கவுகாத்தி: முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு ரூ.10 கோடி மானியம் அளித்த விவகாரம் தொடர்பாக அசாம் சட்டபேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரிங்கு புயான் சர்மா நடத்தி வரும் நிறுவனத்துக்கு ஒன்றிய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் ரூ.10 கோடி மானியம் வழங்கியதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை காங்கிரஸ் எம்பி தருண் கோகாய் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தனது மனைவி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு மானியம் எதுவும் வழங்கப்படவில்லை என ஹிமந்தா மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், அசாம் பேரவையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நேற்று நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்க சபாநாயகர் பிஸ்வஜித் மறுத்து விட்டார். இதைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் பதாகைகளுடன் அவையின் மைய பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர். இதில் அமளி ஏற்பட்டதையடுத்து 10 நிமிடங்கள் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். சபாநாயகர் அனுமதி அளிக்காததையடுத்து காங்கிரஸ்,ஏஐயுடிஎப், மார்க்சிஸ்ட், சுயேச்சை எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.