Tuesday, May 7, 2024
Home » ஆற்றலும்,ஆளுமையும் மிக்க முதலமைச்சர் அனைத்தையும் எதிர்கொண்டு வென்று காட்டுவார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

ஆற்றலும்,ஆளுமையும் மிக்க முதலமைச்சர் அனைத்தையும் எதிர்கொண்டு வென்று காட்டுவார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

by Arun Kumar
Published: Last Updated on

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று (06.05.2023), பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் மற்றும் கொளத்தூர் வில்லிவாக்கம் எல்.சி.1 சாலையில் கட்டப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் ரூ.43.46 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளின் முன்னேற்றத்தினை வாரந்தோறும் கலந்தாய்வின்போது கேட்டறிந்து வருகின்றார். இந்த பாலமானது சரியாக ஒரு மாதத்திற்குள்ளாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தனது பொற்கரங்களால் திறந்து வைக்க உள்ளார்கள்.

இந்த பணிகளை வேகப்படுத்தி முழு வீச்சில் ஈடுபட்டிருக்கின்ற மேயர் பிரியா ராஜன், ஆணையர். ககன்தீப் சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டலக்குழு தலைவர் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து ஒரு வாகனத்தை கூட என் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தவில்லை.

அதேபோல் துறை சார்ந்த எந்த ஒரு அலுவலரையும் ஓடியாக பயன்படுத்தவில்லை என்று வெளிப்படையாகயே தெரிவித்துள்ளேன். பாஜக தலைவர் அண்ணாமலை எந்த குற்றச்சாட்டும் கிடைக்காததால் திருக்கோயில் கார் பிரச்சினையை கையில் எடுத்திருக்கின்றார். அந்தக் கோயிலின் நிர்வாக வசதிக்காக வாங்கப்பட்ட கார் என்பதால் அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். கார் வாங்கியதால் ஏதாவது ஊழல் நடந்ததா, முறைகேடு நடந்ததா, காருக்கு உண்டான தொகையை விட அதிக தொகை செலவிடப்பட்டிருக்கின்றதா அல்லது அந்த கார் வேறு எதற்காவது பயன்படுத்தப்படுகிறதா? இது குறித்து தான் நாம் விசாரிக்க வேண்டுமே தவிர அவர் சொல்வதற்கெல்லாம் மான நஷ்டஈடு வழக்கு போடுவதற்கு ஒன்றும் நமக்கு வேறு பணிகள் இல்லாமல் இல்லை.

நிறைய மக்கள் பணிகள் நம்மை துரத்திக் கொண்டிருக்கின்றன நாம் அதை எதிர்நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றோம். இதுவரையில் எந்த ஆட்சியில் மீட்கப்படாத அளவிற்கு 4,300 கோடி மதிப்பிலான திருக்கோயில் சொத்துக்களை மீட்ட ஆட்சி தமிழ்நாடு முதல்வர் ஆட்சி. 50,000 ஏக்கர் ஆக்கிரமிப்பிலே இருப்பதாக ஆளுநர் கூறி இருந்தாலும் அந்த 50,000 ஏக்கர் ஆக்கிரமிப்பும் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியிலும் இருந்தது. ஆனால் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 30.04.2023 வரை 4,594 ஏக்கர் அளவிற்கு மீட்கப்பட்டிருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் நிலங்களை ரோவர் கருவியின் வாயிலாக அளவிடுகின்ற பணி தொடங்கப்பட்டு, இதுவரையில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவிடப்பட்டு HRCE என்ற குறியிட்ட கான்கிரிட் எல்லைக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த இடம் திருக்கோயிலின் இதற்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

இது போன்ற எண்ணற்ற சாதனைகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருவதை அவர் சொல்லவில்லை என்பதற்காக இந்த உண்மையை யாரும் மறைக்க முடியாது. மக்களும் இதை முழுமையாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மீட்கப்பட்ட சில இடங்கள் பாஜகவினர் ஆக்கிரமிப்பில் வைத்திருந்திருந்தனர். அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டதற்கு ஆளுநர் நன்றி சொல்ல வேண்டுமென்றால் முதலில் தமிழக அரசுக்கு நன்றியை சொல்ல வேண்டுமே தவிர இது போன்ற குறைகள் சொல்வதை அவர் தவிர்க்க வேண்டும்.

இது சட்டத்தின் ஆட்சி. தவறு எங்கு நடந்திருந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐந்து வயது குழந்தைகள் கூட இது போன்ற குழந்தை திருமணங்களுக்கு உட்படுத்தப்படுவதை தடுப்பதற்காகத்தான் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் 1930 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பெண்ணுரிமை பேசுகின்ற இந்த நாட்டில் தமிழ்நாடு முதல்வர் திராவிடம் ஆடல் ஆட்சியில் குழந்தை திருமணம் குறித்து நான்கு புகார்கள் பெறப்பட்டன அந்த புகார்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சொல்லுகின்ற புகாரான இரட்டை விரல் பரிசோதனை எங்கும் நடைபெறவில்லை.

சட்டத்திற்கு உட்பட்டு சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி மருத்துவ பரிசோதனைகள் கூட பெண் மருத்துவர்கள் செய்ததாக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றார். ஆகவே ஆளுநரை நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றுதான் சட்டமீறல், விதிமீறல் நடந்தால் அது சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அதை சட்டம் அவர்கள் மீது பாய கூடாதா? சிதம்பர தீட்சிதர்கள் என்றால் அவர்களுக்கென்று ஏதாவது ஆளுநர் சட்டம் வகுத்து தந்திருக்கின்றாரா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஆகவே விதிமீறல்கள், சட்டமீறல்கள் எங்கிருந்தாலும் அதில் உடனடியாக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சியை தமிழ்நாடு முதல்வர் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

ஆகவே சிதம்பரம் திருக்கோயிலை பொறுத்த அளவில் தீட்சிதர்களை பொறுத்த அளவில் தமிழக அரசு மேற்கொண்டு இருக்கின்ற நடவடிக்கைகள் புகார்களின் மீதான ஆதாரங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் என்றால் ஆண்டவரா? தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி. பேரறிஞர் அண்ணா சொன்னது போல் ஆட்டிற்கு தாடியும் தேவையில்லை, தமிழ்நாட்டுக்கு ஒட்டுமொத்த ஒன்றியத்துக்கும் ஆளுநரும் தேவை இல்லை என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை. ஆகவே நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர் கூறுவதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி, மக்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை நோக்கி தான் இந்த ஆட்சி நகரும். ஆளுநரின் குற்றச்சாட்டுகளுக்கு அரசின் சார்பில் தொழில் துறை அமைச்சர் . தங்கம் தென்னரசு விரிவாக விளக்கம் அளித்திருக்கின்றார். ஆளுநருடைய கூற்றை ஏற்க மறுக்கின்ற பல அரசியல் கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றன. இவைகளே போதுமானவை. மக்கள் பணிக்காக தினந்தோறும் குறைந்தபட்சம் 20 மணி நேரம் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நமது முதல்வர் அவர்களை அதே ஆளுநர் கூட பாராட்டிதான் உள்ளார்.

அவர் ஏதோ ஒரு நிர்பந்தத்திற்காக இப்படிப்பட்ட இல்லாத குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றார். எந்த நிலையாகினும் அனைத்தையும் சமாளிக்கின்ற ஆற்றலும், துணியும், ஆளுமையும் மிக்க தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்தையும் எதிர்கொண்டு, வென்று காட்டுவார்

You may also like

Leave a Comment

nine + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi