Saturday, May 11, 2024
Home » மேன்மையான வாழ்வருளும் ஒப்பிலியப்பன்

மேன்மையான வாழ்வருளும் ஒப்பிலியப்பன்

by Kalaivani Saravanan

ஒப்பிலியப்பன் – கும்பகோணம்

திருவோண விரதம் 11.05.2023

மார்க்கண்டேய முனிவர் தவியாய் தவித்தார். திருமகளே தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்றும், நாராயணனே தனக்கு மருமகனாக அமைய வேண்டும் என்றும் ஆவல் கொண்ட அவர், அந்த இரண்டாவது எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்று தவித்தார். திருமகள் அவருக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையால், திருமாலுக்கு, தன்னுடைய சொந்த திட்டமும் நிறைவேற வேண்டியிருந்தது. முதலில் திருமாலின் திட்டம் என்ன என்று பார்ப்போம்.

துளசி, மன் நாராயணனின் பாதங்களை அர்ச்சனைப் பொருளாக அலங்கரித்தாள். ஓர் இலையாக அவர் பாதத்தில் வீழ்ந்து கிடக்கும் தான் ஏறிட்டு அவர் திருமுக மண்டலத்தைக் காண இயலாது தவித்தாள். எத்தனை நாள்தான் பாத தரிசனம்! பரந்தாமனின் பேரெழில் முகத்தைக் காணத் தனக்கு எப்போதுதான் கொடுத்து வைக்கும் என்று ஏங்க ஆரம்பித்தாள். தன்னுடைய இந்தக் குறையை வைகுந்தவாசனிடமே முறையிட்டாள். மெல்லச் சிரித்துக் கொண்டார் நாராயணன்.

தன் முகத்தை தரிசிக்க வேண்டும் என்பதுதான் துளசியின் ஏக்கமா அல்லது திருமகள் மட்டும் மார்பில் நிரந்தரமாக வீற்றிருக்க தான் மட்டும் பாதத்திலேயே கிடக்க வேண்டியிருக்கிறதே என்ற பொறாமையா என்று யோசித்தார். ஆனாலும் அவளுக்கும் பெருமை சேர்க்க மனம் கொண்டார். ஆகவே, துளசியிடம், ‘‘மஹாலக்ஷ்மி, பல காலம் தவம் மேற்கொண்டு, என் அன்பை வென்று, பிறகுதான் என் மார்பில் இடம் கொண்டாள். அதேபோல நீயும் தவமியற்றினால் உனக்கு உரிய அங்கீகாரம் அளிப்பேன்,’’ என்று அறிவுறுத்தினார்.

அதோடு, திருமகள் மார்க்கண்டேய முனிவரின் மகளாக அவதரிக்கப் போகிறாள் என்றும், அவளை மணந்துகொள்ள தான் பூவுலகிற்கு வரப்போவதாகவும், அப்போது, அங்கே தவமியற்றக்கூடிய துளசிக்குத் தான் தரிசனம் தர முடியும் என்றும் வாக்களித்தார். அதுமட்டுமல்ல; ஸ்ரீதேவியை மணம் முடிக்குமுன், அதாவது தாங்கள் இருவரும் மாலை மாற்றிக்கொள்ளும் முன் துளசியையே தன் முதல் மாலையாகத் தான் தன் மார்பில் ஏற்றுக்கொள்வதாகவும் சொல்லி அவளை சந்தோஷப்படுத்தினார்.

மிகுந்த உற்சாகத்துடன் துளசி பூலோகம் வந்தாள். திருக்குடந்தையில் அமைந்திருந்த மலர்க் காட்டில், ஒரு செடி வடிவாக தவத்தை மேற்கொண்டாள். இதற்கிடையில் திருமகளே தனக்கு மகளாக வந்துதிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் மேற்கொள்ள சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வந்த மார்க்கண்டேயர், இந்த மலர்க் காட்டை கண்டதும் மனம் ஈர்க்கப்பட்டு உட்புகுந்தார். வெறும் காய், கனிகள், கிழங்குகளை மட்டுமே உட்கொண்டு தவம் இயற்றினார்.

எல்லாம் கூடி வந்ததை, இதையெல்லாம் ஏற்கெனவே திட்டமிட்டு காய் நகர்த்திய பரந்தாமன், ஸ்ரீதேவியிடம், திருக்குடந்தை மலர்க்காட்டில் துளசிச் செடிக்குக் கீழே ஒரு குழந்தையாய் வடிவெடுத்து மார்க்கண்டேயருக்காகக் காத்திருக்குமாறும், பின்னொரு நாளில், அவளைத் தானே மணமுடிக்க பூவுலகம் வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, துளசிச் செடியின் அடியில் திருமகள் ஒரு குழந்தையாய் ஒளிவீசி, மலர்ச் சிரிப்பால் அந்த வனத்தையே மகிழ்வனமாக்கினாள். தவம் முடித்த மார்க்கண்டேயர் மெல்ல நடந்து வருகையில், துளசிச் செடிக்கு அடியில் ஒரு பேரொளி தன்னை ஈர்ப்பதைக் கண்டார். அங்கே பொன்னே உருவாக, பாரிஜாத மணமாக, தெய்வீகக் குழந்தை ஒன்று தனக்காகவே கிடப்பது கண்டு உள்ளம் பூரித்தார்.

துறவு, தவம், பற்றற்றத் தன்மை எல்லாம் அந்தக் கணத்தில் அவரிடமிருந்து விடைபெற்றன. அப்படியே அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து நெஞ்சார அணைத்துக்கொண்டார். தன் விருப்பப்படியே ஸ்ரீதேவியே தனக்கு மகளாகக் கிடைத்துவிட்டதை அவர் உணர்ந்தார். அவர் அப்படி உணர்ந்ததை, தானும் தென்றல் சிலுசிலுப்பில் மெல்ல அசைந்து துளசிச் செடியும் ஆமோதித்தது. திருமாலின் மார்பகத்தை அலங்கரிக்கப் போகும் அந்தத் திருநாளுக்காகக் காத்திருந்தது.

பூமியிலிருந்து கிடைத்தவள் என்பதால், மகளை பூமிதேவி என்றழைத்துக் கொண்டாடினார்முனிவர். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார். அவள் மணப்பருவம் எய்தியபோது தன்னுடைய இரண்டாவது உள்ளக் கிடக்கை நிறைவேறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார். என்ன வேடிக்கை! முற்றும் துறந்த துறவியின் உள்ளம் லௌகீகத்துக்குத் திரும்புகிறது! இதுவும் இறை சார்ந்த, பக்தி மேன்மையின் வெளிப்பாடுதானோ!

மருமகனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார் முனிவர். அவரது குடில் நோக்கி ஒரு பெரியவர் வந்தார். தள்ளாடும் நடை, கிழிசல் உடை, நரை முடி, இடுங்கிய கண்கள் என்று முதிய தோற்றம். வந்தவர் மார்க்கண்டேயரிடம் நேரடியாகவே கேட்டார்: ‘‘வாசலில் பேரழகாக நின்று கொண்டிருக்கிறாளே, அவள் உன் பெண்ணா? அவளை எனக்கு மணமுடித்துக் கொடு!’’

அதிர்ந்து போனார் முனிவர். என்னக் கொடுமை இது! எந்த வயதில் எந்த ஆசை வருவது என்ற விவஸ்தையே இல்லையா? ‘நான் பெருமாளுக்காகக் காத்திருக்கிறேன், இங்கே பிச்சைக்காரர் வந்து திருமணப் பேச்சு நடத்துகிறாரே’ என்று மனசுக்குள் அங்கலாய்த்தார். ‘‘பெரியவரே, உங்கள் வயது என்ன, என் மகள் வயது என்ன? அதோடு, இவளால் உங்களுக்கு சரியாக உணவு படைக்கவும் தெரியாதே. சமையலில் உப்பு போட வேண்டும் என்ற பக்குவமும் அறியாத சிறு பெண் இவள்,’’ என்று மன்றாடினார்.

‘‘அடடா, என்ன பொருத்தம் பாருங்கள்! வயது காலத்தில் எனக்கு உப்பு போட்ட பண்டம் ஆகாது என்பதை உங்கள் மகள் தெரிந்து வைத்திருக்கிறாள். இதைவிட வேறென்ன வேண்டும்? இப்படி என்னை அக்கறையுடன் கவனித்துக்கொள்ள இவளைவிட வேறு யார் எனக்குக் கிடைப்பார்கள்!’’ என்று முதியவர் நடுங்கும் குரலில் சொன்னார். இந்த பதிலைக் கேட்டுத் திடுக்கிட்டார் முனிவர். தட்டிக்கழிக்கவே முடியாது போலிருக்கிறதே என்று குழம்பி நின்றார்.

‘‘நீ உன் பெண்ணை எனக்கு மணமுடித்துக் கொடுக்கவில்லையானால் நான் என் உயிரைத் துறப்பேன்,’’ என்று சொல்லி மேலும் மிரட்டினார் முதியவர். பரிதாபமாக மகளைப் பார்த்தார் மார்க்கண்டேயர். அவளோ, பளிச்சென்று, ‘‘இந்தக் கிழவருக்கு என்னை மணமுடித்தால் நான் என் உயிரைத் துறப்பேன்.’’ என்றாள்!

இது என்ன சோதனை என்று பரிதவித்தார் முனிவர். இனியும் இந்த பக்தரைத் தவிக்க விடுவது முறையல்ல என்று கருதியதால், அவர் முன் நின்றிருந்த முதியவர் மறைந்து சர்வாலங்கார பூஷிதனாக மஹாவிஷ்ணு தோன்றினார். பூமிதேவியும் வெட்கப் புன்முறுவலுடன் அவரைப் பார்த்தாள். அப்போதுதான் திருமாலும், மஹாலக்ஷ்மியும் தன்னிடம் நாடகமாடியிருக்கிறார்கள் என்று முனிவருக்குப் புரிந்தது. திருமால் முனிவரைப் பார்த்து, ‘‘மார்க்கண்டேயரே, உம் மகள் எப்படி சமைத்துப் போட்டாலும் அதை நான் விரும்பி உண்பேன்.

உப்பிடப்படாதது ஒரு குறையே அல்ல. அதுவே உடல்நலம் காக்கும்,’’ என்று ஆறுதலும் அளித்தார். நெகிழ்ந்துபோனார் முனிவர். உணவுச் சுவைதான் யாரையும் எளிதாக வீழ்த்தக் கூடியது. அதையும் தன் மகளுக்காகத் தியாகம் செய்ய முன்வந்திருக்கும் இந்த மருமகன், ஒப்பிலா அப்பன்தான் என்று நெஞ்சு விம்மினார். பிறகு திருமாலிடம், ‘‘தாங்களும் என் மகளும் திருமணக் கோலத்திலேயே இத்தலத்தில் அர்ச்சாவதாரம் கொள்ள வேண்டும்.

தங்களுக்கு நிவேதிக்கப்படும் பிரசாதங்களில் உப்புச் சுவை இருத்தல் கூடாது,’’ என்று கேட்டுக்கொண்டார். இந்தக் கோரிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டார் பெருமாள். அதன்படி, இப்போதும் இந்த ஒப்பிலியப்பன் கோயிலில் உப்பில்லாமல்தான் பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன, பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன, பக்தர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

அது உப்பில்லாத பிரசாதம் என்பது தெரியாவிட்டால், அந்த பிரசாதம் அற்புதமான சுவை கொண்டதாக இருக்கும்; தெரிந்தாலும், கொஞ்சம் மனசளவில் தயக்கம் இருக்குமே தவிர, மற்றபடி ருசியில் உப்பிட்ட உணவைவிட பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. அது மட்டுமல்ல, ‘இந்தக் கோயிலுக்குள் வருபவர்கள் உப்பையோ, உப்பிட்ட உணவுப் பொருளையோ கொண்டுவரக்கூடாது; அப்படிக் கொண்டு வந்தால் அவர்கள் நரகத்துக்குதான் போவார்கள்’ என்று ஐதீகம் இருப்பதாகவும் சொல்லி அச்சுறுத்துகிறார்கள்! ஒப்பிலியப்பன் தரிசனத்தை விடவா உப்பில்லாத இந்த பிரசாதம் பெரிது!

நம்மாழ்வார் இந்தப் பெருமாளை பொன்னே, மணியே, முத்தே என்றெல்லாம் வாழ்த்திக் கொஞ்சி மகிழ்கிறார்.

என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன் அப்பன், மணி அப்பன், முத்து அப்பன், என் அப்பனுமாய்
மின்னப் பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தனதாள் நிழலே

– என்கிறார் அவர். அதாவது, ‘பொன், மணி, முத்து போன்றவன் என் தலைவனான இந்தப் பெருமாள். தன் பக்தனுக்கு உதவி செய்வதில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தனித் தலைவன். என் தந்தை. மதில்களால் சூழப்பெற்ற திருவிண்ணகர் என்ற இந்த திவ்ய தேசத்தில் கொலுவிருக்கும் இவன் என் தலைவன் மட்டுமல்ல; என்னைப் பெற்ற தாய்; என்னை வளர்க்கும் தாய். தனது திருவடி நிழலால் என்னை என்றென்றும் காப்பான்,’ என்று உள்ளம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார்.

இந்தப் பாசுரத்தை ஒட்டியே இந்தக் கோயிலில், என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், திருவிண்ணகரத்தான் என்று பெருமாள் ஐவராக கொலுவிருக்கிறார். தங்க விமானம் கொண்டு பரிமளிக்கிறார் ஒப்பிலியப்பன். நெடிதுயர்ந்த நின்ற கோலம். கண்களாலேயே மென்மையாக அழைக்கிறார். தங்கக் கவசம் பூண்டு ஜொலிக்கிறார். இவர் காலடியில் இடது பக்கம் மார்க்கண்டேயரும், வலது பக்கம் பூமிதேவியும் மண்டியிட்டு இவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

திருப்பதி வெங்க டேசப் பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட பிரார்த்தனைகளை இவருக்கு நிறைவேற்றி, திருப்பதிக்குப் போக முடியாத குறையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். இந்தப் பெருமாளும் பார்ப்பதற்கு ஸ்ரீநிவாசன் போலவே இருக்கிறார். அதனால்தானோ என்னவோ இவருக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. திருமண வரம் அளிக்கும் பரந்தாமன் இவர். இந்தக் கோயிலில் தனியே இருக்கும் திருமண மண்டபத்தில் ஒவ்வொரு முகூர்த்த நாளன்றும் நிறைய பக்த ஜோடிகளுக்கு பெருமாள் அருளுடன் திருமணம் நடைபெறுகிறது என்கிறார்கள்.

பூமிதேவித் தாயார் பெருமாளுடனேயே அவர் கருவறையில் வீற்றிருப்பதால், இவருக்குத் தனி சந்நதி இல்லை. தரணிதேவி, வசுந்தரா என்றும் தாயார் அழைக்கப்படுகிறார். வழக்கம்போல அனுமன், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ராமர் முதலானோரும் தத்தமது சந்நதிகளில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். பிராகாரச் சுற்றில் ராமாயண, தசாவதாரக் காட்சிகள், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆசார்யார்கள் ஆகியோர் பேரெழில் ஓவியங்களாக நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.

108 திவ்ய தேச பெருமாள்களையும் இங்கே தரிசிக்கலாம். ஆமாம், அந்தத் தோற்றங்களையும் சுதை சிற்பங்களாக, கவினுற வடிவமைத்திருக்கிறார்கள். இங்குள்ள அஹோராத்ரி புஷ்கரிணி மிகச் சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே எந்த நீர்நிலையிலும் இரவு நேரத்தில் நீராடலாகாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்தத் தலத்தின் அஹோராத்ரி திருக்குளத்தில் மட்டும் ஒரு நாளின் எல்லா நேரத்திலும், இரவு, பகல் என்று பாராமல் நீராடலாம் என்று சாஸ்திர விதி தளர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த தீர்த்தம் எல்லாவகையான தோஷங்களையும் போக்கவல்லது. தேவசர்மா என்ற வேதம் அறிந்த அந்தணன் ஒருவன் தன் குல ஒழுக்கம் மீறி, புலன் அடக்கமில்லாமல் திரிந்தான். இந்த வகையில் ஜைமினி முனிவரின் மகளிடம் அவன் முறைகேடாக நடந்துகொள்ள முயன்றபோது, வெகுண்ட முனிவர் அவனை சக்கரவாகப் பறவையாக உருமாறுமாறு சபித்தார்.

அப்படியே பறவையான அவன் இந்த அஹோராத்ரி புஷ்கரணியின் கரையில் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தான். அப்போது திடீரென புயல் வீச, அந்த மரம் அப்படியே குளத்தில் சாய்ந்தது. அந்த குளத்து நீர் பறவையின் மீது தெளிக்கப்பட, தேவசர்மா தன் சுய உருவம் பெற்றான்; முக்தியும் அடைந்தான். அந்த அளவுக்கு இந்தத் திருக்குளம் சக்தி வாய்ந்தது. வேதசர்மா இவ்வாறு சாபவிமோசனம் பெற்றது ஓர் இரவில் என்பதால், இந்தக் குளத்தில் இரவு நேரத்திலும் நீராடலாம் என்ற வழக்கம் வந்ததாகச் சொல்கிறார்கள்.

தியான ஸ்லோகம்

திருவிண்ணகரம் சென்று ஒப்பிலியப்பனை தரிசிக்கும்வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

ஸ்ரீமத் விஷ்ணௌ விமாநே ககந நகரகே பத்மினீ புண்ய பூர்ணா
(அ) ஹோராத்ராக்யா ஜநாநாமபி மதபலதோ வேங்கடேச ஸ்வரூப:
பூம்யா தேவ்யா ஸமேதஸ் த்வலவணஹவிஷ: ப்ராசனப்ரீதிரேஷ:
புத்ரீப்ரீத்யை ம்ருகண்டோ: ஹரிதிகபிமுகோ த்ருச்யதே பீஷ்டதாயீ
– ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்

பொதுப் பொருள்: ககந நகரம் என்ற திருவிண்ணகர் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே நமஸ்காரம். விஷ்ணு விமான நிழலில், அஹோராத்ர புஷ்கரணிக் கரையில், வேண்டுவோர் வேண்டுவனவற்றை எல்லாம் அருளும் வேங்கடேசப் பெருமானாய், பூதேவி சமேதராய் திகழும் பெருமாளே நமஸ்காரம். தேவியின் மீதுள்ள பெரு விருப்பத்தால் உப்பு, இல்லாத அமுதை ஏற்பவராய் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் மார்க்கண்டேய முனிவருக்குக் காட்சி அருள்பவரே நமஸ்காரம். தன்னை சேவிப்பவர் விருப்பங்களை நிறைவேற்றும் எம்பெருமானே நமஸ்காரம்.

எப்படிப் போவது?

கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஒப்பிலியப்பன் திருக்கோயில். கும்பகோணத்திலிருந்து பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு.

எங்கே தங்குவது?

கும்பகோணத்தில் தங்கிக் கொள்ளலாம். அவரவர் தேவைக்கேற்ப தங்கும் விடுதிகள் உள்ளன. உணவு வழங்கவும் உணவு விடுதிகள் உண்டு.

தொகுப்பு: பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

one × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi