Wednesday, May 15, 2024
Home » அருள்நிறை அமுதக்கடல் பகவான் ஸ்ரீரமண மகரிஷி

அருள்நிறை அமுதக்கடல் பகவான் ஸ்ரீரமண மகரிஷி

by Kalaivani Saravanan

ஸ்ரீரமண மகரிஷி ஆராதனை – 18 – 4 – 2023

கிரி உருவில் உள்ள அருணாசலம் வேங்கடராமன் எனும் திருப்பெயரில் மதுரைக்கு அருகிலுள்ள திருச்சுழி எனும் தலத்தில் அவதரித்தது. பகவான் ஸ்ரீரமணரின் அவதார நோக்கத்தை உற்று நோக்க நமக்கு கிடைப்பது ஒரேயொரு பதில்தான். அதாவது பகவான் தமது வாழ்வு முழுவதும் ஒரேயொரு உபதேசத்தை கூறிக் கொண்டேயிருந்தார். அதுதான் ‘நான் யார்?’ எனும் ஆத்ம விசாரம். தன்னை அறிவது. ஏன் நான் யார்? என்பதை அறிய வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலைத்தான் விதம்விதமாக பல பாடல்களிலும், உபதேச நூல்கள் மூலமாகவும் உணர்த்தியபடி இருந்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக மௌன உபதேசத்தின் மூலமாக ஆலமர் கீழ் விளங்கும் தட்சிணா மூர்த்தமாக அமர்ந்தும் பிரம்மத்தை போதித்தார். மௌனத்தினால்தான் பிரம்மம் பிரகடனம் செய்யப்படுகிறது என்று உபநிஷதம் கூறியதையே தன் அனுபூதியில் நின்று காட்டினார். அல்லது ஞானியின் அனுபூதி நிலையை உபநிஷதம் அப்படிச் சொன்னது என்றும் கொள்ளலாம்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி எல்லோருடைய பிரச்னைகளையும் தீர்த்தாரா?

ஆமாம், பிரச்னை என்று யார் சொல்வது என்று கேட்டார்.

‘‘நான்தான் சொல்கிறேன்’’ என்று பதில் வந்தது.
‘‘அந்த நான் யார் என்று பார்’’ என்று திருப்பிக் கேட்டு மடக்கினார்.

ஒரு கணம் இந்த பதிலைக் கேட்டவர்கள் திகைத்தார்கள். என்ன இது? நான் யார் என்று எப்படி என்னையே கேட்டுக் கொள்வது என்று குழம்பினார்கள். மீண்டும் பகவானை பார்த்தார்கள்.
‘‘பகவானே, நான் யார் என்று எப்படி கேட்டுக் கொள்வது’’ என்று புரியாது கேட்டபோது அழகாக பகவான் விளக்கினார்.

‘‘எதற்கெடுத்தாலும் நான்… நான்… நான்… என்று சொல்கிறாய் அல்லவா. அந்த நான் யார்? என்று சற்று உள்ளே பாரேன். இந்த நான் எனும் எண்ண விருத்தி எங்கிருந்து வருகிறது என்று கவனத்தை உள்முகமாகத் திருப்பேன். இந்த உடலை நான் என்று சொன்னால் தூக்கத்தில் உடலைக் குறித்த நினைவு இல்லையே. ஆனால், சுகமாகத் தூங்கினேன் என்று மறுநாள் சொல்கிறாய்.

அப்போது இந்த தூக்கத்தை யார் அனுபவித்தது. விழித்திருக்கும்போதும் இந்த நான் உள்ளது. உடலும், உலகமும் மறைந்த தூக்கத்திலும் இந்த நான் என்பது இருக்கிறது. எனவே, இந்த நான் எனும் உணர்வு எங்கு உற்பத்தியாகிறது என்று தேடினால் மெல்ல இந்த நான் தன்னுடைய பிறப்பிடமான ஆத்மாவிற்குள் சென்று ஒடுங்கும்’’ என்று விளக்கினார்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் மார்க்கம் ராஜ மார்க்கம். எங்கேயோ கடவுள் இருக்கிறார். அவரை காண்பது மிகவும் கடினம். அது யாருக்கோ சிலருக்குத்தான் முடியும். வீட்டைத் துறக்க வேண்டும். குடும்பத்தை விட்டு ஓடிவிட வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தவே இல்லை.

‘‘பகவானே, கடவுளை அறிவது எப்படி’’
‘‘கடவுளை அறிவது இருக்கட்டும். உன்னை நீ யார் என்று தெரிந்து கொண்டு விட்டு அதற்கு அன்னியமாக, அதற்கு அப்பால் கடவுள் என்கிற விஷயம் தனியே இருக்கிறதா என்று பார். இந்த கேள்வியை கேட்பவன் யார் என்று தன்னையே ஏன் கேட்டுக் கொள்ளக் கூடாது’’ என்று ஞான மார்க்கத்தை போதித்தார்.

மீண்டும், மீண்டும் பகவானிடம் நான் யார் என்கிற ஆத்ம விசாரத்தை எப்படி செய்வது என்று கேட்கப் பட்டது. மகரிஷிகளும், ‘‘அப்பா… ஓர் இருட்டு அறையில் இருக்கிறாய். இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஆனால், நான் இருக்கிறேனா என்று யாரிடமாவது கேட்பாயா. நான் எங்கே என்று இருட்டில் தேடுவாயா. கண்கள் இருட்டில் தவித்தாலும் நான் என்கிற உணர்வு. இருக்கிறேன் என்கிற நிச்சய உணர்வு அதாவது உன்னுடைய இருப்பு உனக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா.

நீ இருக்கிறாய் என்பதை யாரேனும் சொல்ல வேண்டுமா என்ன? அந்த நான் இருக்கிறேன் என்கிற உணர்வின் மீது உன் கவனத்தை செலுத்து. அதனை வைத்துத்தான் மற்ற எண்ணங்கள் கூட்டமாக அமர்ந்துள்ளன. எனவே, நான் இருக்கிறேன் எனும் உணர்வின் மீது கவனத்தை திருப்புங்கள். சிரத்தையோடு திருப்ப வேண்டும்.

அந்த நான் என்கிற உணர்வு எங்கு உற்பத்தியாகிறதோ அங்கு சென்று ஒடுங்கும். அந்த நான் எனும் எண்ண விருத்தி எப்படி உடல் முழுவதும் பரவியிருக்கிறதோ, தன்னையே உடலாக நினைத்திருக்கிறதோ அப்படியே மெல்ல கூம்பி குறுகும். அப்படி அது சென்று ஒடுங்கும் இடம்தான் அருணாசலம். அதுவே ஆத்ம ஸ்தானம். அதுவே பேருணர்வு. உரைக்க முடியாதது’’ என்று மிக எளிமையான மார்க்கத்தை கூறினார்.

நான் எனும் எண்ணம் தோன்றிய பிறகுதான் மற்ற எல்லா எண்ணங்களும் தோன்றுகின்றன. எனவே, இந்த மனதின் உற்பத்தி ஸ்தானத்திற்கு செல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை பார்ப்பீர்கள். இதைத்தான் உபதேச உந்தியார் எனும் நூலில் ‘‘உதித்த இடத்தில் ஒடுங்கியிருத்தல்’’ என்று அழகாக கூறுகிறார்.

‘‘பகவானே, மூர்த்தி வழிபாடு, பூஜை, மந்திரங்கள் என்று எத்தனையோ இருக்கிறதே’’
‘‘இவையெல்லாமும் சித்த சுத்தி தரும். மனதில் ஏகாக்கிரகம் என்கிற மன ஒருமையை உண்டாக்கும். மனம் ஏகாக்கிரகமானால் ஆத்ம வித்தை எளிதாக சித்திக்கும். எப்படி வைத்தாலும் மீண்டும் தன்னிடத்தேதான் வரவேண்டும்’’ என்று பதில் பகன்றார்.

இதையே வேறுவிதமாக சுங்கச் சாவடி தப்பாது என்று ஒரு பாடலில் கூறுவார். அதாவது சுங்கம் செலுத்தாமல் காட்டுப் பாதை வழியாக ஒருவன் இரவில் பயணித்தான். அசதி மேலீட்டால் தூங்கி விட்டான். மாடு எப்போதும்போல அதற்குத் தெரிந்த வழியிலேயே சென்று விடியற்காலையில் சுங்கச் சாவடியில் வந்து நின்று விட்டது. அதுபோல எத்தனை வழிபாடு புறத்தில் மேற்கொண்டாலும், எத்தனை தீர்த்த யாத்திரைகள் சென்று வந்தாலும் இறுதியில் தன்னிடத்தேதான் வரவேண்டும்.

ஏனெனில், கடவுள் எங்கே என்று தேடுபவன் யார் என்று தேட வேண்டும். இப்படி தன்னைத் தேடும் வித்தையை வெளியேயுள்ள தீர்த்தங்கள், தலங்கள், பூஜை, வழிபாடு போன்றவை கற்றுத் தரும். எனவே, ஒரு ஆன்மிக சாதகன் தியானம், ஜபம் என்று தொடங்கி செய்வதெல்லாம் மனதை உள்முகப்படுத்துதலே ஆகும். அதாவது இந்த மனம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்று சிரத்தையோடு கவனத்தை திருப்புவதே ஆகும். வெளியிலிருக்கும் குருவும் உள்ளேயிருப்பதை பார்க்கச் சொல்லிக் கொடுக்கிறார். அப்படி பார்த்தபிறகு குருவுமில்லை. சீடனுமில்லை’’
‘‘என்னால் நான் யார் எனும் விசாரம் செய்ய முடியவில்லை. என்ன செய்வது’’

‘‘அதை ஈசனிடம் விட்டுவிடு. சரணாகதி செய்து விடு.’’‘
‘‘அப்படிச் செய்தால்’’


‘‘வைத்தியனிடம் ஒப்புக்கொடுத்த பிறகு சும்மாயிருக்க வேண்டும். அதற்குப் பிறகு என்ன என்று கேள்வி கேட்கக் கூடாது. அவ்வளவுதான். அதை ஈசன் பார்த்துக் கொள்வார்’’ என்றும் உபதேசிப்பார். ஆனால், பல நூற்றுக் கணக்கான கேள்விகளுக்கு மௌனம்தான் உபதேசமாக இருந்தது. இதயத்தோடு இதயம் பேசுங்கால் சொற்கள் எதற்கு என்றும் பலமுறை கூறியுள்ளார். எந்த சாதனையும் செய்ய முடியவில்லையே, நீங்கள் சொல்வதும் புரியவில்லையே என்று கூறிய அன்பர்களுக்கு, ‘‘இதோ இந்த அருணாசலத்தை வலம் வாருங்கள். போதும்.

இதுவே சிவம்’’ என்று கூறியதோடு மட்டுமல்லாது, ‘‘நாம் எவ்வாறு உடலை நான் என்று அபிமானிக்கிறோமோ அவ்வளவு பிரியமாக சிவபிரான் இந்த அருணாசல மலையை தனது தூல வடிவத் திருமேனியாக ‘நான்’ என்று அபிமானிக்கிறார்’’ என்று மலையின் மகிமையை வெளிப்படுத்துகிறார். இவ்வாறு ஒவ்வொரு யுகங்களிலும் மகரிஷிகள் அவதரித்த வண்ணம் இருப்பர். அவர்கள் காட்டும் மார்க்கத்தை இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

தொகுப்பு: கிருஷ்ணா

You may also like

Leave a Comment

3 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi