Monday, April 15, 2024
Home » ஆழ்வார்கள் கண்ட கருட சேவை

ஆழ்வார்கள் கண்ட கருட சேவை

by Lavanya

வைணவ மரபிலே கருட சேவைக்கு தனி ஏற்றமுண்டு. வேதத்தின் மூலம், வேதம் காட்டும் பரம் பொருளை தரிசிப்பதே, கருட சேவையின் உட்பொருள்.

கருடன் வேதம்

பகவான் ஸ்ரீமன் நாராயணன் – வேதம் காட்டும் பரம்பொருள். வேதம் தமிழ் செய்த அத்தனை ஆழ்வார்களும், கருட தரிசனத்தையும், கருடன்மீது ஆரோகணித்து வரும் கருட சேவையையும், பாடாமல் இருந்ததேயில்லை. கருடன் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருடசேவை எனப்படும்.அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதை பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

பெரியாழ்வார் கண்ட கருடசேவை

வேண்டிய வேதங்கள் ஓதி பாண்டியன் அவையில் சந்தேகம் தீர்த்த பெரியாழ்வாருக்கு, பகவான் கருட வாகனனாய்க் காட்சியளித்தான். அந்த கருடசேவை காட்சியின் மாட்சியில் தான், பெரியாழ்வார், ‘‘எம்பெருமானே! கருடனின் மீது ஆரோகணித்து வந்து, எனக்குக் காட்சி தந்த, உன்
கருணையே கருணை! என்னை நீ காப்பாற்ற முடிவெடுத்த பிறகு, என்னுடைய பிறவித் துன்பம் நீங்கிவிட்டது.’’ ‘‘பறவை ஏறும் பரம புருடா நீ என்னை கைக்கொண்டபின் பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதம் ஆகின்றது’’ என்று பாசுரம் இடுகிறார். தன் பிரேம பாவனையால், கருடனை விழிப்போடு பெருமாள் பள்ளியறையைப் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார். இன்றளவும் திருக்கோயில்களிலும் திருமாளிகைகளிலும் இரவு நடை சாற்றும் போது இந்தப் பாசுரம் ஓதப்படுகிறது.

“உறகல் உறகல் உறகல் ஒண்சுடராழியே! சங்கே!
அறவெறி நாந்தகவாளே! அழகிய சார்ங்கமே! தண்டே!
இறவுபடாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்!
பறவை அரையா! உறகல் பள்ளியறைக் குறிக் கொண்மின்’’.

ஆண்டாள் கண்ட கருடசேவை

ஆண்டாளின் திருத்தகப்பனார் பெரியாழ்வார், கருடனின் அம்சம். இன்றும் வில்லிபுத்தூரில் பெருமாளோடு ஏக ஆசனத்தில் இருப்பவர். ஆண்டாளின் மனத்திரையில் கண்ணன் கருடன் மீது வரும் காட்சி ஓட அந்த காட்சியை அவள் வடநாடு திவ்ய தேசமான
விருந்தாவனத்தில் காண்கிறாள்.

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே’’

கருடனின் முகத்தில் அருள் ததும்பும். கம்பீரம் சுடர்விடும். தனது இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர். சிறகுகளைவிட உடல் பருத்திருக்கும். அழகான குண்டலங்களைக் காதுகளில் அணிந்தவர். வளைந்த புருவங்கள், உருண்டைக் கண்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். மூன்று கிளைகளாகப் பிரிந்திருக்கும் ஸ்ரீ கருடனுடைய இறக்கைகள், மூன்று வேதங்களாகக் கருதப்படுகின்றன. ஆண்டாள், இந்தக் கருடன் மீது ஆரோகணித்து வரும் பெருமானை விருந்தாவனத்தில் கண்டேன் என்று
பாடுகிறாள்.

திருமாலும் கருடனும் ஒருவரே

திருமாலும் கருடனும் ஒருவரே என்று மகாபாரத்திலுள்ள “அனுசாசன பர்வதத்தில்’’ காணப்படுகிறது. காரணம், வேதம் கருடன். வேதத்தின் பொருள் திருமால். திருவாய்மொழியைப் படிப்பதும், கருட சேவை காண்பதும் ஒன்றுதான். திருவாய்மொழி வேதம். (அதாவது கருடன்). திருவாய்மொழியின் பொருள். (திருமால்). கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்ய பிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு. திருமாலைப்போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி, பிராகாம்பயம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக
கருடன் விளங்குகிறார்.ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார். வேத ஸ்வரூபியான கருடன், திருமாலுக்கு வாகனமாக இருப்பதன் மூலம், வேதமே இறைவனை நம்மிடம் அழைத்து வரும் கருவியாக இருக்கிறது என்ற தத்துவத்தை நாம் உணர முடிகிறது.

நம்மாழ்வார் கண்ட கருடசேவை

அடியவர்களின் அப(பா)யக் குரல் கேட்கும் நேரங்களில், அவர்களுக்கு அபயம் அளிக்கத் திருமாலை அழைத்து வந்து சேர்ப்பவர் கருடன். நம்மாழ்வார் இந்த கருட சேவை குறித்துப் பாசுரமிடுகிறார்.

‘‘ஓடும் புள் ஏறி, சூடும் தண் துழாய்,
நீடு நின்றவை ஆடும்; அம்மானே.’’

கருடனை ஓடும் புள் என்று அழைக்கிறார் நம்மாழ்வார்.
‘‘கருடன் மீது துளசி மாலை அணிந்து தோன்றும் திருமாலே எனக்கு தலைவன்’’ என்று போற்றும் நம்மாழ்வார், ஒரு பாசுரத்தில், கஜேந்திரன் என்கிற யானையைக் காப்பாற்ற கருட வாகனத்தின் மேல் ஏறிவந்த வேகத்தை வியக்கிறார்.

``மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும் பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?’’

இந்தப் பாசுரத்தில் நம்மாழ்வார் கருட சேவையின் சிறப்பு பற்றிய அற்புதமான ஒரு தகவலைச் சொல்லுகின்றார்.எம்பெருமான் கருடன் மீது ஆரோ கணித்து வருவது ஏன் என்றால், தன்னுடைய பரத்துவத்தைக் காட்டுவதற்காக. வெவ்வேறு சிறப்புகளைக் காட்டுவதற்காக பல்வேறு வாகனங்களில் வந்தாலும், தான் பரமாத்மா என்பதை உணர்த்து முகத்தான், எம்பெருமான் கருடன்மீது ஆரோகித்து வருகின்றான். இது முதல் செய்தி.இரண்டாவதாக, ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கருணையின் உச்சத்தில், எம்பெருமான் கருடன் மீது விரைவாக வருகின்றான். பறவைகளில் மிக வேகமாகப் பறக்கக் கூடியது கருடன். அதனால், கருடன் மீது ஆரோகணித்து வருகிறான் என்பது ஒரு தோற்றமாக இருந்தாலும், அந்தக் கருடனை வேகமாகச் செலுத்துபவர் பெருமாள் என்பதும் இந்த கருடசேவை சூட்சுமத்தின் உட்பொருளாகும். இதை பராசரபட்டரும் ஓரிடத்தில், ‘‘ரங்கநாதனே! நீ, இந்த கஜேந்திரன் என்ற யானையைக் காப்பாற்ற ஓடி வந்தாயே, அதற்காக மட்டுமல்ல, என்னுடைய நமஸ்காரம், நீ காப்பாற்ற ஓடி வந்த விரைவு, வேகம் இருக்கிறதே, அது அடியேனை வியப்படைய வைத்தது. அந்த வேகத்திற்கு என்னுடைய நமஸ்காரத்தை சொல்லுகின்றேன்’’ என்று பாடுகின்றார்.நம்மாழ்வார் சக்கரத்தைத் தாங்கி, கருடன் மீது ஆரோகணித்து வந்த கருட சேவையை போற்றிப் பாடும் பாசுரத்தில் சக்கரத்தை இருந்த இடத்திலே இருந்து பிரயோகம் செய்து யானையின் துன்பத்தை தீர்த்து இருக்கலாமே, இதற்கு எம்பெருமான் கருடன் மீது ஏறி நேரில் வர வேண்டுமா என்கிற ஒரு கேள்வியும் எழுகிறது. கஜேந்திரன் என்ற யானையின் உயிரை மட்டுமே காப்பாற்றுவதாக இருந்தால், இருந்த இடத்தில் இருந்து கொண்டே எம்பெருமான் அதை தனது சங்கல்பத்தால் சாதித்திருக்க முடியும். ஆனால், இந்த கருட சேவை காட்சியை பார்க்க வேண்டும் என்று அந்த யானை விரும்பி, தினசரி மலர் இட்டு பூஜை செய்தது. அதனால், அந்த தொழும் காதல் களிறு என்ற பதத்தை இட்டு நம்மாழ்வார் இந்தப் பாசுரத்தில் பாடுகிறார். தானே நேரில் கருடசேவை காட்சி அளித்தால்தான், கஜேந்திரன் என்ற யானையின் துயரம் தீரும்; உயிர் தப்பித்ததால் மட்டுமே தீர்ந்துவிடாது என்பதை குறிப்பிடத்தான், தொழுங் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே! என்று அந்த செய்தியை இதில் சொல்லுகின்றார். ஒவ்வொரு உயிரும் இந்த கருட சேவையைக் காணுகின்றபொழுது ஆன்ம சந்தோஷம் அடைகிறது என்பதாலேயே, எல்லா கோயில்களிலும் பிரம்மோற்சவத்தில் கருட சேவை நடக்கிறது.

தொண்டரடிப் பொடியாழ்வார் கண்ட கருடசேவை

தொண்டரடிப் பொடியாழ்வார் தமது திருமாலைப் பாசுரத்தில், ‘‘எத்தனையோ தேவர்கள் இந்த கருட சேவையை காண வேண்டும் என்று காத்திருக்க, தன்னை நம்பி, தனக்கு பூஜை செய்ய வேண்டும் என்ற ஆவலோடு ஒரு தாமரை மலரைப் பறித்து வைத்து, பூஜைக்கு எந்த விதமான குந்தகமும் வந்துவிடக்கூடாது என்று தவித்து தன்னை அழைத்த, கஜேந்திரனைக் காப்பாற்றுவதற்காக ஓடி வந்த எம்பெருமான் அழகாக கருட வாகனத்தில் காட்சி தருகின்றான்.’’‘‘அவன் தருகிற செல்வம் உயர்ந்த செல்வம். மோட்சம் உட்பட நீங்கள் விரும்புகின்ற அவ்வளவு செல்வத்தையும் அவன் தரக் காத்திருக்கின்ற பொழுது, நீங்கள் வேறு செல்வங்களை நிலையற்ற செல்வங்களை ஏன் தேடுகின்றீர்கள் என்று கேட்கிறார். இந்த கருடசேவை காணுகின்ற ஒவ்வொருவருக்கும் அவன் நீங்காத செல்வத்தை தரக் காத்திருக்கிறான். கருட சேவை தரிசிப்பது என்பது எவ்வளவு உயர்வானது என்பதை இந்த பாசுரத்தில் தொண்டரடிப்பொடியாழ்வார் உணர்த்துகிறார்.

“நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பி மீர்காள். கெருடவா கனனும் நிற்க சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த்திருக்கின் றீரே’’.

குலசேகர ஆழ்வார் கண்ட கருடசேவை

குலசேகர ஆழ்வார் திருவரங்க நாதனைக் காணுகின்ற காட்சிக்காகத் தவித்தவர். அவர், நாம் இன்று சாதாரண கண்களால் காணக் கூடிய அந்தக் கருவறை காட்சியை மட்டும் காண விரும்பவில்லை.
‘‘திருவரங்கத்தில் அரவணையில் பள்ளி கொள்ளும் திருமாலே! நீ எனக்கு எப்படி காட்சி தரவேண்டும் தெரியுமா? உன்னுடைய பஞ்ச ஆயுதங்களும் அங்கு இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல உன்னுடைய அருகிலேயே காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லுகின்ற வெற்றியைத் தவிர வேறு அறியாத அந்தக் கருடனும் உன்னை சூழ்ந்திருக்க வேண்டும். அந்த காட்சியை நான் திருவரங்கத்தில் காணவேண்டும்’’ என்கிறார். அந்தக் காட்சிக்கான பாடல் இது.

“கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்
கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி
வல்லினையேன் என்றுகொலோ வாழும் நாளே’

திருமங்கையாழ்வார் கண்ட கருடசேவை

ஆழ்வார்களில் இளைய ஆழ்வார் திருமங்கையாழ்வார். பல ஊர்களுக்கும் சென்று அங்கு இருக்கக்கூடிய உற்சவங்களில் கலந்து கொண்டு, கருட சேவையைக் குறித்தும், தன்னுடைய பிரபந்தங்களில் பாடும் வழக்கமுடையவர். புகழ் பெற்ற திருநாங்கூர் 11 கருட சேவை கலியன் ஒளி மாலையின் எதிர்விளைவாகவே அத்தனை எம்பெருமான்களும் தங்க கருடன் மேலேறி, தை அமாவாசைக்கு மறுநாள், திருமங்கை ஆழ்வார் அன்ன வாகனத்தில் முன் செல்ல, அவரோடும் அவர் தமிழோடும் வீதிவலம் வருகின்றார்கள். ஆழ்வார் பற்பல தலங்களில் கருட சேவை பற்றி பாடுகிறார். கருடனுக்கு பெரிய திருவடி என்று பெயர். அனுமனுக்கு திருவடி என்று பெயர். (அனுமனை சிறிய திருவடி சிலர் தவறாகக் குறிப்பிட்டு எழுவது வைணவ மரபின்படி தவறு). அந்த பெரிய திருவடிக்குரிய சிறப்பான தலம் திருநறையூர் என்கிற திருத்தலம். (நாச்சியார் கோயில்) திருநறையூர் நம்பி ஆழ்வாருக்கு ஆசார்யன். இத்தலம் கும்பகோணத்திற்கு அருகில் இருக்கிறது. இத்தலத்தில் கல்கருட சேவை மிகவும் சிறப்பானது. அங்கே கஜேந்திரனைக் காக்க கருடன் மீது ஏறி வந்த காட்சியை,

``தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனைச் செங்கமலக்
கண்ணானைநாவாயு ளானை நறையூரில் கண்டேனே’’

– என்று பாடுகின்றார்.
அதைப்போலவே, குடந்தையில் இருக்கக்கூடிய ஆராவமும் ஆழ்வாருக்காக திருவெழுகூற்றிருக்கை என்ற பிரபந்தத்தை ரத பந்தமாக இயற்றுகின்றார். அதிலே, கஜேந்திரனைக் காப்பதற்கு பகவான் புறப்பட்டுவிட்டார் என்கிற செய்தியானது, கருடனின் வேகத்தினால் திசைகள் நடுங்கியபோது எல்லோரும் அறிந்தார்கள் என்கிறார். யானையின் அபயக்குரலை எல்லாரும் கேட்டார்கள். அதை மற்ற தேவர்களால் காப்பாற்ற முடியாது என்ற நிலையையும் கண்டார்கள். அதனை காப்பாற்றுவதற்காக எம்பெருமான் கருடபகவான் மீது புறப்பட்டு வந்த ஒலியையும் கண்டார்கள் என்பதுதான் இந்தப் பாடலின் சிறப்பு. இன்னும் அந்த முதலை பிழைத்தது என்று நிம்மதி கொண்டார்கள் என்கிற புதிய செய்தியைச் சொல்கிறார். ஒரு வலிமைமிக்கவனிடம் எளியவன் மாட்டிக்கொண்டான். நம்மால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அப்போது தூரத்தில் காவல்துறை வாகனம் வரும் ஒலி கேட்கிறது. (அதற்காகத்தானே அந்த வாகனத்தில் சைரன்) இனி நமக்கு நிம்மதி தானே. அதைப்போல கருடன் வரும் வேகத்தை திருமங்கை ஆழ்வார் பதிவு செய்கிறார்.

“ஒருமுறை ஈரடி மூவுலகு அளந்தனை
நாற்றிசை நடுங்க – அஞ்சிறைப்பறவை
ஏறிநால் வாய் மும்மதத் திரு செவி
ஒரு தனி வேழத் தரந்தையை
ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை’’

திவ்யதேசங்களில் மிகச் சிறந்த தேசமான திருச்சித்திரக்கூடத்தின் உற்சவ மூர்த்திக்கு சித்திரக்கூடத்து உள்ளான் என்று பெயர் தருகின்றார் திருமங்கையாழ்வார். அங்கே பிரம்மோற்சவத்தில் கருடசேவைக் காட்சியை தன்னுடைய பெரிய திருமொழியில் பின்வருமாறு பதிவு செய்கின்றார்.

``எய்யச் சிதைந்த திலங்கை மலங்க வருமழை காப்பான்,
உய்யப் பருவரை தாங்கி ஆநிரை காத்தானென் றேத்தி,
வையத் தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போலே,
தெய்வப்புள் ளேறி வருவான் சித்திர கூடத்துள் ளானே.

திருமழிசை ஆழ்வார் கண்ட கருடசேவை

திருமழிசை ஆழ்வாரும் தம்முடைய நான்முகன் திருவந்தாதியில் கருடதரிசனப் ெபருமாளின் தரிசனப் பலனை சொல்கிறார். அந்தப் பெருமானுக்கு கஜேந்திர வரதன் என்று பெயர். இந்த பெயரிலேயே கருட தரிசனம் வந்து விடுகிறதல்லவா. இனி என்ன பலன் என்று பார்ப்போம்.

“கூற்றமும் சாரா கொடுவினையும் சாராதீ
மாற்றமும் சாரா வகை அறிந்தேன்
ஆற்றங் கரைக்கிடக்கும் கண்ணன் கடல்
கிடக்கும் மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு’’

கருடன், எம்பெருமானைத் தரிசித்தால் நமக்கு எமபயம் இல்லை. பாவங்களும் இல்லை என்று உறுதியளிக்கிறார். ஆழ்வார்களும் உணர்ந்து தரிசித்த அந்த கருட சேவையை நாமும் ஆழ்வார்கள் பாசுரம் பாடி சேவிப்போமே!

அனந்தபத்மநாபன்

You may also like

Leave a Comment

3 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi