சென்னை: சென்னை மாநகரை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்ற, நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமரா அமைத்தல், தெருவிளக்கு உள்ள திட்டங்களை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு கருதி, வெளிச்சம் இல்லாத பகுதிகள் மற்றும் இருள் சூழ்ந்த பகுதிகள் கண்டறியப்பட்டு நிர்பயா திட்டத்தின் கீழ் 15 மண்டலங்களிலும் மின்விளக்கு கம்பங்கள் அமைத்தல் மற்றும் அதில் எல்.இ.டி மின் விளக்குகள் அமைத்தல் பணிகளும், துருப்பிடித்த மற்றும் பழுதான மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி சென்னை மாநகராட்சியின் மின் துறை மூலம் நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக சுமார் ரூ.14 கோடி 35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்பயா திட்டத்தில் தற்போது 4,388 மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 941 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,447 மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், சென்னையில் பருவமழையை முன்னிட்டு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக 308 மின்கம்பங்கள் அகற்றப்பட்டது. மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.இதற்காக மொத்தம் ரூ.11 லட்சம் 22 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.308 கம்பங்களில் தற்போது 184 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 124 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதே போல் சென்னை மாநகராட்சியின் சார்பில் 70 உயர்மின்கம்பங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1 கோடி 2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வரும் பருவமழைக்கு முன்னரே அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி மின் துறை அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.