Thursday, May 16, 2024
Home » விநாயகர் சிலைகளை கரைப்பது எப்படி?: வழிமுறைகள் வெளியீடு

விநாயகர் சிலைகளை கரைப்பது எப்படி?: வழிமுறைகள் வெளியீடு

by Suresh

சென்னை: வரும் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டப்பட உள்ளதை தொடர்ந்து விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. கடல், ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

* களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
* சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
* ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தலை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
* சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மட்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
* சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
* விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயக சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

ten − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi