தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை கோடை மழை பெய்யும்: படிப்படியாக வெப்பம் குறையும்

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை கோடைமழை பெய்யும் என்றும், படிப்படியாக வெப்பம் குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் நிலவிவரும் சூழலில், வட தமிழக உள் மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் இயல்பைவிட மிக அதிகமாக வெப்பம் இருந்தது. கடலோரப் பகுதிகள், புதுச்சேரியில் இயல்பை ஒட்டி இருந்தது. ஆனால், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசியது. அதிகபட்சமாக கரூர், ஈரோடு, மதுரை விமான நிலையம் 106 டிகிரி வெயில் நிலவியது. திருச்சி 104 , பாளையங்கோட்டை, நாமக்கல் 102, திருப்பத்தூர், சேலம், கோவை 100, சென்னை, தஞ்சை, வேலூர் 99 டிகிரி பதிவானது.

மேலும், தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தென்காசி, நெல்லை, மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம்,திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. கீழடுக்கு சுழற்சியில் ஒரு பகுதி கிழக்கு நோக்கி நகர்ந்ததால் சென்னை மற்றும் புறநகரில் சில இடங்களில் நேற்று மழை பெய்தது.

இதையடுத்து, நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பூர் மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். 12ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இதனால், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக பட்ச வெப்பநிலை 2 டிகிரி வரை படிப்படியாக குறையும். அதேசமயம் உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை ஒரு சில இடங்களில் வெயில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்