Wednesday, May 15, 2024
Home » 2வது டெஸ்டில் ஆஸி. அதிர்ச்சி தொடரை சமன் செய்து வெஸ்ட் இண்டீஸ் அசத்தல்

2வது டெஸ்டில் ஆஸி. அதிர்ச்சி தொடரை சமன் செய்து வெஸ்ட் இண்டீஸ் அசத்தல்

by Ranjith

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்டில், 8 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற வெஸ்ட் இண்டீஸ் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது. பிரிஸ்பேன் கிரிக்கெட் அரங்கில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 311 ரன் குவித்து ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. 22 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்னுக்கு சுருண்டது.

கிர்க் மெக்கன்ஸி 41, அலிக் அதனேஸ் 35, ஜஸ்டின் கிரீவ்ஸ் 33, கவெம் ஹாட்ஜ் 29 ரன் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 50.5 ஓவரில் 207 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. தொடக்க வீரர் ஸ்டீவன் ஸ்மித் 91 ரன்னுடன் (146 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கிரீன் 42, ஸ்டார்க் 21, கவாஜா, மார்ஷ் தலா 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 11.5 ஓவரில் 68 ரன்னுக்கு 7 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். 8 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற வெஸ்ட் இண்டீஸ் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ததுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 12 புள்ளிகளையும் பெற்றது.

You may also like

Leave a Comment

13 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi