு, கட்டிகளாக உருமாற்றப்பட்டு, வெளிநாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஏற்றுமதி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜரூராக நடந்தது. இத்தொழிலில், பொள்ளாச்சி பகுதி சிறந்து விளங்கியது. அதிலும், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உற்பத்தியாகும் தென்னை நார்களுக்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி ஏற்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கொரியா, இங்கிலாந்து, சீனா, துபாய், அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அதிகளவில் நார் கட்டி (காயிர் பிர்த்) ஏற்றுமதியானது. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.1,200 கோடி அளவுக்கு தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பொள்ளாச்சி பகுதியில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் கால்பதித்தது. அதன்பின் சில வெளிநாட்டு நிறுவனங்களும் நார் தொழிலில் முதல்டு செய்து கால்பதிக்க ஆர்வம் காட்டின. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 2018ம் ஆண்டில் ஒன்றிய அரசு விதித்த 5 சதவீத ஜிஎஸ்டி வரி, இத்தொழில் மீது பேரிடியாக விழுந்தது.
அதாவது, நார் உற்பத்திக்கு தளவாட பொருட்கள் வாங்க வழங்கப்பட்டு வந்த 25 சதவீதம் மானியம் ரத்து செய்யப்பட்டது. நார் ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டு வந்த 2 சதவீதம் மானியமும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு, இத்தொழில் தலைகீழாக மாறிவிட்டது. கிடைத்த லாபம் முழுவதையும் வரியாக செலுத்திவிட்டு, மேற்கொண்டு தொழில் செய்ய முடியாமல், இத்தொழில்முனைவோர் தவித்தனர். குறிப்பாக, ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு சுமார் 30 சதவீத தென்னை நார் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இதனால், முன்பு ‘களை’ கட்டிய இத்தொழில், தற்போது ‘டல்’ அடிக்கிறது. பல ஆயிரம் விவசாய தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு ஆளாக்கப்பட்டு விட்டனர். இத்தொழிலை விட்டு, மாற்று துறைக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
இதுகுறித்து, பொள்ளாச்சி பகுதி தென்னை நார் உற்பத்தியாளர் அன்சார் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு உற்பத்தியாகும் தென்னை நார் மற்றும் நார் கழிவுகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றப்பட்டு, சுமார் 50க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. முன்பு, நார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு குறிப்பிட்ட அளவு மானியம் வழங்கப்பட்டதால், குறு, சிறு மற்றும் நடுத்தர நார் தொழிற்சாலைகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. ஆனால், ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்த பிறகு, ஒன்றிய அரசின் மானியம் ரத்தாகிவிட்டது.
இதனால், கடந்த 5 ஆண்டுகளாக இத்தொழில் பெருத்த நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது. இத்துறையை நம்பியுள்ள தொழில்முனைவோர் மற்றும் ெதாழிலாளர்களும் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்பு ஒரு கிலோ தென்னை நார் ரூ.10 முதல் ரூ.12 ஆக இருந்துள்ளது. அப்போது சுமார் 80 சதவீத நார் மற்றும் நார் கழிவுகள், எந்தவித தடையும் இன்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு பிறகு நார் மற்றும் நார் கழிவுகளின் விலை அதிகரிக்க துவங்கியது. ஒரு கிலோ ரூ.28 வரை உயர்ந்தது.
இதன்காரணமாக, வெளிநாட்டு ஆர்டர்கள் குறைந்தன. ஏற்றுமதியும் சரிய துவங்கியது. நார் உற்பத்தியும் குறைந்தது. தற்போது ஒரு கிலோ தென்னை நார் ரூ.12 முதல் ரூ.14 வரை விற்பனையாகிறது. ஏற்றுமதி குறைவு, உற்பத்தி இழப்பு, வருவாய் இழப்பு என அடுத்தடுத்து சங்கிலித்தொடர் என இத்துறையினர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதை நம்பியுள்ள தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில், நார் உற்பத்திக்கான கூலித்தொகை கட்டுப்படியாகாமல் இருந்தாலும், நார் தேக்கம் அடையக்கூடாது என்பதற்காக, குறைவான விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், ஜிஎஸ்டி வரிதான். தென்னை நாருக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வதுடன், முன்புபோல் மானியம் வழங்கினால், இத்தொழில் மீண்டும் பழைய நடைமுறைக்கு திரும்பும். இல்லையேல், இத்தொழிலின் நிலைமை இன்னும் மோசம் அடையும். இவ்வாறு அன்சார் கூறினார். கடந்த 2018ம் ஆண்டில் ஒன்றிய அரசு விதித்த 5 சதவீத ஜிஎஸ்டி வரி, நார் தொழில் மீது பேரிடியாக விழுந்தது. நார் உற்பத்திக்கு தளவாட பொருட்கள் வாங்க வழங்கப்பட்டு வந்த 25% மானியமும், நார் ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டு வந்த 2% மானியமும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு, இத்தொழில் தலைகீழாக மாறிவிட்டது.
* பூமி பூஜையுடன் நின்றுபோன ஆய்வுக்கூடம்
பொள்ளாச்சி பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு நார் ஏற்றுமதியை அதிகரிக்க செய்யும் வகையில், மண்டல அலுவலகம் அமைக்க, திப்பம்பட்டி அருகே சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசின் கயிறு வாரியம் சார்பில் இடம் வாங்கப்பட்டது. அதில், தென்னை நார் ஏற்றுமதி முனையம் மற்றும் தென்னை நார் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தென்னை நார் பரிசோதனை செய்ய, ஆய்வுக்கூடம் சுமார் ஒன்றரை ஏக்கரில் அமைக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை கடந்த 5 ஆண்டுக்கு முன்பு நடைபெற்றது. ஆனால், இதுவரை ஆய்வுக்கூடம் கட்டப்படவில்லை. அபிவிருத்தி பணிகள் எதுவும் நடக்கவில்லை. வெறும் பூமி பூஜையுடன் அப்படியே நின்றுபோனது.