டிசம்பர் என்றாலே நமக்கும் மழை மாதம் என்றாகிவிட்டது. இந்த சமயத்தில் ஒரு டீ குடித்தால் தேவலாம் போல் இருக்கு என்பதே பலரது எண்ணமாக இருக்கும். மழைக்கும் டீக்கும் அவ்வளவு பாந்தம். சென்னையில் சில இடங்களில் சில பிரத்யேக டீ வகைகள் கிடைக்கின்றன. இந்த மழைக்காலத்தில் இது நிச்சயம் பயனுள்ள கெய்டன்சாக இருக்கும்!
கிரேப் லெமன் டீ
டீயில் பல வகையான ஃப்ளேவர்கள் இருக்கின்றன. காரமாக குடிக்க வேண்டுமென்றால் மசாலா டீ, சாக்லேட் ஃப்ளேவரில் குடிக்க வேண்டுமென்றால் சாக்லேட் டீ என பல வகைகளில் டீ அவதாரம் எடுத்துவிட்டது. இப்போதெல்லாம் பழங்களிலும் கூட டீ போடத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் இப்போது ட்ரண்டாக இருக்கும் டீ தான் ‘கிரேப் லெமன் டீ’. குரோம்பேட்டையில் உள்ள ரிலாக்ஸ் கஃபேயில் லெமன் டீ எனக் கேட்டாலே புதினா, சீரகம், கிரேப் மற்றும் டிக்காசன் என சேர்த்து இந்த ஸ்பெஷல் டீயைக் கொடுக்கிறார்கள்.
பைனாப்பிள் லெமன் டீ
சென்னை அண்ணாசாலையில் மெட்ரோ சோன் என்கிற சிறிய டீக்கடை இருக்கிறது. அங்குதான் கிடைக்கிறது இந்த ‘பைன் ஆப்பிள் லெமன் டீ’. அதிகாலை மூன்று மணி வரை செயல்படுகிற இந்தக் கடைக்கு இரவிலும் டீ பிரியர்கள் வருகிறார்கள். பல இடங்களில் பல வகையான தேநீர்கள் கிடைத்தாலும் சில இடங்களில் குடித்த தேநீர்தான் மனதில் இருக்கும். அப்படி அனைவரும் விரும்பும்படியான சுவையில் தேநீர் கொடுப்பதால் சென்னை வாசிகள் பலர் இந்த கடையில் வட்ட மடிக்கிறார்கள்
ரோஸ் டீ
சென்னையில் பல இடங்களில் இந்த ரோஸ் டீ கிடைக்கும். ஆனால், அசல் சுவையில் கிடைக்கிறதா? எனக் கேட்டால் சந்தேகம்தான். அரும்பாக்கத்தில் இருக்கிற அனுபவா உணவகத்திற்கு மாலை நேரத்தில் சென்றால் விதவிதமான தேநீர்களோடு இந்த ரோஸ் டீயும் இருக்கும். குங்குமப்பூ மிதக்க தரமான ரோஸ்களில் இருந்து தயார் செய்யப்பட்ட தேநீராக இது கிடைக்கும். பார்ப்பதற்கு அழகான நிறத்திலும் குடிப்பதற்கு தனித்துவமான சுவையிலும் இருக்கும் இந்த ரோஸ் டீயை அனைவரும் குடித்து மகிழலாம்.