Monday, May 20, 2024
Home » வழிபாடுகளில் வெளியே தோன்றும் தோன்றா செயற்பாடுகள்

வழிபாடுகளில் வெளியே தோன்றும் தோன்றா செயற்பாடுகள்

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வழிபாட்டின் வேர்களைத் தேடி…4

ஒரு சமயத்தில் கடவுள் நம்பிக்கையும் வழிபாடுகளும் அதன் இரு கண்களாக விளங்குகின்றன. வழிபாட்டுச் செயற்பாடுகள் அல்லது வழிபாட்டுச் சடங்குகள் சமயச் செயல்பாடுகளாக இருந்தாலும், அவை சமூகச் செயற்பாடுகளாகவே விளங்குகின்றன. சமூகம் தரும் ஊக்கத்தில்தான் வழிபாடுகள் தொடர்கின்றன. சமூகத்தில் வழிபாடுகளை வரவேற்பில்லை, அவற்றைச் செய்வதற்கு மக்களுக்கு நேரம் இல்லை என்றால், அவை மெல்லமெல்ல குறைந்து மறைந்துவிடும். பின்னர் நடைபெறாது.

வழிபாட்டுச் செயற்பாடுகளின் தன்மைகள்

இறை வழிபாடுகளின் சமூக செயற்பாடுகளில் சில வெளியே தெரியும். இவை தோன்றும் செயல்பாடாகும் Manifest function ஆகும். சில வெளியே தெரியாத நுட்பமான செயல்பாடு ஆகும். இவற்றைச் தோன்றாச் செயற்பாடு Latent function என்பார் ராபர்ட் மேற்ட்டன் (தியரி ஆஃப் எ ஃபங்ஷன்)

தோன்றும் செயற்பாடு

வெளியே தெரியும் செயல்பாடுகள் என்பன வழிபாடுகள், நாள் வழிபாடு, வார வழிபாடு, மாத வழிபாடு என்று பல வகையில் நடத்தப்படும்போது, அது மக்களுக்கு குறிப்பிட்ட நம்பிக்கையையும், மன ஆறுதலையும் அளிக்கின்றது. விளக்கு பூஜை செய்தால் மாங்கல்ய பலம் கிடைக்கும். அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் செய்து வைத்து எல்லோருக்கும் திருமண விருந்து வைத்தால், திருமணம் ஆகாதவருக்கு திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை சமயப்பற்றை வளர்க்கிறது. சமயத்தோடு உண்டாகும் இணைப்பு வெளியே தோன்றும் செயல்பாடாகும். வெளியே தோன்றும் செயல்பாடு சமூகத்தின் குடும்பம், கல்வி, சமயம், ஊடகம் போன்ற பலவற்றிலும் அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஊடகம் என்பதில் அந்தக் காலத்தில் புராணங்கள் முதல்கொண்டு பல்வகை கலைகள், கதாகாலட்சேபம், பஜனை போன்றவற்றைச் சேர்க்கலாம். இன்று சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்கள் உட்பட ஏராளமான ஊடக செயல்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் சமூகத்தில் சில கொள்கைகளை சட்டங்களை விதிமுறைகளைக் கொண்டு வருவதற்காக தோற்றுவிக்கப்பட்டன.

தோன்றாச் செயற்பாடு

வெளியே தோன்றாத செயல்பாடு என்பது இறை வழிபாடுகள், பக்திச் செயல்பாடுகள் மூலமாக நடைபெறும் பிணைப்பும் இணைப்பும் ஆகும். தற்காலத்தில் சில பக்தர்கள் தங்கள் சொந்த செலவில் பல ஊர்களுக்கு மக்களை பெருங்கோயில்களுக்கு அழைத்துச் செல்லும் பழக்கம் தோன்றியுள்ளது. இரண்டு, மூன்று, ஐந்து, பத்து, ஐம்பது என்று அவரவர் சக்திக்கேற்ப பல பேருந்துகளில் கடவுள் பற்றியும் வழிபாடு பற்றியும் அதிகம் தெரியாத மக்களை பெரிய கோயில்களுக்கு அழைத்து வந்து, அவர்களை நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து நிறுவன வழிபாட்டு மரபுக்கு அறிமுகம் செய்வதைக் காண்கிறோம். இதில், வெளியே தோன்றும் செயல்பாடு என்பது அவர்களின் கடவுள் நம்பிக்கையை உறுதி செய்வதும், விரிவுபடுத்துவதும் ஆகும்.

ஆனால், தோன்றா செயல்பாடு என்பது அவர்களுக்குள் சகோதரத்துவத்தை சமயத்தின் அடிப்படையிலான பிணைப்பை ஏற்படுத்துவதாகும். இவர்கள் ஓரிரு முறை இலவசமாக வந்து பல ஊர்களில் இருக்கும் பெருங்கோயில்களை வந்து பார்த்த பிறகு, அடுத்து மெல்லமெல்ல தங்களுடைய சொந்த செலவில் வருவர். முதலில் கோயிலுக்கு வரும்போது சந்தித்த ஆட்களில் ஒரு சிலரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு சிறுசிறு குழுவாக வந்து இறைவனைத் தரிசிக்கத் தொடங்குவார்கள். பின்பு, இது ஒரு பழக்கமாகிவிடும். இது தோன்றாச் செயல்பாடு. முதலில், இலவசமாக அழைத்து வந்த தலயாத்திரை வழிபாட்டு முறையின் உள்ளே உறைந்திருக்கும் நுட்பமாகும்.

இதுவே, இலவசமாக முதலில் அவர்களை அழைத்து வந்ததற்கான நோக்கம் அல்லது இலக்கு எனலாம். இந்த நுண்ணறிவு யாருடைய கவனத்திற்கும் வராது. யாரும் இதுபற்றி சிந்தித்து இருக்க மாட்டார்கள். பக்தியை, தலயாத்திரை வழிபாடு மூலமாக மக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நுட்பமான பணி பிறர் அறியாமல், பிறர் கவனத்தை ஈர்க்காத வகையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பற்றி எவரும் சிந்தித்திருக்க மாட்டார்கள். பொதுவாக, தோன்றாச் செயல்பாடு என்பது மக்களிடம் இனம், மதம், மொழி ரீதியிலான சமூக பந்தத்தை வளர்க்கும். பிறர் அறியா வகையில், அவர்களுக்குள் ஓர் இணைப்பை நட்பை, பிடிப்பை, பிணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

மேலும், பயணத்தில் இடையூறு எதுவும் தோன்றினால் அதை சகித்துக் கொள்ளவும் பிரச்னைகள் ஏற்படும்போது அதனைப் பொறுத்துக் கொள்ளவும் சிக்கல்களைப் பொறுமையோடு நிதானத்தோடு தீர்க்கவும் மேற்கொண்டு செயல்படவும் அவர்களுக்கு உதவும், பக்தி உணர்ச்சி சார்ந்த பிணைப்பே (emotional bonding) இதற்கு அடிப்படைக் காரணம் ஆகும்.

இவர்கள், கூட்டம் கூட்டமாக தல யாத்திரை வந்து செல்லும்போது, பெரியபெரிய கோயில் களைப் பார்க்கும்போது, அவர்களுக்குள் ஏற்படும் பக்தி உணர்வு வெளியே தெரியும் செயல்பாடு என்றாலும்கூட, நாட்கள் செல்லச்செல்ல மனதுக்குள்ளே அவர்கள் தாங்கள் எல்லாம் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள் என்று கருதி சகோதர உணர்வோடும் சகிப்புத்தன்மையோடு பொறுமை மற்றும் நிதானத்தோடு ஒருவர் மீது ஒருவர் அன்பும் ஆதரவும் காட்டுவார்கள்.

தங்களுக்கும், அந்தக் கோயில்களுக்கும் இருக்கக்கூடிய பந்தத்தைப் படிப்படியாய் உறுதி செய்துகொள்வார்கள். முதலில் கோயிலுக்குள் வரும்போது ஏனோதானோ என்று வரும் இப்பயணிகள் நான்காம் ஐந்தாம் கோயில்களுக்கு நுழையும்போது பக்திப் பழங்களாக மாறிவிடுவார்கள். இறைவனின் மகிமையைப்பற்றி வாய் ஓயாமல் பேசுவார்கள். ஒன்பது, பத்தாவது கோயிலுக்குள் நுழையும் போது அவர்கள் முழுக்க முழுக்க அந்த கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாக அந்த கடவுளுக்காக தாங்கள் உயிரையும் கொடுக்க சித்தமாக இருப்பவர்களாக மாறிவிடுவார்கள்.

இறைவனையும் கோயிலையும் காக்கும் பக்தர்கள்

இலவசத் தல யாத்திரை என்பது வெளியே பக்தி வளர்ப்பதாக இருந்தாலும், உள்ளே அது இறைவன் நம்மை காப்பாற்றுவான் என்ற எண்ணத்தில் இருந்து, நான் இந்த இறைவனைக் காப்பற்ற வேண்டும் என்று சிந்திக்க தொடங்கி விடுவார்கள். நம் இறைவன், உறையும் திருக்கோயில்களை உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும். இவற்றைச் சீர்செய்ய வேண்டும். அடிக்கடி உழவாரப் பணிகள் மேற்கொண்டு நம்முடைய கோயில் களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனுடைய நிர்வாகம் சிறப்பாக நடக்க வேண்டும். அதனை நம்மில் சிலர் மேற்பார்வையிட வேண்டும் என்று அந்தக் கோயிலுக்கும் அவர்களுக்குமான உறவு வலுப்படும்.

கோயில்களின் மீது அவர்களுக்கு ஓர் உரிமை தோன்றிவிடும். கோயில்களையும் இறைவனையும் அவர்கள் உரிமை கொண்டாட தொடங்குவர். இதுவே தோன்றாச் செயல்பாடாகும். அவர்கள் தல யாத்திரை தொடங்கியபோது, இருந்த மன நிலைக்கும் இப்போது 10, 11 கோயில்கள் பார்த்த பிறகு இருக்கும் மனநிலைக்கும் இடையே பெரிய வேறுபாடு காணப்படும். கோயில்கள் தங்களுடையவை என்ற உரிமையும் உடைமையும் அவர்கள் எண்ணத்தில் தோன்றத் தொடங்கும்.

தீய செயல்பாடு

சில வேளைகளில் தோன்றாச் செயல்பாடு சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு மாறாக தீயதாக (Dysfunction) அமைந்து விடுவதும் உண்டு. தல யாத்திரை புறப்பட்டு வரும் காலங்களில் சிலர் சாதி, மொழி, ஊர், தொழில் அடிப்படையில் சிற சிறு குழுக்களாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்ற நிலைமையும் உண்டாகும். உணவு சரியில்லை, தங்குமிடம் சரியில்லை, சரியாக சாமி பார்க்க வில்லை, அவசரமா அவசரமாக அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டனர் என்று குற்றம் குறைகளை சுமத்தி தல யாத்திரை அழைத்துக்கொண்டு வந்தவர் மீது பாயத் தொடங்கிவிடுவார்கள். இது எதிர்பாராத தீய விளைவாக அமைந்துவிடும்.

இதனால், சமூகத்தில் ஓர் ஒழுங்கின்மையும் அமைதியின்மையும் பூசலும் உருவாகும். நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ஒரு வழிபாட்டு முறை இப்போது பல பிரச்னைகளுக்கு இட்டுச் செல்வதாக அமைவதும் உண்டு. தெருவில் சாமி ஊர்வலம், தேர்ப் பவனி, வரும்போது எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும் மிக அரிதாகவே இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடக்கும். இவ்வாறு நடைபெறாமல் இருக்க, தல யாத்திரையை ஏற்பாடு செய்தவர்கள் யாத்ரீகர்களை தெய்வத்தைப் பற்றியும் கோயிலைப் பற்றியும் மட்டுமே பேசவிட்டு மற்ற விஷயங்களைப் பேசவிடாமல் கவனமாக பார்த்துக்கொள்வர்.

சமயப் பிரச்சாரமாகும் வழிபாடு

ஒரு சமயம் தனது வழிபாடுகளின் மூலமாக பிரச்சாரத்தையும் செய்கின்றது. தம்முடைய சமயத்தில் இருந்துகொண்டே தமது சமயத்தைப் பற்றி விரிவாக அறியாதவர்களுக்கு புராணங்கள், கதைகள், அற்புதங்கள் பற்றி எடுத்துச் சொல்லி சமயத்தின் மீது ஒரு பிடிப்பு ஏற்படுத்த முயற்சி செய்கின்றது. இதற்காக எல்லோரும் வாங்கக் கூடிய அளவில் எளிய மலிவுவிலைப் பதிப்புகள் அச்சடித்து விநியோகிப்பதுண்டு.

எல்லோருக்கும் புரியும் மொழியில் எளிமையான மொழியில் சாமி கதைகள் சொல்வது சாமி பாடல்கள் பாடுவது அவற்றைச் சிறுவர்களும் பெண்களும் வந்து கேட்க ஏற்பாடுகளை செய்வதுண்டு. இவை நேரடியாக ஒரு சமயத்தை பற்றிய பிரச்சாரங்கள் ஆகும். இந்தப் பிரச்சாரங்கள் முடிந்தவரை வழிபாட்டு இடத்திலேயே நடைபெறும். ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ளே ஒரு சத்சங்கம் இருக்கும்.

கோயில்களில் அறிவிப்புப் பலகை

வழிபாட்டுத் தலங்களில் அங்கு வந்தவர்கள் மீண்டும் மீண்டும் வருவதற்காக அங்கு அடுத்த வாரம், அடுத்த மாதம் இடங்களில் நடைபெறும் விழாக்கள் சடங்குகள் பற்றிய அறிவிப்புகள், அறிவிப்புப் பலகையில் காணப்படும். அதனைப் படித்துவிட்டு தொடர்ந்து அது குறித்து ஆர்வத்தோடு வந்து இறைவனைப் பார்க்கவும் கலந்து கொள்ளவும் செய்வார்கள். மாதத்தின் முதல் நாள், தங்கத்தேர் இழுக்கப்படும் என்ற அறிவிப்பு இருந்தால், அந்த நாளில் அந்தக் கோயிலுக்கு வருவதற்கு சுற்றி இருக்கும் மக்கள் அல்லது முதன்முறை இக்கோயிலுக்கு வந்து செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவர். மாதப்பிறப்பு என்றைக்கு என்று விசாரித்து வைத்துக்கொண்டு அந்த நாளில் கோயிலுக்கு வந்து தங்கத் தேர் இழுப்பதைப் பார்த்து பக்திப் பரவசத்துடன் தேரில் வரும் இறைவனை வணங்குவார்கள்.

பின்பு, அங்கு சதுர்த்தி பூஜை குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்ற ஒரு அறிவிப்பு இருந்தால், அந்த நாளைக் குறித்து வைத்துக்கொண்டு மறந்துவிடாமல் அதே நாளில் வந்து சங்கடஹர சதுர்த்தி பூஜையில் விநாயகர் வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். ஆக, ஒருமுறை வந்தவர்கள்மீண்டும் மீண்டும் வருவதற்கும் வழிபாடுகள் மற்றும் இறைவனைப் பற்றிக் கூடுதலாக அறிந்து கொள்வதற்கும் இந்த வழிபாட்டு முறைகள் உதவுகின்றன. ஒருமுறை வழிபடத் தொடங்கியவர்கள் அடுத்தடுத்து வழிபடுவதற்கான வாய்ப்புகள் வழிபாட்டு இடங்களில் உருவாக்கப்படும்.

வழிபாடும் மனிதநேயமும்

வெளியே தோன்றும் செயல்பாடு என்பது சமயம் சார்ந்த வழிபாடாகவே கருதப்பட்டாலும், வழிபாட்டு இடங்களில் வேறு சில மனித நேயப் பணிகள் நடைபெறுவதும் உண்டு. கோயில்களில் நடைபெறும் உழவாரப்பணி, தெய்வத்திற்கு செய்யும் திருப்பணியாக கருதப்படுவதால் ஏழை எளிய மக்கள், படித்தவர்கள், மாணவர்கள் போன்றோர் மாதம்தோறும் ஒரு நாள் உழவாரப் பணியில் ஈடுபட்டுக் கோயிலைச் சுற்றி இருக்கும் புல், பூண்டு, புதர்களை அகற்றி சுத்தமாக்குவர். இன்னும் சில சமயங்களில் வழிபாட்டு இடங்களோடு சேர்ந்து பள்ளிக்கூடங்கள், அனாதை ஆசிரமங்கள், மருத்துவச் சேவை மையங்கள், முதியோர் நல விடுதிகள் போன்றவையும் செயல்படும். இத்தகைய மனித நேயப் பணிகளும் வழிபாட்டினை ஒட்டி வெளிப்படத் தோன்றக்கூடிய செயல்பாடுகள் ஆகும்.

விளக்குப்பூஜையின் சமூக, சமயச் செயற்பாட்டியல்பு

ஒரு தெருவில் விளக்கு பூஜை முதன்முறையாக நடத்தத் திட்டமிடப்படுகிறது. அது ஒரு சிறிய கோயில். தெருவின் முனையில் இருக்கும் ஒரு மாரியம்மன் கோயில். அந்தக் கோயிலுக்கு மிக அரிதாகவே பெண் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலில் ஒரு போதும் கூட்டம் கிடையாது என்ற நிலையில், ஒருநாள் ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை அன்று விளக்குப் பூஜை நடைபெறும். அன்று பெண்கள் விளக்கு, எண்ணெய், தீப்பெட்டி, உதிரிப்பூக்களோடு வரவேண்டும் என்று ஒரு அறிவிப்பு காணப் படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த பெண்களுக்குள் இந்த தகவல் பரவி, அவர்கள் அந்த கோயிலுக்கு வந்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்து, 25 ரூபாய் செலுத்தி விளக்குப் பூஜையின்போது சொல்ல வேண்டிய 108 போற்றி அடங்கிய ஒரு சிறு நூலை பத்து ரூபாய் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணிக்கு பெண்கள் எல்லாம் குளித்து முழுகி நல்ல உடை உடுத்தி, பூவைத்து கையில் பளிச்சென்று விளக்கிய விளக்கு, அதில் மஞ்சள் குங்குமம் வைத்து, அதன் உச்சியில் பூச்சூட்டி தனியாக எண்ணெயும் தீப்பெட்டியும் ஒரு பையில் உதிரிப்பூக்களையும் எடுத்துக்கொண்டு வந்து விட்டார்கள். அங்கு சாமியானா போடப்பட்டு வரிசையில் அவர்கள் உட்கார வைக்கப்படுகிறார்கள். முதல் நாள் 25 பெண்கள் இருக்கிறார்கள். எதிரே ஒரு அம்மா ஒரு மைக் முன்பு உட்கார்ந்து இருக்கிறார். விளக்கு பூஜை தொடங்கப்போகிறது வருகிறவர்கள் வாருங்கள் என்று ஒலி பெருக்கியில் அறிவிப்புச் செய்து விட்டு, ஒரு அரை மணி நேரம் கழித்து பூஜையைத் தொடங்கினார்கள்.

விளக்கேற்றிய பெண்கள், அந்த அம்மா சொல்லச் சொல்ல தங்கள் கையில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்து ஒவ்வொரு பூவாக எடுத்து விளக்கின் மீது தூவி 108 போற்றிகளையும் சொல்லிக்கொண்டே வந்தனர். பூஜை முடித்த பிறகு விளக்கைக் குளிரவிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர். இரண்டு மாதம் கழித்து இவ்விளக்கு பூஜைக்கு வருவோரின் எண்ணிக்கை 50 க்கு மேல் அதிகரித்துவிட்டது.

இப்போது, சில வகைகளில் பெண்கள் குழுவாக வரத் தொடங்கி விட்டனர். பக்தி பரவிவிட்டது. இறை நம்பிக்கை அதிகரித்துவிட்டது. இறை வழிபாடுகளில் மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது என்பது சமூகத்த்தில் தோன்றிய ஆக்கப்பூர்வமான மாற்றம் ஆகும். பெண்கள் தங்களுடைய மாங்கல்ய பலம் சிறக்கவும் வீடும் ஊரும் நன்மை பெறவும் விளக்குப் பூஜையைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்பது வெளியே தெரியும் செயற்பாடாகும்.

இவர்கள் மிகச் சரியாக ஒழுங்காக குறிப்பிட்ட நேரத்திற்கு வேண்டிய பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அமைதியாக வருகின்றனர். 108 போற்றிகளைச் சொல்லிப் பூவெடுத்துப் போட்டு பூஜை செய்கின்றனர். இப்போது 108 போற்றிகள் பலருக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. மேலும், வேறு பல சாமி பாடல்களையும் கற்றுக் கொண்டனர். ஒவ்வொரு முறையும் வரும்போது 4 வரி 10 வரி பாடல்களை நோட்டு கொண்டு வந்து எழுதி அந்த அம்மா சொல்லிக் கொடுக்க இவர்கள் பாடிப் பழகி ஏழெட்டு பாடல்களை மனப்பாடமாக படித்து விட்டனர்.

வீட்டில் இருக்கும் போதும் இந்தப் பாடல்களை அவர்கள் மெல்ல சொல்லி வருகின்றனர். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவதும் இந்தப் பாடல்களை அப்போது பாடுவதும் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதும் பிள்ளைகளோடு சேர்ந்து உட்கார்ந்து வீட்டில் பாட்டுப் பாடுவதுமாக பக்தி பரவசமாகிவிட்டனர்.

விளக்குப் பூஜையின் பெண்ணியக் கோட்பாடு

விளக்குப் பூஜையில் வெளியே தெரியாத செயற்பாடு என்ன என்றால், பெண்கள் மட்டுமே பங்கு பெறும் இந்த விளக்குப் பூஜை ஒரு பெண்ணியம் சார்ந்த செயல்பாடாக விளங்குகிறது. பொதுவாக, மதங்கள் பெண்களைச் சம உரிமை இல்லாதவர்களாக விலக்கப்பட்டவர்களாக வைத்துள்ளன. இவ்வாறு இருந்த நிலை மாறி, பெண்கள் கோயிலுக்கு வந்து ஒரு பூஜையைத் தாங்களே செய்யலாம் என்ற ஒரு நிலை ஏற்பட்டு இருப்பது அவர்களுக்குப் பெருமிதத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கின்றது. இப்பூஜை இறைவனுக்கும் அவர்களுக்கும் நேரடியான ஒரு இணைப்பை ஏற்படுத்துகிறது. மனத்தளவில் அவர்கள் கடவுளோடு தொடர்புடையவர்கள் ஆகின்றனர்.

விளக்குப்பூஜைக்கு போவது கோயில் இடம் என்பதாலும், அது ஒரு வழிபாடு என்பதாலும், கவுரவம் மிக்கதாகவும் கண்ணியமாகவும் உள்ளது. பெண்கள் வெளியே போய் வருவதற்கான ஒரு வாய்ப்பாகவும் (exposure) விளக்கு பூஜை அமைந்துவிட்டது. கடவுள் தங்களுக்கு நல்லதே செய்யும் என்ற நம்பிக்கை பெற்று அவர்கள் வாழ்வில் புதிய ஒளி தோன்றுகிறது.

இரண்டாவது பூஜையின் ரகசியம்

இப்பூஜையில் சமூகம் எதிர்பார்த்திராத தீய செயற்பாடு (Dysfunction) ஒன்றும் அரங்கேறியுள்ளது. பூஜைக்கு நால்வர் ஐவராக சிறுசிறு குழுக்களாக வந்ததன் காரணம் அவர்கள் சாதி, மொழி, ஊர், தொழில் அடிப்படையில் பிரிந்து விட்டனர். தெலுங்கு மொழி பேசுகிறவர்கள், தமிழ் பேசுகிறவர்கள், கன்னடம் பேசுகிறார்கள் என்றும், மதுரைக் காரர்கள், திருச்சிக்காரர்கள், திருநெல்வேலிகாரர்கள் என்றும், அரசு ஊழியர்களின் மனைவிமார், தனியார் வேலை செய்பவர்களின் மனைவிமார், தொழில் அல்லது வணிகம் செய்பவர்களின் மனைவிமார் என்றும் உயர் சாதியினர் ஒடுக்கப்பட்டவர் என்றும், பல வகையிலும் அவர்களுக்குள் குழு மனப்பான்மை தோன்றியது. இது ஒரு டிஸ் பங்க்ஷன் ஆகும். எதிர்பாராத தீய செயல்பாடு ஆகும்.

இதன் காரணமாக, ஒரே இடத்தில் விளக்குப் பூஜை நடத்தியவர்கள் பிரிந்து போய் இன்னொரு கோயிலில் விளக்குப்பூஜை செய்வதை தொடங்கிவிட்டனர். இப்பிரிவினையை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். இல்லையெனில் பின்னர், பூசலாக மாறலாம். அல்லது விளக்கு பூஜைக்கு வருவோரின் எண்ணிக்கை குறையலாம். வழிபாடு பெருகுவதாகப் பெருமைப்பட்டாலும் ஊர், தொழில், சாதி அடிப்படையிலான பிரிவினை வரவேற்கத்தக்கது அன்று. அது காலப்போக்கில் ஆபத்தாக முடியக்கூடும்.

நிறைவு

வழிபாடுகள் என்பது இறைவனுக்கும் மனிதனுக்குமான ஆழமான உறவை வெளிப்படுத்தும் ஒரு செயல்பாடு என்று நம்பப்பட்டாலும், வழிபாடு என்பது மனிதருக்குள் ஓர் ஒற்றுமையையும் பிணைப்பையும் ஏற்படுத்தக்கூடிய சமூகச் செயற்பாடு என்றும் புரிந்துகொள்ள வேண்டும். அதே வேளையில், மனிதர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடாக மாறினால், அதனை வளர விடக்கூடாது. பிரிவினை மிக அரிதாக எங்கோ ஒரு சில இடங்களில்தான் நடக்கின்றது என்றாலும், சமயச் சடங்கு என்பது உணர்ச்சி சார்ந்த (sensitive) வெளிப்பாடாகும்.

நாட்டுப்புற தெய்வ வழிபாடு களில் இத்தகைய பிரிவினை பெரிய கலவரங்களில் முடிகின்றது. ஊரே இரண்டுபடுதல், வன்முறையில் ஈடுபடுதல், வீடுகளுக்கு, வைக்கப் போருக்கு, வண்டிகளை தீ வைத்தல், இன்னார் இனியார் என்னாது வெட்டிச் சாய்த்தல் என்று ஒரு குழு மனப்பான்மையில் சில கலவரங்களை தோற்றுவித்துவிடுகிறது. குழு உளவியல் (mob psychology) விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஆபத்தான செயல்களில் இறங்கத் தூண்டிவிடும்.

ஆக, வழிபாடு என்பது ஒரு சமயத்தின் செயல்பாடாக இருந்தாலும்கூட அது வீரியமிக்க சமூக செயற்பாடாகும். வழிபாடு பெரும்பாலும் சமயம் சார்ந்த மக்களை ஒன்றிணைக்கவும் அவர்களுக்குள் சகோதரத்துவத்தையும் உரிமையையும் உடமையையும் உருவாக்கவும் உதவுகின்றது. சிறிய அளவில் அவர்களுக்குள் குழு மனப்பான்மை பிரிவினை போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

(இனி, ஆதி மனிதனின் வழிபாட்டுச் சடங்குகளுக்கும், நாகரீகம் பெற்ற மக்களின் வழிபாட்டுச் சடங்குகளுக்கும், இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளைக் காண்போம்)

தொகுப்பு: முனைவர் செ. ராஜேஸ்வரி

You may also like

Leave a Comment

9 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi