சென்னை: தொழில்நுட்பக் கோளாறால் தமதமாக இயங்கிவந்த சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை மெட்ரோ ரயில் சேவை சீரானது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது.
*படகு சவாரி செய்து மகிழ்ச்சி
ஏலகிரி : தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று வளர்ச்சியடைந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
இம்மலை ஏழைகளின் ஊட்டி எனவும், மலைகளின் இளவரசி எனவும் அழைக்கப்படுகிறது.பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது.
இதனால் அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டு தலங்கள், பறவைகள் சரணாலயங்கள், மூலிகை பண்ணைகள், மங்கலம் சுவாமி மலை ஏற்றம், தாமரைக்குளம், கதவநாச்சியம்மன் கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உட்பட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து பொழுதை போக்கி செல்கின்றனர்.
இந்நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததாலும், 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
படகு இல்லத்தில் குடும்பத்தோடும், நண்பர்களோடும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், இயற்கை பூங்காவில் மலர்கள், பூக்கள், ரசித்தும் புல் தரையின் மேல் அமர்ந்து பொழுதுபோக்கினர்.
*சிசிடிவி கேமராவில் சிக்கிய 2 பேருக்கு வலை
கீழ்பென்னாத்தூர் : வேட்டவலம் அருகே சிங்காரவேலன் கோயிலில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வேட்டவலம் அடுத்த வெண்ணியந்தல் கிராமத்தில் பழமை வாய்ந்த சிங்காரவேலன் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கோயிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர், நேற்று அதிகாலையில் வந்து பார்த்தபோது, கோயில் பூட்டை உடைத்து உண்டியலை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, மர்ம நபர்கள் 2 பேர் முகமூடி எதுவும் அணியாமல், எந்த பதட்டமும் இல்லாமல், கோயிலில் இரும்பு கதவு லாக்கை உடைத்து, உள்ளே சென்று உண்டியலை அலேக்காக தூக்கிக்கொண்டு செல்வது தெரியவந்தது. உண்டியல் காணிக்கையாக ரூ.30 ஆயிரம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த மாதம் 11ம் தேதி பங்குனி உத்திரத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்த நிலையில் இந்த திருட்டு நடந்துள்ளது. ெதாடர்ந்து, வேட்டவலம் போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஏற்கனே வேட்டவலம் அடுத்த ஆவூர் நகை அடகுக்கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. மேலும், கடந்த 18ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் திருவண்ணாமலை- அவலூர்பேட்டை சாலையில் உள்ள பிரபல பாத்திரக்கடையில் 4 நபர்கள் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
திருவண்ணாமலையில் கடந்த 3 நாட்களில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இதேபோல் சிறுசிறு திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும், இரவு நேரங்களில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
*மாவட்ட எஸ்பி தகவல்
கிருஷ்ணகிரி : பர்கூர், கந்திகுப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 110 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணி மேற்கொள்வதாக மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.
பர்கூரில் குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம், எஸ்பி தங்கதுரை தலைமையில் நேற்று நடந்தது. பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் எஸ்பி தங்கதுரை பேசியதாவது:
பர்கூர், கந்திகுப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி – பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி – ஆந்திரா மாநிலம், சித்தூர் தேசிய நெடுஞ்சாலை என 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. திருப்பத்தூர் மாவட்ட எல்லையும் அமைந்துள்ளன.
இதனால், குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் 110 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களும் தங்களது வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வெளியூர் செல்லும் போது, தொடர்புடைய காவல்நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். டூவீலர்களில் விலை உயர்ந்த பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
வீடுகளை வாடகைக்கு விடும் போது, தொடர்புடையவர்களின் முழு விவரங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். இதேபோல், இருசக்கர வாகனங்களில் பெண்கள் தனியாகவோ, குழந்தைகளுடனோ செல்லும்போது ஹெல்மெட் அணிந்தும், கழுத்தில் போட்டிருக்கும் நகைகளை துணியால் மறைத்தும் செல்ல வேண்டும்.
தங்களை யாரேனும் பின் தொடர்கிறார்களா என்று கவனித்துச் செல்ல வேண்டும். அவர்கள் திடீரென செல்போனையோ அல்லது நகைகளையோ பறிக்க நேரிடும். இதனால் விபத்தும் நேரிடும். கிராம புறங்களில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிபவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள், தங்கள் செல்போனில் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து, அவசர உதவிக்கு அழைக்கலாம். மேலும் அவசர உதவி எண்கள் 181, 1098, 1930 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் வளர்மதி, எஸ்ஐ ஆனந்தன், கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 83 ஆண்டு கோரிக்கையான ரயில் பாதை திட்டம் எப்போது நிறைவேறும்?, என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் மாவட்டமாகும். கனிமவளம் நிறைந்த இந்த மண்ணில் கிடைக்கும் கிரானைட் கற்கள், மாங்கூழ், ரோஜா மலர்கள் செல்லாத வெளிநாடுகளே இல்லை எனலாம்.
இவை அனைத்துமே பெரும்பாலும் சாலை போக்குவரத்தை மட்டுமே நம்பி உள்ளது. இத்தனை வசதிகள் இருந்தும், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு எட்டாக்கனியாக இருப்பது ரயில் போக்குவரத்து மட்டுமே. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், திருப்பத்தூரில் இருந்து பர்கூர் வழியாக கிருஷ்ணகிரி வரை ரயில்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது.
கடந்த 1942ம் ஆண்டு, கிருஷ்ணகிரி வரையிலான ரயில் பாதை துண்டிக்கப்பட்டது. இந்த தடத்தில் சரியான வருவாய் இல்லாததால், ரயில் பாதை வசதி துண்டிக்கப்பட்டதாக அப்போது ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி வழியாக ரயில்பாதை திட்டம் அமைக்க வேண்டும் என்று, மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர், கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி, சூளகிரி வழியாக ஓசூர் வரையில் 104 கிலோ மீட்டர் தூரத்திற்கு, புதிதாக பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்கு மாற்றாக திருப்பத்தூரில் இருந்து பர்கூர், கிருஷ்ணகிரி, சூளகிரி, உத்தனப்பள்ளி வழியாக ராயக்கோட்டையில் இணைக்கும் மற்றொரு திட்டமும் உள்ளது. இதன் மூலம் 25 கிலோ மீட்டர் பயண தூரம் குறைவதோடு, திட்ட மதிப்பீடும் குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக ஆய்வு பணிகளுக்காக, ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வுகள் நடந்த நிலையில், அதன் பிறகு எந்த அறிவிப்பும் இல்லை. ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட்டிலாவது, அது குறித்து அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த அறிவிப்புகளும் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியது.
கிருஷ்ணகிரி ரயில்வே திட்டத்தை நிறைவேற்றுவதாக தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் வரும் நிலையில், 83 ஆண்டுகளாக இந்த திட்டம் கிருஷ்ணகிரி மக்களுக்கு கனவாகவே இருக்கிறது. போக்குவரத்திற்கு மட்டுமின்றி பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஏற்றுமதிக்கும், ரயில் வசதி இன்றியமையாததாக இருந்து, மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான இந்த ரயில் பாதை அமைக்கப்படுமா? அல்லது கனவுப்பாதையாகவே போய்விடுமா? என்ற எண்ணம் தற்போது மக்களிடம் எழுந்துள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரியை சேர்ந்த தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘தமிழகத்தில் ரயில் நிலையம் இல்லாத ஒரே மாவட்ட தலைநகரமாக கிருஷ்ணகிரி உள்ளது. ரயில் நிலையம் கொண்டு வர, கிருஷ்ணகிரி மக்கள் இதற்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தி, பலமுறை பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். மேலும், ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, அனைத்து கட்சி வேட்பாளர்களும் இதனை முக்கிய வாக்குறுதியாக சொல்லி வாக்கு சேகரிக்கின்றனர். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய ஒன்றிய பாஜ அரசு, இதுவரை கண்டுகொள்ளாமலேயே உள்ளது.
எனவே, ஒன்றிய பாஜ அரசு, கிருஷ்ணகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் பாதை நிறைவேற்றிட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது,’ என்றார்.
*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ரெட்டிச்சாவடி : விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பல்வேறு விவசாய நிலங்களை கையகப்படுத்தி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் ஜானகிபுரத்தில் இருந்து சாலை பணிகள் தொடங்கி புதுச்சேரி-கடலூர் என 134 கிராமங்கள் வழியாக புறவழிச்சாலையை கடந்து நாகப்பட்டினம் வரை பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை பல்வேறு கிராமங்களுக்கு இடையே செல்கிறது.
இதனால் அருகில் உள்ள கிராமங்கள் இணைப்பு சாலையை பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றன. இச்சாலையானது முழுமை பெறாமலே கடந்த சில மாதங்களுக்கு முன் போக்குவரத்து தொடங்கப்பட்டு, 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன. பல்வேறு இடங்களில் இச்சாலை பணிகள் முழுமை பெறாததால் பல்வேறு விபத்துகளும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரெட்டிச்சாவடி அருகே சோரியாங்குப்பத்தில் இருந்து இணைப்பு சாலை தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இந்த இணைப்பு சாலையில் போதிய ஏற்பாடுகள் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.
இரவு நேரங்களில் இணைப்பு சாலையை பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் விபத்து ஏற்படுவதற்கு முன் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
*வாணியம்பாடி அருகே சோகம்
வாணியம்பாடி : திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் தயார் செய்யும் இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் இயந்திரங்கள் தமிழகம், ஆந்திரா மட்டுமின்றி வடமாநிலங்களில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஒர்க் ஷாப்பில் புதிதாக தயார் செய்த இயந்திரத்தை வடமாநிலத்திற்கு அனுப்புவதற்காக கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றும் பணி நடந்தது. இப்பணியில் வாணியம்பாடி, கோணாமேடு புத்தன் நகரை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ஜெய்சங்கர்(55) என்பவர் உட்பட 6 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, கிரேனில் இருந்த பளு தூக்கும் பெல்ட் திடீரென அறுந்ததில் சுமார் 5 டன் எடையுள்ள இயந்திரம் அங்கிருந்த தொழிலாளி ஜெய்சங்கர் மீது விழுந்தது.
இதில், படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜெய்சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், பலியான தொழிலாளி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இயந்திரம் விழுந்து தொழிலாளி உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்: பண்ருட்டில் 258 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய அதிமுக முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ரமேஷ் (24), ஹரிஷ் (26), சங்கர்லால் (27), அப்துல் ரஹீத் (46) ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
*விற்பனைக்கு வராத வஞ்சிரம்
வேலூர் : மீன்பிடி தடைக்காலம் எதிரொலியால் வேலூர் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்ததால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மார்க்கெட்டிற்கு வஞ்சிரம் வரத்து இல்லை.
வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.
நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது.இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 15ம் தேதி தொடங்கி ஜூன் 14ம் தேதி வரை கடலில் மீன்கள் இனபெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் மீன்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வரத்து குறைந்ததால் வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
வேலூர் இறைச்சி மார்க்கெட்டை பொறுத்தவரை சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு ஆகிய இடங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 முதல் 7 பெரிய சரக்கு லாரிகளில் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் 61 நாட்களுக்கு குறைந்தளவு மீன்கள் மங்களூரு, கோழிக்கோடு ஆகிய இடங்களில் இருந்து வருகிறது.
நேற்று தேங்காய் பாறை ரூ.400, சங்கரா ரூ.250-400, இறால் ரூ.350-500, வெல்ல கொடுவா ரூ.500-1000, கலங்கா ரூ.220, ஏரி விரால் ரூ.500, சால மீன் ரூ.800, நண்டு ரூ.350-450, ஏரி, குளங்களில் வளரும் வவ்வால் மீன்கள் கிலோ ரூ.120 முதல் ரூ.150, ஜிலேபி ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் 40 நாட்களுக்கு இதே நிலைதான் தொடரும். மீன்பிடி தடைக்காலம் என்பதால் வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு வஞ்சிரம் மீன் விற்பனைக்கு வரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi