Sunday, May 19, 2024
Home » ஆரோக்கியமான காலை உணவு அவசியம்!

ஆரோக்கியமான காலை உணவு அவசியம்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில், சிறந்த கல்வி நிலையம், மிகத் திறமையான ஆசிரியர்கள், வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதலாவதாக வரும் மாணவராக இருந்தாலும், காலை உணவை அவர் தவிர்க்கும்போது, அவர்களின் இயல்பான திறன் வெளிப்படுவதில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பால் மட்டும் குடித்துவிட்டு உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் காலை 10, 11 மணிக்குள் சோர்ந்துவிடுவார்கள். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது.

இப்படி மழலைப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தொடங்கிக் கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் எனப் பலரும் இன்றைக்குத் தவிர்க்கக்கூடிய ஒரு விஷயமாக உருவெடுத்திருக்கிறது காலை உணவு. எந்த அளவுக்கு காலை உணவு முக்கியம், அதைத் தவிர்ப்பதால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும், காலை உணவுக்குச் சிறந்தவை எவை என பார்ப்போம்.

தவிர்ப்பும் தவிப்பும்

ஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் பிறகு நாம் உண்பது (ஏறக்குறைய 10 மணி நேரம்) காலை உணவுதான். அதனால்தான் அதை ‘பிரேக்-பாஸ்ட்’ என்று அழைக்கின்றனர். அதாவது நீண்ட விரதத்தை உடைப்பது என்று அர்த்தம். பாரம்பரியமாக நமது வீடுகளில் செய்யப்படும் உப்புமா, இட்லி, பொங்கல் போன்ற காலை உணவுக்கு ஈடு இணையே இல்லை. இதன் தயாரிப்பிலும் சாப்பிடும் முறையிலும் சமச்சீரான சத்துகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது. இட்லியில் உளுந்தின் மூலம் மாவுச் சத்து, சட்னி, சாம்பாரோடு சேர்த்துச் சாப்பிடும்போது குறைந்த அளவில் கொழுப்பு, அதிக அளவில் புரதச் சத்து போன்றவை கிடைக்கின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் வீட்டில் தயாரிக்கப்படும் இத்தகைய ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லதல்ல.

பிணியோடு பணி செய்ய முடியுமா?

காலையில் 5 மணிக்கு எழுந்ததுமே ஒரு டம்ளர் காபி/டீ. அதன்பிறகு குளித்து, பூஜை முடித்ததும் ஒரு காபி/டீ. சமையல் முடித்துக் குழந்தைகளும், கணவரும் புறப்பட்டதும் ஒரு காபி/டீ. அப்புறம் துணிகளைச் சலவை செய்து முடித்தவுடன் நேரடியாகச் சாப்பாடுதான்… என்று பெருமையோடு பேசும் குடும்பத் தலைவிகள் பலர் இருக்கின்றனர். உணவுக்கு மாற்று காபி/டீ என்பது இவர்களுடைய நினைப்பு. ஆனால், இது உண்மை அல்ல.

பசி என்பதே ஒரு பிணிதான். அதற்கான மருந்துதான் உணவு. காபி/டீ, உணவுக்கு எந்த வகையிலும் மாற்று இல்லை எனும் நிலையில், பசிப் பிணி அப்படியேதான் இருக்கும். இதே நிலைமை தொடர்ந்தால் அவர்களால் பசியோடு வேலை செய்ய முடியாது. அசிடிட்டி போன்ற உபாதைகள் அவர்களுக்கு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.

குடும்பத் தலைவிகளின் நிலை இப்படி என்றால், வேலைக்குச் செல்பவர்களின் நிலை வேறு மாதிரி. உணவை ஒரு டப்பாவில் அடைத்துக்கொண்டு ஓடுவார்கள். வேலைக்குப் போனவுடன் டிபன் பாக்ஸைத் திறக்கக்கூட முடியாமல் வேலையில் மூழ்கிவிடுவார்கள். மதியம்தான் அவர்களால் டிபன் பாக்ஸைத் திறக்க முடியும். நாளடைவில் அவர்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும். `அனீமிக்’ என்னும் ரத்தசோகை நிலைக்குப் போவார்கள். நோய் எதிர்ப்பு ஆற்றலும் குறையும்.

உடல் எடையைக் குறைப்பதற்காகக் காலை உணவைத் தவிர்ப்பதாகக் கூறும் சில குடும்பத் தலைவர்கள், அதற்குப் பதிலாகக் கேக், சமோசா, பப்ஸ், சிப்ஸ் என விதவிதமாகச் சாப்பிட்டு, வீட்டில் சிற்றுண்டியில் கிடைக்கும் கலோரியைவிட அதிக அளவுக்குத் தின்றுவிடுவார்கள். ஆக, காலை உணவைக் குறைத்தால், அதைவிட அதிகமாக நொறுக்கு தீனிகளைச் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை மேலும் அதிகரிக்கவே செய்யும், நிச்சயம் குறையாது.

கை கொடுக்கும் சாலட்

வெகு தூரத்தில் இருக்கும் கல்லூரிகளுக்குச் சென்று படிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைக்கு நிறைய மாணவர்கள் இருக்கின்றனர். காலையில் 6 மணிக்கே அவர்களை அழைத்துச் செல்லும் பேருந்து வந்துவிடுகிறது. அதற்கும் முன்னதாக எழுந்து சமைப்பது இயலாத நிலையில், காலை உணவுக்கும், மதியச் சாப்பாட்டுக்கும் கல்லூரி கேன்டீன்களையே இவர்கள் பெரும்பாலோர் எதிர்பார்த்து இருக்கின்றனர். கல்லூரி கேன்டீன்களில் அவர்களுக்கு மாவுச் சத்தே அதிக அளவில் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இப்படிப்பட்டவர்கள் காலையில் வெள்ளரி, தக்காளி, கேரட் போன்ற காய்கறி சேர்ந்த சாலட்டை சாப்பிடலாம். முதல் நாள் இரவு சுட்ட சப்பாத்தியைச் சிறிது சூடுபடுத்தி காலையில் சாப்பிட்டுக்கொள்ளலாம். கொய்யா, சப்போட்டா, மாதுளை போன்ற பழங்களைச் சாப்பிடலாம். மாலையில் கல்லூரி முடிந்தவுடன் பேருந்தில் வரும்போதுகூட உலர் பழங்கள், பாதாம் பருப்பு, உப்புக் கடலை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது சிறந்த மாலைச் சிற்றுண்டியாக அமையும்.

அப்படியே வீட்டுக்கு வந்து, ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். அதன்பின் இரவு 8.30 மணிக்குள் இரவு உணவை முடித்து, ஒரு மணி நேரம் கழித்துப் படுக்கைக்குச் செல்லலாம். இப்படிச் செய்வதன் மூலம் இளைய தலைமுறைக்குச் சரிவிகித உணவும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்யவும் நேரம் கிடைக்கும். கொஞ்சம் மெனக்கெட்டால், நீண்ட நேரம் வேலை செய்யவும், ஆரோக்கியமாக வாழவும் வாய்ப்பு உண்டு.மூன்று வேளை உணவைத் தவிர்க்காமல் சாப்பிடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம், எந்தக் கலனில் வைத்துச் சாப்பிடுகிறோம்.

பிளாஸ்டிக்கை சாப்பிடாதீர்கள்

‘ஃபுட் கிரேட் பிளாஸ்டிக்’ என்று விற்கப்படும் டப்பாக்கள்கூடப் புளிப்பு சார்ந்த உணவை அடைத்து வைப்பதற்கு உகந்தவை அல்ல. முந்தைய தலைமுறையில் கண்ணாடி பாட்டில், மண் ஜாடியில்தான் ஊறுகாய் போட்டு வைப்பார்கள். ஆனால், இப்போதோ ஊறுகாயைப் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்தே விற்கிறார்கள்.அதே போல இட்லிக்கான மாவை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளுங்கள். அது தான் நூறு சதவீதம் சுகாதாரமானது. குழந்தைகள், பெரியவர்கள் அனைவருமே உணவை எவர்சில்வர் டிபன் பாக்ஸில் எடுத்துச் செல்லுங்கள். அதுதான் ஆரோக்கியமானது.

இட்லி மாவு என்றில்லை, புளிக்கக்கூடிய எந்தப் பொருளையுமே பிளாஸ்டிக் உறையில் அடைக்கக் கூடாது. குளிர்ச்சியான பழரசங்கள் தொடங்கிச் சுடச்சுடக் காபி, டீ, சாம்பார் என அனைத்தையுமே பிளாஸ்டிக் பாக்கெட்டில் ஊற்றித்தான் ஹோட்டல்களில் கொடுக்கிறார்கள். நாமும் கண்ணுக்குத் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பிளாஸ்டிக்கைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உடல் ஆரோக்கியத்துக்கு எதிரான இந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்தியாக வேண்டும்.

தொகுப்பு: லயா

You may also like

Leave a Comment

16 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi