திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். ஆந்திராவில் கடந்த 13ம் தேதி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரேகட்டமாக நடந்து முடிந்தது. தேர்தலையொட்டி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே முதல்வர் ஜெகன்மோகன், முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆகியோர் பொதுக்கூட்டங்களை நடத்த தொடங்கினர். கடந்த ஜனவரி முதல் பிரசாரத்தை அதிகரித்தனர். குறிப்பாக தேர்தல் அறிவித்த நாள் முதல் கடந்த 11ம் தேதி வரை மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளில் இருவரும் போட்டிப்போட்டு வாக்கு சேகரித்தனர்.
இந்நிலையில் தேர்தல் ஓய்ந்த நிலையில் அரசியல் தலைவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 17ம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சொகுசு விமானத்தில் லண்டன் புறப்பட்டார். அவரது மனைவி பாரதியும் உடன் சென்றுள்ளார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் நேற்று முன்தினம் தனது மனைவி புவனேஸ்வரியுடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சிறப்பு விமானத்தில் அவர் சென்றதாக தெரிகிறது. அங்கு அவர் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டு சில நாட்கள் ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது.