திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. வீடியோ, புகைப்பட கருவிகளை பழனி மலை கோயிலுக்கு எடுத்துச்செல்ல விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. மலை அடிவாரத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் பக்தர்கள் செல்போன்களை வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
பழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது செல்போன் மற்றும் கேமராக்களை பாதுகாப்பாக மலையடிவாரத்தில் ஒப்படைத்துச் செல்ல வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் கைப்பேசி வைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி, ரசீதை பெற்றுக்கொண்டு பக்தர்கள் செல்போனை இங்கு வைத்துச் செல்லாலாம். பின் மீண்டும் தரிசனம் முடித்த பின், ரசீதை கொடுத்து செல்போனை பெற்றுச் செல்லலாம்.
இந்தியாவில் உள்ள பிரபல கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில், கோவிந்தராஜ பெருமாள் கோவில், பத்மாவதி தாயார் கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆலய நிர்வாகம் சார்பில் செல்போனை பாதுகாக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாமி தரிசனம் முடிந்த பின்னர் செல்போனை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
கருவறையில் உள்ள தெய்வங்களை புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்பதற்காகவே செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்களின் கருவறையில் உள்ள தெய்வ சிலைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின்றன. கோவிலில் பணிபுரியும் சிலர் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து கோயிலில் செல்போன் பயன்படுத்தினால் அதை பறிமுதல் செய்து மீண்டும் பயன்படுத்தியவர்களிடம் அதனை ஒப்படைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.