புதுடெல்லி: நாம், அன்றாடம் வீட்டில் செய்யும் சிறிய அளவிலான செயல்பாடுகளால் மாரடைப்பு,பக்கவாதம் மற்றும் அகால மரணம் போன்ற அபாயங்களை குறைக்கிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லான்செட் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் 25,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 42 முதல் 78 வயதுக்கு உட்பட்டவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் செயல்பாடுகளை 8 ஆண்டுகள் வரை கண்காணித்துள்ளனர். ஆய்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் பங்கேற்கவில்லை என தெரிவித்தனர். ஆராய்ச்சியாளர்கள், மணிக்கட்டில் அணியக்கூடிய கருவியை பயன்படுத்தி தரவுகளை எடுத்தனர். அவர்களின் ஏழு நாள் தற்செயலான உடல் செயல்பாடு முறைகளை 10 வினாடி நேர சாளரத்தில் பகுப்பாய்வு செய்தனர்.
பின்னர் அவர்களின் உடல் செயல்பாடு மைக்ரோ பேட்டர்களை பங்கேற்பாளர்களின் சுகாதார பதிவுகளுடன் ஒப்பிட்டுள்ளனர். சிறிய செயல்பாடுகளினால் அவர்களுடைய உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தனர். அதில் மிதமான மற்றும் தீவிரமான செயல்பாடுகளை மேற்கொண்டவர்களுக்கு மாரடைப்பு,பக்கவாதம் அல்லது அகால மரணம் ஏற்படுவதற்கான அபாயங்கள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சிட்னி பல்கலைகழக பேராசிரியர் இம்மானுவேல் ஸ்டாமட்டாகிஸ் கூறுகையில், ‘‘மாடி படியில் ஏறுவது, தரையை சுத்தம் செய்வது போன்ற அன்றாடம் செய்யும் சிறிய வீட்டு வேலைகள் பெரிய உடற்பயிற்சி இல்லை என்றாலும் கூட இது மருத்துவரீதியாக பலன்களை கொடுக்கின்றன’’ என்றார்.