Friday, May 3, 2024
Home » மூர்க்கத்தனமானவர்கள் என்றாலும் குழந்தை மனம் கொண்டவர்கள்!

மூர்க்கத்தனமானவர்கள் என்றாலும் குழந்தை மனம் கொண்டவர்கள்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

கார்ப்பரேட் நிறுவனத்தில் கை நிறைய சம்பளம். கணவருக்கு சொந்தமா டிரான்ஸ்போர்ட் தொழில். அழகான ஒரு குழந்தை. பிரச்னை இல்லாத வாழ்க்கை. தற்போது தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு… முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் காங்கேயம் பசுக்களுக்கான பண்ணை ஒன்றை தன் கணவரின் உதவியுடன் அமைத்துள்ளார் திருநின்றவூரைச் சேர்ந்த சிந்துஜா.

‘‘நான் எம்.பில் முடிச்சிட்டு ஆரம்பத்தில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தேன். அதன் பிறகு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். பிடிச்ச வேலை என்றாலும் கொஞ்சம் பிரஷர் இருந்தது. அதனால் அதை ராஜினாமா செய்துவிட்டு வேற வேலை தேடலாம்னுதான் நினைச்சேன். என் கணவர் தினேஷ், எம்.பி.ஏ பட்டதாரியான இவர் வங்கியில் வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் அப்பா பார்த்து வந்த டிரான்ஸ்போர்ட் தொழிலை எடுத்து நடத்தி வருகிறார்.

இவருக்கு வயசான காலத்தில் ஒரு பண்ணை அமைத்து அங்கு செட்டிலாகணும்ன்னு விருப்பம். எனக்கு ஆரம்பத்தில் பண்ணை அமைக்க வேண்டும் என்ற விருப்பமில்லை. வேலைக்கு போனோமோ குடும்பத்தை பார்த்தோமான்னுதான் இருந்தேன். ஆனால் வேலையில் ஏற்பட்ட அதிக பளு தான் என் கவனத்தை பண்ணை அமைப்பதில் திசை திருப்பியது. இப்ப நாங்க எளிய முறையில் பண்ணை அமைத்து அங்கு காங்கேயம் மாடுகளை மட்டுமே கடந்த ஒன்பது மாதமாக வளர்த்து வருகிறோம்’’ என்ற சிந்துஜா நாட்டு மாடுகள் பல இருக்க காங்கேயம் தேர்வு செய்ய காரணம் பற்றி விவரித்தார்.

‘‘நாட்டு மாடுகளில் மொத்தமே தற்போது ஐந்து வகை தான் உள்ளது. காங்கேயம், பர்கூர், புலிக்குளம், தஞ்சாவூர் குட்டை, அப்புறம் இன்னொரு குட்டை வகை மாடு இருக்கு. கிர் வகை குஜராத் சேர்ந்தது. தார்ப்பார்க்கர், காங்ரெஜ் ராஜஸ்தான் ரகம். இவங்க ஒரு நாளைக்கு 15 லிட்டர் பால் தருவாங்க. ஆனால் காங்கேயம் இருக்கிற நாட்டு மாடுகளிலேயே கறவை ரொம்ப கம்மி. அதனால்தான் இந்த இனம் அழிஞ்சிட்டு வருது. ஆனால் நாட்டு மாடுகளிலேயே பெஸ்ட் ரகம். எல்லா சூழலிலும் வாழக்கூடியவை.

காட்டு மாடான இதனை நாட்டு மாடாக பராமரிக்கிறோம். என்னதான் நாட்டு மாடாக பராமரித்தாலும் இவர்களிடம் மூர்க்கத்தனம் பார்க்கலாம். ஆனால் பழகினால் குழந்தை போல் மென்மையானவர்கள். இந்த இனத்தை உருவாக்கியவர் ஸ்ரீமான் ராவ் பகதூர் நல்லத்தம்பி சர்க்கரை மன்றாடியார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள பழையக்கோட்டையில் காங்கேயம் மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரம் தோணும் நடைபெறும். இங்கு இந்த ரக மாடுகளை பராமரித்தும் வருகிறார்கள்’’ என்றவரை தொடர்ந்தார் சிந்துஜாவின் கணவரான தினேஷ்.

‘‘நாட்டு மாடுன்னு முடிவு செய்திட்டோம். ஆனால் எங்க இருவருக்குமே மாடுகள் பற்றிய போதிய அறிவு கிடையாது. ஆறு மாசம் எல்லா வேலையும் விட்டுவிட்டு மாடுகளைப் பற்றிய ஆய்வில் இறங்கினோம். பல இடங்களில் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களை போய் பார்த்தோம். அவங்க யாருமே காங்கேயம் பற்றி சொல்லவே இல்லை. கிர் மற்றும் காங்ரெஜ் போன்ற மாடு இனம் பற்றித்தான் சொன்னாங்க. அதற்கு முக்கிய காரணம் காங்கேயம் மாட்டினை பிசினசா செய்தா கஷ்டம். கறவை குறைவு, பராமரிப்பு அதிகம். இவங்க இரண்டு லிட்டர்தான் கொடுப்பாங்க. கிர் ரகங்கள் எட்டு லிட்டர் வரை கறப்பாங்க. அடுத்து கொஞ்சம் மூர்க்க குணம் கொண்டவங்க. நம்மை கிட்ட சேர்க்கமாட்டாங்க. ஆனால் பழகினா குழந்தையை விட மென்மையானவங்க. கூப்பிட்ட சொல்லுக்கு கட்டுப்படுவாங்க. எனக்கு அவங்க குணம் பிடிச்சிருந்தது. அதனால் அவங்கள எடுத்து வளர்க்கலாம்னு முடிவு செய்தேன்.

அந்த சமயத்தில்தான் பழையக்கோட்டை சந்தைப் பற்றி கேள்விப்பட்டேன். சிவக்குமார் என்பவர் அமெரிக்கா வேலையை விட்டுவிட்டு காங்கேயம் மாட்டிற்காக இங்கு வந்து ஒரு கோசாலை அமைத்து பராமரித்து வருகிறார். தமிழ்நாட்டில் அப்படி ஒரு சந்தையை நான் பார்த்தது இல்லை. வியாபாரிகளுக்கு அங்கு இடம் கிடையாது. விவசாயிகள்தான் மாடுகளை வாங்கவும் விற்கவும் முடியும். காங்கேயம் மாடுகளுக்கான பிரத்யேக சந்தை. முதலில் சிவக்குமாரிடம் காங்கேயம் வாங்குவது குறித்து பேசினோம்.

அவரோ சென்னையில் உள்ளவர்களுக்கு தரமாட்டோம்னு சொல்லிட்டார். காரணம், விருப்பப்பட்டு வாங்கி சென்று, பராமரிக்க முடியாமல் வெட்டுக்கு அனுப்பிவிடுவதால், இல்லைன்னு நிராகரிச்சிட்டார். ஆனால் நானும் சிந்துவும், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை கிளம்பி போயிடுவோம். சிவக்குமாரை சந்தித்து பேசுவோம். அங்க மாடுகளை பார்க்க அவ்வளவு ஆசையா இருக்கும். ஆனால் கிட்ட போக பயமா இருக்கும். முதலில் அதை தொடணும்னு ஆசைப்பட்டோம், அதன் பிறகு அதை வாங்க விரும்பினோம். எங்களின் ஆர்வத்தை பார்த்து சிவக்குமாரும் மாடு கொடுக்க முன் வந்தார். இப்ப சென்னையில் காங்கேயம் பசு மாடுகள் மற்றும் மயிலை காளை எங்களிடம் மட்டும்தான் இருக்குன்னு பெருமையா சொல்ல முடியும்’’ என்றார் தினேஷ்.

மாடுகளை வாங்க முடிவு செய்தவர்களுக்கு அதனுடன் பழகுவது பெரிய டாஸ்காக இருந்துள்ளது. அந்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்தார் சிந்துஜா. ‘‘மாடு வாங்கும் போது பசுவுடன் கன்றும் சேர்த்து தான் வரும். முதல்ல மாட்டை பிடிச்சு பார்க்க சொல்வாங்க. அப்பதான் அவை நம்மிடம் பழக ஆரம்பிக்கும். பார்க்க அழகாக இருந்தாலும். நாம கிட்ட போனா அவை திமிரும். பயந்தால் நம்மை கிட்ட நெருங்கவே விடாது. முதல் மாடு நல்ல பெரிசா இருந்தாலும், எங்களை தொட அனுமதிச்சது. இரண்டாவது கொஞ்சம் மூர்க்கத்தனமாகத்தான் இருந்தது. பழகவே விடல. இங்க வந்த பிறகு பிரச்னை வந்தா எப்படி சமாளிக்கிறது. அதனால் கோசாலையில் தங்கி மாடுகளிடம் பழகினோம்.

நான் முதலில் மாட்டின் கயிறை நன்றாக கட்ட பழகினேன். அடுத்து சாணி அள்ளுவது, பால் கறப்பது, சாப்பாடு கொடுக்கும் முறை எல்லாம் கற்றுக் கொண்டேன். அடுத்த டாஸ்க் பால் கறப்பது. மற்ற மாடுகள் போல் மடியில் பால் இருக்கும் வரை கறக்க விடமாட்டாங்க. முதலில் கன்றை பால் குடிக்க செய்து, அவர்கள் முன் கட்டணும். அப்பதான் இவர்களுக்கு இயற்கையில் பால் சுரக்கும். இல்லைன்னா திமிலை தடவி கொடுக்கணும்.

அப்படியும் சில நிமிஷம்தான் பால் கறக்க அனுமதி தருவாங்க. அதையும் மீறினால் இரண்டு பின்னங்காலையும் கொண்டு தாக்குவாங்க. அதற்கு அவர்களை கொம்பு வச்சு அடிச்சாலோ அல்லது திட்டினாலோ சுரக்க இருக்கும் பாலை அப்படியே அடக்கிடுவாங்க. ஊசி போட்டு கறப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதே போல் காலை மாலை இரண்டு வேளை பால் கறக்கும் போது நேரடியாக வந்து வாங்கிக் கொள்ளலாம்.

இவங்க காட்டில் புல்லை மேய்ந்து வளர்ந்தவர்கள். இங்கு பண்ணையில் பராமரிப்பதால், இவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான சாப்பாட்டினை கொடுக்கிறோம். புண்ணாக்கு (கடலை, தேங்காய்), பருத்திக் கொட்டை, தவிடு (அரிசி, கோதுமை) கடலைப் பொட்டு, வைக்கோல் அதன் பிறகு இவர்களுக்காக வடித்த சாதம்னு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்கிறோம். சாப்பாட்டு விஷயத்தில் ரொம்பவே கறார். மற்ற மாடுகள் சாப்பிட்ட மிச்ச உணவை சாப்பிடமாட்டாங்க. நாம சாப்பிட்ட வாழை இலையை சீண்டமாட்டாங்க. பிரஷ் இலை கொடுக்கணும். இரவே புண்ணாக்கு, தவிடு எல்லாம் கலந்து வச்சிடுவோம்.

சாதம் தனியா வேகவைப்போம். சரியான நேரத்தில் சாப்பாடு கொடுத்திடணும். வயிறு நிரம்பிடுச்சுன்னா ரிலாக்சா உட்கார்ந்திடுவாங்க. இல்லைன்னா பார்த்துக் கொண்டே இருப்பாங்க. சாப்பாடு எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவர்களின் உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். நாம சாப்பாடு போட வரும் போது எழுந்து நிப்பாங்க. அப்படி நிற்கவில்லை என்றால் உடலில் பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. உடனே மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து கொடுக்கணும். அதுவும் ஒரு போராட்டம் தான். எப்படி ஏமாற்றி மருந்து கொடுத்தாலும், சாப்பிடமாட்டாங்க. ரொம்பவே கஷ்டப்பட்டுதான் கொடுப்போம்.

அதேபோல் வேறு கன்று பால் குடிக்க அருகில் போனா சேர்க்கமாட்டாங்க. அதனோட கன்றுக்கு மட்டும் தான் பால் தருவாங்க. பசுமாடு தானே சாதுவா இருக்கும்ன்னு நாம நினைப்போம். இவங்க அப்படி கிடையாது. கொஞ்சம் கயிறு தளர்வா இருந்தா போதும் சண்டை போட ஆரம்பிச்சிடுவாங்க. அதனாலேயே ஒருவருக்கு ஒருவர் இடையே நிறையே இடைவெளி விட்டு கட்டுவோம். சொல்லப்போனால் பத்து மாடுகள் கட்டும் இடத்தில் இவங்கள ஐந்து பேர் தான் கட்ட முடியும். எங்களிடம் இப்ப ஆறு பசு, ஒரு காளை மற்றும் ஐந்து கன்றுக்குட்டி இருக்கு’’ என்றவர் தங்களிடம் இருக்கும் மயிலைக் காளையை விவரித்தார்.

‘‘நாங்க ஆரம்பத்தில் பசு மாட்டினைத்தான் வாங்கினோம். அதை இணைச் சேர்க்க காளை கிடைக்கல. குறிப்பா மயிலை காளையை சென்னை முழுக்க அலசினோம். அப்ப திருவண்ணாமலையில் மயிலை காளை ஒருவரிடம் இருப்பதாக தெரிய வந்தது. அங்கு பசுவை கொண்டு செல்ல திட்டமிட்டோம். ஆனால் சரியான நேரம் அமையவில்லை. கிர் இனத்தோடு இணைக்க சொன்னாங்க. எங்களுக்கு விருப்பம் இல்லை. காங்கேயம் பொறுத்தவரை அமாவாசை, பவுர்ணமி முன் பின் மூன்று நாட்களில் தான் இணைச் சேர்க்க முடியும்.

அதே போல் கன்று ஈன்ற மூன்று மாதம் கழித்து இணைச் சேர்க்கலாம். இவர்கள் இணை சேர்க்கைக்கு தயாரான தருணத்தில் எங்களுக்கு காளை கிடைக்காது. கன்று ஈன்று ஏழு மாசம் தள்ளிப் போயிடுச்சு. எங்களின் போராட்டத்தை உணர்ந்த சிவக்குமார் கோசாலையில் இருந்த ஒரு மயிலைக் காளையை எங்களுக்கு பரிசா கொடுத்தார். அது எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது. காரணம், அந்த நேரத்தில் காளை வாங்கக்கூடிய மனநிலையில் நாங்க இல்லை. எங்களுக்கு நாங்க விரும்பிய மயிலையை கொடுத்ததற்கு நாங்க அவருக்குதான் நன்றி சொல்லணும்’’ என்ற தினேஷ் பால் மட்டுமில்லாமல் தயிர் மோர், வெண்ணை, நெய், பன்னீர் போன்ற அனைத்து பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

‘‘காங்கேயம் பசுவின் பால் ஏ2 ரகம். இதில் உள்ள அமினோ ஆசிட் உடலுக்கு ரொம்ப நல்லது, சத்து நிறைந்தது. அதன் தரத்திற்காகவே பால் வாங்க வர்றாங்க. இதில் நாங்க தண்ணீர் கலப்பதில்லை. பாலில் எலுமிச்சை சேர்த்து திரித்து பன்னீர் செய்கிறோம். பாலைக் கடைந்து, வெண்ணை எடுத்து நெய் காய்ச்சி தருகிறோம். சிலர் வெண்ணையாகவும் கேட்கிறாங்க. மோர், தயிர் கேட்பவர்களுக்கும் கொடுக்கிறோம். தற்போது பால் சார்ந்த பொருட்களைதான் தயாரித்து வருகிறோம். அடுத்து அவர்களின் சாணத்தில் இருந்து வரட்டி, பஞ்சகவ்யம், பஞ்சகவ்ய விளக்கு, சாம்பிராணி, விபூதி எல்லாம் தயாரிக்கும் திட்டமிருக்கு’’ என்றனர் சிந்துஜா மற்றும் தினேஷ் தம்பதியினர்.

தொகுப்பு : ப்ரியா

You may also like

Leave a Comment

4 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi