Sunday, September 1, 2024
Home » அதிருப்தியாளர் பட்டியலை தயார் செய்து ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியிருக்கும் தாமரை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அதிருப்தியாளர் பட்டியலை தயார் செய்து ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியிருக்கும் தாமரை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash
Published: Last Updated on

‘‘குக்கர் கட்சி கூண்டோடு காலியாகுதுன்னு சொல்றாங்களே.. எந்த மாவட்டத்துல..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் இருந்து பிரிந்து வந்த குக்கர் தலைமையானவர், மாநிலம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார். இதே போல் டெல்டா மாவட்டத்திலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதில் மன்னர் மாவட்டத்தில் இலை கட்சியில் உள்ளது போல் குக்கர் கட்சியிலும் தெற்கு, வடக்கு, மத்திய என 3 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இதில் தெற்கு, மத்திய மாவட்டங்களுக்கு செயலாளராக கடைசி எழுத்தில் முடியக்கூடிய மணி என்பவரும், வடக்கு மாவட்டத்துக்கு முதல் எழுத்தில் ஆரம்பிக்க கூடிய பிரபா என்பவரும் நியமிக்கப்பட்டனர். சட்டமன்ற, நாடாளுமன்ற உள்ளிட்ட தேர்தல்களில் மன்னர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் வட்டிக்கு வாங்கியும், சொத்துக்களை விற்று தான் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் தொடர் தோல்விகளை சந்தித்த நிர்வாகிகள் பணம் மற்றும் சொத்துக்களை இழந்ததோடு கடும் மனஉளைச்சலில் இருந்து வருகிறார்கள். இலை கட்சியில சேலம்காரரும், தேனிக்காரரும் போட்டி போட்டு தனித்தனியாக மாநாடும் நடத்தினர். ஆனால் குக்கர் தலைமையானவர் எந்தவித மாநாடும் தனியாக நடத்தவில்லை. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளது. இந்த நேரத்தில் கூட மாவட்ட நிர்வாகிகளை குக்கர் தலைமையானவர் சந்திக்காததால் மன்னர் மாவட்டத்தில் குக்கர் கட்சி செயல்படாமல் இருந்து வருகிறது. இனியும் குக்கர் தலைமையானவரை நம்பி இருந்தால் நடுத்தெருவுக்கு தான் வரவேண்டியது வரும். இதனால் நிர்வாகிகள் சேலம்காரர் அணியில் சேர முடிவு எடுத்த தகவல் தெரிய வந்த சேலம்காரர் டீம், மன்னர் மாவட்ட குக்கர் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஒட்டுமொத்த தொண்டர்களையும் சேலம்காரர் அணியுடன் இணைப்பதற்கான திரைமறைவு வேலையில் ஈடுபட்டு வருவதாக நிர்வாகிகள் மத்தியில் பேச்சு ஓடுகிறது…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேலைக்கு வராதவங்களுக்கும் ஊதியம் கொடுக்குறாங்கன்னு புகார் வருதே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘100 டேஸ் ஒர்க் ஸ்கீம்ல முறைகேடுகளை தவிர்க்கத்தான் வருகைப்பதிவேட்டுல இருந்து ஊதியம் பட்டுவாடா செய்றது வரைக்கும் டிஜிட்டலுக்கு மாத்துனாங்க. அதிலயும் தில்லாலங்கடி வேலை காட்டுறாங்களாம் அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும். வெயிலூர் மாவட்டத்துல பல ஊராட்சிகள்ல வேலைக்கு வராதவங்களுக்கும், வேலைக்கு வர விருப்பமில்லாதவங்களுக்கும் கூட அடையாள அட்டையை கொடுத்து, அவங்களை வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் கூப்பிட்டு அட்டையில என்ட்ரி போட சொல்றாங்களாம். காலையில செல்போன்ல போட்டோ எடுத்து அனுப்பிடுவார்களாம். அவங்க கணக்குல ஊதியம் வரவு வெச்ச உடனே, 1கே, 2கேனு கொடுத்துவிட்டு மீதிய உள் ஆட்சி பிரதிநிதிகளும், சூப்பர்வைசர்களும் பங்கு போட்டுக்குறாங்களாம். இதுக்காக வங்கி கணக்கு எண்ணையும் வாங்கி வெச்சிக்குறாங்களாம். என்னதான் கவர்மென்ட் திட்டங்கள் முறைப்படி செயல்படுத்தினாலும், இதுபோன்ற முறைகேடுகள் நடந்துகிட்டுத்தான் இருக்குதுன்னு கவர்மென்ட் ஆபீசுகள்ல இருந்தே புகார்கள் ஒலிக்கத்தொடங்கியிருக்குது. சம்மந்தப்பட்ட அதிகாரிங்க திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மறுபடியும் அதிருப்தியாளர் பட்டியலை கையிலெடுத்து ஆள் பிடிக்கும் வேலைய ஆரம்பிச்சிருக்காங்களாமே தாமரை நிர்வாகிகள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சியின் பொதுச்செயலாளரான சேலத்துக்காரரிடம், மனஸ்தாபத்தில் இருக்கும் மாஜி நிர்வாகிகளின் பட்டியலோடு, தாமரை நிர்வாகிகள் மாங்கனி மாவட்டத்தில் வலம்வர ஆரம்பிச்சிருக்காங்களாம். தாமரை கட்சியின் பிரதர் மவுண்டன் லீடரு, புத்தாண்டின் தொடக்க வாரத்தில் மாங்கனி மாவட்டத்துல நடைபயணம் வரப்போறாராம். இந்த பயணத்தில் இலைகட்சியில், ஒரு காலத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து, தற்போது விலகி நிற்போரை தாமரையில் இணைக்க முயற்சிகள் நடக்குது என்பது, ஏற்கனவே லீக்கான மேட்டர். இதில் யாரும் சிக்காத நிலையில், பல்வேறு கட்சிகளுக்கு சென்று திரும்பிய மாஜி ஒருத்தர் சிக்கினாராம். அவர் இலைகட்சியில் மாஜி எம்எல்ஏவாக இருந்தவர் என்பதால், அதே அடையாளத்தோடு கட்சியில் சேத்துக்கிட்டு சிலித்துக்கிட்டாங்களாம் தாமரை நிர்வாகிகள். இதனால் புதிய எனர்ஜி கிடைச்சது போல், மீண்டும் இலைகட்சி அதிருப்தியாளர் பட்டியலை கையில் எடுத்திருக்காங்களாம். இதில் மூணெழுத்து தலைவரு, மம்மி காலத்தில் ஆக்டிவா இருந்தவங்களும் இருக்காங்களாம். தாமரை லீடரு வரும் நேரத்தில், முக்கிய நிர்வாகிகள் என்று ஒரு பத்து பேரையாவது, கட்சியில் சேர்த்து மாஸ் காட்டணும் என்பதில் தீவிரமாக இருக்காங்களாம் நிர்வாகிகள். இதுக்கான பசப்புகளும் பலமாக இருக்காம். எந்த மீன் தூண்டிலில் சிக்கப்போவுதுன்னு தான் தெரியலை என்கின்றனர் விபரம் தெரிஞ்ச மூத்த நிர்வாகிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைகட்சி செயலாளர் ஏன் சோர்ந்து போய் இருக்காராம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் செயலாளராக இருப்பவரு, மிக பெரிய அப்செட்டில் இருக்காராம். கோல்டு ஆன இவரு, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் சார்பில் அந்த மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைஞ்சாரு. தோல்வி கட்சிக்கு தானே தவிர, தனக்கு செழிப்பாக இருந்ததால், உற்சாகமாகவே இருந்தாரு. தாமரை கட்சி கூட, கூட்டணி உடைஞ்சதும், உற்சாகம் அதிகமாகி இந்த முறையும் நமக்கு தான் சீட் என இருந்தவருக்கு பேரிடி விழும் வகையில் மாற்று கட்சியில் இருந்த முக்கியஸ்தர் ஒருவர், இலை கட்சியில் ஐக்கியமானார். ஏற்கனவே கட்சி எதிர்பார்க்கும் பசைத்தன்மை இந்த முக்கியஸ்தரிடம் அதிகம் இருப்பதால், இவர் தான் எம்.பி. வேட்பாளர் என்றும் முடிவு செஞ்சி இருக்காங்களாம். இதை அறிந்த மா.செ. பெரிய அப்செட் மூடில் இருக்காராம். வட போச்சே… என்கிற மாதிரி, சமீபத்தில் தலைமைக்கழக நிர்வாகியால் நடத்தப்பட்ட பூத் கமிட்டி கூட்டங்களில் பெரிய ஆர்வம் காட்டலையாம். ஆனாலும் இவர இன்னும் கட்சி பொறுப்பில் இருந்து தூக்காம இருப்பது தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளதாம். இலை கட்சி பொதுக்குழுவுக்கு பின், இவரது மா.செ. பொறுப்பு இருக்காது என்கிறார்கள். அண்ணன் சுறுசுறுப்பாக தான் இருந்தாரு. அண்ணன் தொடர்பான வீடியோ வெளியானதால், அப்செட் மூடுக்கு போய்ட்டாரு என ஆதரவாளர்கள் கூறி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

eleven + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi