ஸ்ரீவைகுண்டம்: ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகம் தரம் வாய்ந்த ஒரு அருங்காட்சியகம் அமைக்க இன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த 2020-ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகம் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
அதன் ஒரு பகுதியாக கடந்த 2021-ம் ஆண்டு ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாலிகள், இரும்பு பொருட்கள், வெண்கல பொருட்கள், தங்கம், நெற்றிப்பட்டையம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் ஐந்தரை ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைத்து தற்போது பி சைட்டில் கண்ணாடி மூலம் உள்ளது உள்ளபடியே தோண்டப்பட்ட குழிகள் மூடாமல் அதன் மீது கண்ணாடி பேழைகள் அமைத்து அதன் வழியாக பொருள்களை பயணிகள் பார்க்கும் வண்ணம் காட்சி படுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளே விளக்குகள் பொறுத்தப்பட்டு பார்க்கும் பார்வையாளர்களுக்கு முதுமக்கள் தாழிகள், அதனுள் கிடைத்த பொருள்கள் தெரியும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சைட் மியூசியம் என்பது இந்தியாவில் முதல் முறையாக ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.