புதுடெல்லி: தேசிய நீதித்துறை தரவு அமைப்புக்குள் உச்ச நீதிமன்றத்தின் விவரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று அறிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் அலுவல் நேரம் நேற்று தொடங்கியவுடன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில்,‘‘உச்ச நீதிமன்றம், வழக்கு விவரங்கள் உட்பட அனைத்தும் தேசிய நீதித்துறை தரவுகளின் அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றது. எத்தனை வழக்குகள் அரசியல் சாசன அமர்வின் கீழ் உள்ளது. அதில் மூன்று நீதிபதிகள், ஐந்து நீதிபதிகள், ஏழு நீதிபதிகள் மற்றும் ஒன்பது நீதிபதிகள் ஆகிய அமர்வுகளில் எத்தனை வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. எத்தனை நிலுவையில் உள்ளது ஆகிய அனைத்து விவரங்களையும் இனிமேல் வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் இந்த செயல்பாடானது முக்கியமான தகவல்களை கொடுக்கும் விதமாக உருவாக்கப்பட்ட தனித்துவமான மற்றும் தகவல் தரும் இணையதளமாகும். வெளிப்படத் தன்மையை ஊக்குவிக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் நிகழ்நேர அடிப்படையில் தரவுகள் அனைத்தும் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும். இந்த இணையதளத்தை திறந்தவுடன் வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்களும் கிடைத்து விடும். இருப்பினும் இதில் பல பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்னதாக தொடரப்பட்ட வழக்குகள் நூற்றுக்கணக்கில் இருக்கும் நிலையில், அவற்றை விரைந்து விசாரித்து முடிக்கும் விதமாக உடனடியாக புதிய அமர்வுகள் உருவாக்கப்படும். குறிப்பாக இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் உச்ச நீதிமன்றத்தால் 5,500 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதே நேரத்தில் 3,115 புதிய வழக்குகளும் பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.