Monday, May 6, 2024
Home » பரதனும் சத்ருக்கனனும் இணைந்து காட்சி தரும் ஸ்ரீராம அனுமன் கோயில்

பரதனும் சத்ருக்கனனும் இணைந்து காட்சி தரும் ஸ்ரீராம அனுமன் கோயில்

by Kalaivani Saravanan
Published: Last Updated on

முட்லூர்

‘‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இதில் நம்மாழ்வார் இராமாயணத்தை மட்டும் படிக்கச் சொல்லவில்லை. இராமபிரானைப் பக்தியோடு கற்க வேண்டும் என்கிறார். இந்திரஜித்துக்கும் இளையபெருமாளாகிய இலக்குவனனுக்கும் போர் நடக்கிறது. போர்க் களத்தில் இந்திரஜித் கடும் போர் செய்தான். சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்கிறான் இலக்குவன். ஆயினும் இந்திரஜித்தை வெல்ல முடியவில்லை.

அப்பொழுது ஒரு அர்த்த சந்திர பாணத்தை எடுத்து இராமனுடைய பெயரைச் சொல்லி பிரயோகம் செய்கின்றான் இலக்குவன். அந்த அர்த்த சந்திர பாணமானது இந்திரஜித்தை கீழே தள்ளுகிறது. பாணத்தைப் பிரயோகிக்கும்போது அவன் என்ன சங்கல்பம் சொல்கிறான் தெரியுமா? வேதங்களால் தேறத்தக்கவரும், வேதத்தை உணர்ந்த பிரம்ம ஞானிகளால் வணங்கத்தக்க வருமான அந்த பரம்பொருள்தான் இராமனாக அவதாரம் எடுத்து வந்திருக்கிறான் என்பது
சத்தியமானால், இந்த அர்த்த சந்திர பாணமானது, இந்த அரக்கனைக் கொல்லட்டும் என்று சங்கல்பம் செய்து பிரயோகிக்கிறான்.

அந்த சங்கல்ப பலத்தினாலே இந்திரஜித்தை வெல்கிறான். இப்படிப்பட்ட பெருமைமிக்க ராமனுக்கு ஏராளமான திருக்கோயில்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. அதில் சில கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்கள். பல சரித்திர சம்பவங்களோடு தொடர்புடைய கோயில்கள். பல அற்புதமான நிகழ்வுகள் நடந்தேறிய கோயில்கள்.

அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. முட்லூர் முக்கூடல் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீராமஅனுமார் திருக்கோயில். ஸ்ரீராமரும், அனுமனும் அமைந்த சந்நதிதான் இந்த ஸ்ரீராமஅனுமார் கோயில். மிக எளிமையான கோயில். இங்கே 127 அடி உயரத்திற்கு தியானம் செய்யும் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீராம ஹனுமான் கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

பக்கத்திலேயே தனியாகப் பத்தடி உயரத்தில் நின்ற கோலத்தில் கையில் ராமரையும் சீதையையும் ஏந்திய வண்ணம் நிற்கக்கூடிய அற்புதமான ஸ்ரீராம அனுமான் திருவுருவம் உண்டு. ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் எளிய மக்கள் வந்து பஜனை பாடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி காலம் திருமஞ்சனம் நடை பெறுகிறது. ஏராளமான கிராம மக்கள் இந்த திருமஞ்சனத்தில் கலந்து கொள்கிறார்கள். மிகச் சிறந்த வரப்பிரசாதி. திருமணத் தடைகள் நீங்கவும், திருமணமான தம்பதிகள் விரைவில் தங்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறார்கள்.

அவர்கள் வேண்டுதல்களை எல்லாம் ஸ்ரீராம அனுமனும் ஸ்ரீபட்டாபிஷேக ராமரும் நிறைவேற்றிக் கொடுப் பதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அனுமன் ஜெயந்தி அன்று ஸ்ரீராம நாமம் கோடிக் கணக்கில் எழுதிய சுவடிகளை, தங்கள் தலையில் வைத்துக்கொண்டு, இங்கு வந்து பிரதிஷ்டை செய்வது இந்த ஆலயத்திற்கு உரிய ஒரு விசேஷம். தினமும் அன்னதானம் நடந்துவருகிறது.

ஸ்ரீஆஞ்சநேயருக்கு வலது பக்கத்திலே ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார். இந்த பட்டாபிஷேக கோலத்தில் பல திருக்கோயில்களிலும் அவர் காட்சி தருகிறார். என்றாலும், இங்கே என்ன விசேஷம் என்று சொன்னால், பரத சத்ருக்கனனும் இந்த பட்டாபிஷேகத்தில் இருப்பது விசேஷம். அதைப்போலவே ராமாயண தத்துவங்களை பரப்பிய ஸ்ரீராமானுஜரின் கோலம் பார்க்கப் பார்க்க கண்களுக்கு பெருவிருந்தாக இருக்கும். முக்கோல் ஏந்தி அஞ்சலி செய்த வண்ணம் அவர் கருணை விழிகளோடு நம்மைப் பார்க்கின்ற காட்சி பரவசப்படுத்தும்.

ஒரு திருக்கோயிலுக்கு உள்ள பெருமை அங்குள்ள மூர்த்தி விசேஷத்தால் மட்டுமல்ல. அந்தத் திருக்கோயிலை அபிமானித்து வருகின்ற மக்கள், மக்களின் நம்பிக்கை, வழிபாடு முதலியவற்றையும் சார்ந்து இருக்கிறது. சித்திரை மாதத்தில் ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திர வைபவம் கொண்டாடப்படும். ஆவணி மாதத்தில் கோகுலாஷ்டமி. கிட்டத்தட்ட 600-700 பசு மாடுகளுக்கு மேல், கன்றுகளோடு கோயிலுக்கு முன்னால் வந்து நிற்கும் காட்சி மகத்தான காட்சி. சுற்று வட்டாரத்தில் இருந்து பல கிராம மக்கள் கலந்து கொள்வார்கள்.

ஒவ்வொரு பசுமாட்டுக்கும் தனித்தனியாக கோ பூஜை நடைபெறுவது வேறு எங்கும் காண முடியாத ஒரு விசேஷம். புரட்டாசியில் நவராத்திரி வைபோகம், கொலுவோடு விசேஷமாக நடக்கும். மார்கழி மாதத்தில் 30 நாட்களும் காலையில் திருப்பாவை நடைபெறும். திருப்பாவையில் இங்கு உள்ள 12 – 13 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டு திருப்பாவையை ஓதுவார்கள். நிறைவு நாளில் அந்தப் பெண் குழந்தைகளுக்கு ஆடைகள் ஆபரணங்கள் கொடுத்து ஆண்டாளைப் போலவே நினைத்து வணங்கும் நிகழ்ச்சி அற்புதமாக இருக்கும்.

அடுத்து பிரம்மோற்சவமாக ஸ்ரீராமநவமி உற்சவம் 10 நாட்கள் நடை பெறும். இந்த ஆண்டு அந்த உற்சவம் 30.3.2023 அன்று தொடங்கி 9.4.2023 விடிகாலை வரை நடைபெறும். ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகளும் விசேஷ பூஜைகளும் நடைபெறும். ஸ்ரீராம நவமி கொடி ஏற்றி துவக்கி வைக்கப்படும் இந்த விழாவில் பல அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றுவார்கள். பட்டிமன்றங்கள் நடைபெறும். இசை நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அதோடு முக்கியமாக கிராம மக்களே பங்கு கொண்டு நடத்துகின்ற இராமாயண நாடகம் ஐந்து நாட்கள் மிக விசேஷமாக நடைபெறும். இரவு பத்து மணிக்கு துவங்கும் ராமநாடகமானது விடியவிடிய நடைபெறும். அதுவும் பட்டாபிஷேக நாளன்று சூரிய உதயத்திற்கு முன் ஊர் மக்கள் எல்லாம் திரண்டு இருப்பார்கள். மங்கல வாழ்த்தோடு கோலாகலமாக பட்டாபிஷேக வைபவம் நடைபெறும்.

இத்திருக்கோயிலின் அறங்காவலராக வி. சீனு (ராமதாஸ்) என்ற எளிய விவசாயி இருக்கிறார். தன்னுடைய குடும்பத்தோடும் நண்பர்களோடும் இணைந்து திருக்கோயிலையும் விழாக்களையும் திறம்பட நிர்வகித்து வருகின்றார். திருப்பணி மற்றும் கோயில் தொடர்பு எண் : 94862 22993 இன்னும் திருப்பணிகள் நடைபெற வேண்டிய நிலையில்தான் ஆலயம் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அந்த எம்பெருமான் மனது வைக்க வேண்டும். அவன் மனது வைக்கும்படியாக நமது பிரார்த்தனை இருக்க வேண்டும்.

இந்த சந்நதி முன்பு ஒரு நிமிடம் தியானித்து அவன் அருளாசி பெறாமல் போவதில்லை. எல்லா ஜெயத்தையும் விட ஸ்ரீராமஜெயம் முக்கியமல்லவா…. வெற்றியைத் தரும் மூர்த்தியை தரிசிக்காமல் எப்படிச் செல்வது? கடலூர் – சிதம்பரம் நெடுஞ்சாலையில் ஆலயம் அமர்ந்திருப்பதால், வாகனத்தில் செல்லுகின்ற யாராக இருந்தாலும், இந்த ராமனையும் அனுமனையும் வணங்காமல் செல்வதில்லை.

தொகுப்பு: பாரதிநாதன்

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi