Sunday, May 19, 2024
Home » திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!

திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!

by Francis

சேலம்: திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;

தீர்மானம் 1

இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதியளித்த ஜனநாயகப் பாதுகாவலர் கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி!

கூட்டாட்சிக் கொள்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில், இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் பெரும்பொறுப்பில் எவ்வித சமரசமுமின்றிப் பாடுபடும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில் முன்னெடுத்துச் செல்லும் கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த பத்தாண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்பட்ட, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் ஜனநாயகப் பாதுகாவலராகத் திகழ்ந்து வரும் நிலையில், தன்னால் வளர்த்தெடுக்கப்பட்ட இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு அனுமதி தந்து, அதனை மாநில உரிமை மீட்பு முழக்கமாக முன்னெடுக்கச் செய்த இளைஞர் அணியின் தாயுமானவரான கழகத் தலைவர்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்!

மாநிலங்களின் அதிகார உரிமைகள், சட்ட உரிமைகள், நிதி உரிமைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் ஒன்றிய பா.ஜ.க அரசு பறித்து வரும் நிலையிலும்கூட, தமிழ்நாட்டை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக முன்னேற்றுகிற வகையில், ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற ஒப்பற்ற சிந்தனையுடன் திராவிட மாடல் அரசைத் தலைமை தாங்கி நடத்தி வரும் இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் -கழகத் தலைவர் தளபதி அவர்களின் மக்கள் நலத் திட்டங்களையும், பொருளாதார வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து, ஒவ்வொரு குடும்பமும் அரசாங்கத்தின் திட்டங்களால் பயன்பெறும் வகையில், சிறப்பான நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் எண்ணப்படி இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு பெயர் பெறவும், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர்ந்திடவும், கழக இளைஞர் அணி அயராது பாடுபடும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3

மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்க்கும் விடியல் பயணம்!

கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள் பலவும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், தமிழ்நாட்டின் அடியொற்றி, பல மாநிலங்கள் பின்பற்றுகிற வகையிலும் புகழ் பெற்றுள்ளன. முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தலைமைச் செயலகத்திற்குச் சென்றவுடனேயே மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் என்ற மகத்தானத் திட்டத்திற்குக் கையெழுத்திட்டார் கழகத் தலைவர் அவர்கள். மகளிருடன், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள், அவருக்குத் துணை வருவோர் ஆகியோருக்கும் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் அளித்ததன் மூலம் 2023 டிசம்பர் மாதம் வரை இந்த விடியல் பயணம் திட்டத்தில் 404 கோடியே 6 லட்சம் முறை மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். திருநங்கையர் 24 லட்சத்து 43 ஆயிரம் முறையும், மாற்றுத்திறனாளிகள் 3 கோடியே 17 லட்சத்து 27 ஆயிரம் முறையும் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த விடியல் பயணத் திட்டம் தமிழ்நாட்டுப் பெண்களின் பயணச் செலவை மிச்சப்படுத்தி, மாதந்தோறும் சராசரியாக 1000 ரூபாய் அளவுக்கு சேமிப்பினை உயர்த்தியிருப்பதுடன், வேலைக்கான நேர்காணல்-சந்தைக்குச் சென்று பொருட்களை விற்றல் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளைத் தன்னம்பிக்கையுடன் தொடங்குவதற்கும் உந்துசக்தியாகத் திகழ்கிறது. பாலின சமத்துவம் போற்றும் திராவிட மாடல் அரசின் விடியல் பயணத் திட்டத்தை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 4

குடும்பத் தலைவியரின் உழைப்பை மதிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!

குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் பாடுபடும் இல்லத்தரசிகளின் உழைப்பை மதித்துப் போற்றிடும் வகையில், குடும்பத் தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் மகத்தான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் செயல்படுத்தி, ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 இலட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் கிடைக்கச் செய்து, இது உதவித் தொகையல்ல, உங்களின் உரிமைத் தொகை என அறிவித்து, காலங்காலமாக உழைத்து வரும் குடும்பப் பெண்களின் உரிமைக்கான மதிப்பை வழங்கி, அவர்கள் தங்களின் அன்றாடச் செலவினை எதிர்கொள்ளும் வகையில் மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கி வருவதுடன், இந்த உரிமைத் தொகையைப் பெற இயலாதவர்களில், தகுதி வாய்ந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்துத் தீர்வு காணும் பொறுப்பினை இளைஞர் அணியின் செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் அவர்களிடம் ஒப்படைத்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 5

மாணவர்களின் உடல் நலன் காத்து ஊக்கமளிக்கும் காலை உணவுத் திட்டம்!

பள்ளிகளுக்கு வருகை தரும் மாணவர்களுக்குப் படிப்புடன் உணவு என்பது திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த நூறாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், முட்டையுடன் கூடிய சத்துணவு என காலத்திற்கேற்ற முன்னேற்றங்களுடன் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வந்த நிலையில், தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் ஊட்டமிகு உணவு தேவைப்படுவதை நேரில் அறிந்து, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என இந்தியாவுக்கே முன்னோடியான திட்டத்தினை 31 ஆயிரத்து 8 அரசு தொடக்கப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி, 18 லட்சத்து 54 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று, உடல்நலனும் ஊக்கத்திறனும் பெறுவதவற்கு காரணமான மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களுக்கு இந்த மாநாடு தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 6

நாளைய தலைமுறையை வளர்த்தெடுக்கும் நான் முதல்வன் – புதுமைப் பெண் திட்டங்கள்!

திராவிட மாடல் ஆட்சியில் சிறந்து விளங்கும் உயர் கல்வியினை மேலும் செழுமைப்படுத்திடும் வகையில், ‘நான் முதல்வன்’ எனும் திட்டத்தின் வாயிலாக மாணவமணிகளுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தொழில் மற்றும் உயர் தர வேலைவாய்ப்புகளுக்கான பயிற்சி ஆகியவற்றை அளித்து, 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவமணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பலன் பெறச் செய்ததுடன், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் கல்லூரிக் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தினைச் செயல்படுத்தி, இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி அவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்களுக்கு இந்த மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 7

மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் திட்டங்கள்!

மக்களின் நல்வாழ்வினை உறுதி செய்திடும் வகையில், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை மாநகரம் முதல் குக்கிராமம் வரை மேம்படுத்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் மருத்துவக் கட்டமைப்பு மேலும் மேம்படுத்தப் பட்டிருப்பதுடன் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமானவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்படுவது, விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றும் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் வாயிலாக, விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள் உயிர் காக்கத் தேவைப்படும் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என அறிவித்து, 2 இலட்சம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கும் மனிதநேய முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்களுக்கு இந்த மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 8

நிதி நெருக்கடியிலும் மகிழ்ச்சிப் பொங்க வைத்த பொங்கல் பரிசுத் தொகுப்பு!

தமிழர் திருநாள் என திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் நன்னாளினை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு அடங்கிய தொகுப்புடன் 2 கோடியே 19 இலட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கி, மாநில அரசின் கடுமையான நிதி நெருக்கடிச் சூழலிலும் மக்களின் முகங்களில் மலர்ச்சியை ஏற்படுத்தி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிற நமது முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்களுக்கு இந்த மாநாடு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 9

வரலாறு காணாத மழையிலும் மக்களைக் காத்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலும் அருகில் உள்ள மாவட்டங்களிலும், தென்தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களிலும் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெய்த வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என இந்திய ஒன்றிய பிரதமரிடம் மாண்புமிகு முதலமைச்சர் நேரில் கோரிக்கை வைத்தும் புறக்கணிக்கப்பட்ட சூழலில், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு உரிய அளவில் பேரிடர் நிதி எதுவும் வழங்காத நிலையிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் துயர் துடைக்கும் வகையில் மாநில அரசின் நிதியிலிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா 6,000 ரூபாய் வழங்கிய கருணையுள்ளம் கொண்ட கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த மாநாடு, தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 10

நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் இலட்சிய வழி நடப்போம்!

நவீனத் தமிழ்நாட்டின் சிற்பியாம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில், பல்வேறு குழுக்களை அமைத்து, பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் கலைஞரின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் விழாக்களை நடத்தி வருவதுடன், சென்னை, கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், மதுரை அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என தமிழ்நாடெங்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் போற்றும் நிலையான அமைப்புகளை உருவாக்கித் தந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்களுக்கு இந்த மாநாடு தனது நன்றியினை உரித்தாக்கி, முத்தமிழறிஞர் ஊட்டிய மொழி-இன உணர்வுடன் இளைஞர் அணி தன் பயணத்தைத் தொடரும் என்ற உறுதியினை வழங்குகிறது.

தீர்மானம் 11

தமிழ்நாட்டை முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக்கிய முதலமைச்சர்!

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் வீழ்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, கடந்த இரண்டாண்டுகளில் மிகப் பெரிய அளவில் முதலீடுகளையும் தொழிற்சாலைகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு -2024-ஐ வெற்றிகரமாக நடத்தி, 6 இலட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள 26 இலட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் பரவலான முதலீடுகள் பெருகவும், பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்திடவும் வழிவகைக் கண்டு, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நோக்கி, முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டைப் புதிய பாய்ச்சலுடன் முன்னேறிடச் செய்யும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, இந்த மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 12

இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றிவரும் மாண்புமிகு அமைச்சர்

செஸ் ஒலிம்பியாட் முதல், கேலோ இந்தியா வரை தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக்கும் வகையில் பன்னாட்டுத் தரத்துடன் பல போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வருவதுடன், தமிழ்நாட்டு இளைஞர்கள்-இளம்பெண்கள் ஆகியோரின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், மாவட்டங்கள் தோறும் விளையாட்டரங்குகள், போட்டிகள் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக மேற்கொண்டு வரும் மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்-கழக இளைஞர் அணிச் செயலாளர் அவர்களின் அயராத முயற்சிகளை இம்மாநாடு பாராட்டுவதுடன், உலகளாவிய போட்டிகளில் பதக்கம் வெல்லக்கூடிய வகையில், தமிழர்களை ஊக்குவிக்கும் பயிற்சிகளை கழக இளைஞர் அணி முன்னெடுக்கும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 13

உயிர்பலி நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது!

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துத் தங்கை அரியலூர் அனிதா முதல் சென்னை ஜெகதீஸ்வரன் வரை 22 உயிர்களைப் பறித்துள்ள நீட் தேர்வு, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பல மாணவர்களின் உயிர்களைப் பறித்து வருவதுடன், ஒன்றிய பா.ஜ.க அரசின் ஆதரவு பெற்ற பயிற்சி நிறுவனங்கள், ஒவ்வொரு மாணவரிடமும் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் அடைவதற்கு மட்டுமே துணை போகிறது என்பதால், நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும் என்கிற உறுதியினை வழங்கி, 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதியின்படி, நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் பேராதரவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இரண்டு முறை நிறைவேற்றியும், ஜனநாயக மாண்புகளை மதிக்காமல் செயல்பட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு முழுவதும் 2023 ஆகஸ்ட் 20 அன்று உண்ணாநிலை அறப்போரை முன்னெடுத்த இளைஞர் அணி, அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு-நம் இலக்கு என்ற முழக்கத்துடன் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முதல் கையெழுத்துடன் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நேரடியாகவும் ஆன்லைனிலும் நடத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 50 இலட்சம் கையெழுத்துகளுக்கும் அதிகமாகப் பெற்று மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியுள்ள நிலையில், நீட் ஒழிக்கப்படும்வரை ஜனநாயக முறையிலான போராட்டங்களையும், சட்ட வழியிலான போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி கொடுக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொடூர மனப்பான்மையை இந்திய அளவில் அம்பலப்படுத்தி, நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றியை முழுமையாகப் பெற்றே தீரும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 14

குலக்கல்வி முறையைப் புகுத்தும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட்டம்

தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பு என்பது தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி வரை சிறந்து விளங்குவதுடன், தர வரிசையில் இந்தியாவின் முதல்
100 உயர்கல்வி நிறுவனங்களில் 18 தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாக இருப்பதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்.) 51.4 விழுக்காடாக உள்ளது. இது இந்திய சராசரி அளவைவிட மிக அதிகமாகும். இத்தகைய கல்விப்புலம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பது, இந்தி-சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பது, தொழிற்கல்வி என்ற பெயரிலும் விஸ்வகர்ம யோஜனா என்ற பெயரில் குலக்கல்வி முறையைக் கொண்டு வருவதும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது என்பதால், தேசிய கல்விக் கொள்கையைக் கழக இளைஞர் அணி முழுமையாக எதிர்ப்பதுடன், தமிழ்நாட்டில் மட்டுமின்றிப் பிற மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போக்கை எதிர்த்து மாணவர்-இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய அளவிலான போராட்டங்களை இளைஞர் அணி முன்னெடுக்கும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 15

மாநிலப் பட்டியலுக்குக் கல்வி-மருத்துவத்தை மாற்றுக!

நீட் தேர்வு, முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடங்களுக்கான இடஒதுக்கீடு, தேசிய கல்விக் கொள்கை வாயிலாக இந்தி ஆதிக்கம் என பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்திலும் ஒன்றிய அரசின் ஆதிக்கம் நீடிப்பது என்பது அந்தந்த மாநிலத்தின் மொழி- பண்பாடு-திறன் மேம்பாடு ஆகியவற்றைச் சிதைக்கும் நோக்கத்தில் இருப்பதாலும், இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு நேரெதிரானது என்பதாலும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியையும் மருத்துவத்தையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கான சட்ட வழிமுறைகளை இளைஞர் அணி முன்னெடுக்கும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 16

முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தர்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியிலும் ஆராய்ச்சிக் கல்வியிலும் தனித்துவத்துடன் திகழ்ந்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு ஒன்றிய பா.ஜ.க. அரசினால் நியமிக்கப்படும் ஆளுநர்களின் தன்னிச்சையான போக்கினால் பெரும் பாதிப்புக்குள்ளாவதுடன், ஊழல் புகார்களும் காவிமயமாக்கும் தன்மையும் அதிகரித்து வருகின்றன. கல்வியில் மதவாதம்-வெறுப்புணர்வு, நிர்வாகத்தில் ஜனநாயக விரோதம்-ஊழல் ஆகியவைத் தொடர்ந்து கொண்டிருப்பதால், தமிழ்நாட்டின் செம்மையான உயர்கல்வி-ஆராய்ச்சிக் கல்வி நீடித்திட, பல்கலைக்கழக வேந்தர் எனும் உயர் பொறுப்புக்கு, நியமனப் பதவியில் உள்ள ஆளுநருக்குப் பதிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதலமைச்சரே தகுதியானவர் என்பதால், பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் அவர்கள் செயல்படுவார் என்கிற தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவை இளைஞர் அணி ஆதரிப்பதுடன், அதனை விரைந்து நிறைவேற்றிட, இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 17

ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிடுக!

மக்களாட்சியின் மாண்பு என்பது ஜனநாயகப் பூர்வமான தேர்தல் களத்தில் வாக்காளர்களாகிய மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றத்தின் சுயாட்சிமிக்கச் செயல்பாடுகளேயாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சியில்லாத மாநில அரசுகளை, நியமனப் பதவியான ஆளுநர் பதவியைக் கொண்டு செயல்படவிடாமல் தடுக்க முயற்சித்து, ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்துவதற்குத் திட்டமிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கினைக் கண்டிப்பதுடன், ஆளுநர் பதவி என்ற `தொங்கு சதை’யை நிரந்தரமாக அகற்றுவதே, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தீர்வு என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 18

தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திடு

இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்-ஒன்றிய அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையை, முற்றிலுமாக மாற்றிய 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டில் அமைந்துள்ள தென்னக ரயில்வே, என்.எல்.சி, பி.ஹெச்.இ.எல்., ஆவடி கன ரக வாகனத் தொழிற்சாலை, ராணுவ ஆடைத் தயாரிப்பு நிறுவனம், ரயில் பெட்டித் தொழிற்சாலை மற்றும் தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தேசிய வங்கிகளான இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் திட்டமிட்டுத் திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதன் மூலம், தமிழ்நாட்டு இளைஞர்களை வஞ்சிப்பதுடன், பிற மாநிலத்தவருடன் பகையுணர்வை வளர்க்கும் போக்கையும் மேற்கொண்டு வருவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு சார்ந்த நிறுவனங்கள், அலுவலகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான ஆண்-பெண் விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை அளித்துப் பணியிடங்களில் நியமித்திட வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 19

மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் பொறுப்புக்கு வந்த பிரதமர்களின் ஆட்சிக்காலங்களில் யூனியன் பிரதேசங்கள் பலவும் மாநிலங்களாகத் தகுதிபெற்றன. பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஜார்கண்ட், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் உருவாகின. பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தெலங்கானா மாநிலம் உருவானது. ஒவ்வொரு ஆட்சியிலும் மாநில அந்தஸ்து என்பது மதிப்பு வாய்ந்ததாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில், இந்திய வரைபடத்தின் தலைப்பகுதியில் உள்ள மாநிலமான ஜம்மு-காஷ்மீர் தனக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இழந்ததுடன் மாநிலம் என்ற தகுதியையும் இழந்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிளக்கப்பட்டிருக்கிறது. மாநிலத் தகுதியை ஒரு நிலப்பகுதி இழக்கும்போது, அது ஆளுநர் அல்லது துணை நிலை ஆளுநர் எனும் ஒன்றிய அரசின் நிர்வாகப் பொறுப்பின் அதிகாரத்திற்கு ஆட்படுவதும், யூனியன் பிரதேசங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தால்கூட ஆளுநர்கள் அதனை ஆட்டிப்படைப்பதையும் அருகிலுள்ள புதுச்சேரி உள்படப் பல யூனியன் பிரதேசங்களில் பார்க்கிறோம். எனவே, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், மாநிலங்களை நகராட்சிகளைப் போல நடத்த நினைக்கும் ஒன்றிய பா.ஜக. அரசின் வல்லாதிக்கப் போக்கைக் கண்டித்தும் இந்த மாநில உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 20

கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிடுக!

மாநிலங்களின் ஒன்றியமாகத் திகழும் இந்தியா, உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நோக்கி முன்னேற வேண்டுமென்றால், மாநில அரசுகள் வலிமை கொண்டவையாகத் திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் 1969-ஆம் ஆண்டு முதன் முதலாக முதலமைச்சரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நீதியரசர் ராஜமன்னார் தலைமையிலான குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளைப் பெற்று, ஆலோசனைகள் மேற்கொண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1974-ஆம் ஆண்டில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களிலும் மாநில சுயாட்சிக்கான குரல் ஒலித்து வருகிறது. கூட்டாட்சி அடிப்படையிலான இந்திய ஒன்றிய அரசு, சுயாட்சிமிக்க மாநில அரசுகள் என்பதே ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும். அதிகாரக் குவிப்பைத் தகர்த்து, அதிகார பரவலாக்கத்தை முன்னெடுக்கும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய மாநில சுயாட்சி தீர்மானத்தின் அடிப்படையில், தற்போதைய தேவைகளையும் இணைத்து, மாநில அரசுகளின் அதிகாரத்தை வலிமைப்படுத்திட வேண்டும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 21

அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கைப்பாவையாக்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!

ஜனநாயக நாட்டில் மக்களின் கடைசி நம்பிக்கை சட்டமும் நீதியும்தான். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அடையாளத்துக்காக ஒரு செங்கோலை வைத்துவிட்டு, சட்டம் நீதியின் ஆட்சி எனும் உண்மையான செங்கோலை, வில்லாக வளைத்து, அதில் தனது கைப்பாவையாக மாற்றி வைத்துள்ள அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை போன்ற அம்புகளைத் தொடுத்து, பா.ஜ.க. அல்லாத ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் மீதும், பா.ஜ.க.வை எதிர்க்கின்ற கட்சிகள் மீதும் வன்மத்துடன் பாய்ச்சுகின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியல் போக்கிற்கும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலை எடுத்தால், அவர் மீதான வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ‘தூய்மைப் பட்டம்’ அளிக்கும் ‘வாஷிங் மெஷின் பா.ஜ.க.’ அரசின் இரட்டை வேட செயல்பாடுகளுக்கும் இந்த மாநாடு வன்மையானக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 22

நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம்!

ஒன்றிய ஆளுங்கட்சியின் எதேச்சதிகார செயல்பாடுகளை ஜனநாயகத்தின் உயர்ந்த இடமான நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட காரணத்தால், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை நோக்கி ஒரே கூட்டத் தொடரில் 146 மக்களவை-மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்துள்ள பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிப்பதுடன், 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இத்தகைய சர்வாதிகார சக்திகளை முழுமையாக வீழ்த்திட, இந்த மாநாடு உறுதியேற்கிறது.

தீர்மானம் 23

இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம்.

10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சமையல் சிலிண்டர் விலை, பெட்ரோல்-டீசல் விலை ஆகியவற்றைக் கடுமையாக உயர்த்தி, மக்களை வாட்டி வதைப்பதும், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வதாரத்தைப் பாதிக்கச் செய்ததுமே வேதனை மிகுந்த சாதனைகளாக இருக்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காகும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், ஏழை-எளிய மக்களை நடுஇரவில் நடுரோட்டில் நிறுத்திய ஒன்றிய பா.ஜக. அரசு, கறுப்புப் பணத்தையும் ஒழிக்கவில்லை, கறுப்புப் பணத்தை ஒழித்து, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் போடுவதாகக்கூறி, சல்லிப் பைசாவையும் போடவில்லை. தனது வாக்குறுதிகள் அனைத்திலும் தோல்வியடைந்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, மக்களுக்குச் செய்த துரோகங்களை மறைக்க, மதவாத அரசியலை முன்னெடுத்து, அயோத்தி இராமர் கோவிலை வைத்து வாக்குகள் பெற்றுவிடலாம் என நினைப்பது ஆன்மிகவாதிகளையும் ஏமாற்றும் செயலாகும். நாட்டில் உள்ள இந்துக்களில் பெரும்பான்மையான மக்களை 10 ஆண்டுகாலமாக ஏமாற்றிவிட்டு, இராமர் கோவிலைக் காட்டி, இந்துக்கள் ஓட்டுகளை வாங்கிவிடலாம் என அரசியல் கணக்குடன், கடவுளையும் ஏமாற்ற நினைக்கும் இந்து மக்களின் உண்மையான எதிரியான பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வீடு வீடாக அம்பலப்படுத்தும் பரப்புரையை இளைஞர் அணி மேற்கொள்ளும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 24

பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திடும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்!

கலவரத் தீயில் அரசியல் குளிர்காய்வதற்காக, மக்களை விறகுக் கட்டைகள் போல எரிக்கும் தன்மையுடன் ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது என்பதற்கு, ஆண்டுக்கணக்கில் பற்றி எரியும் மணிப்பூர் மாநிலக் கலவரமும், அந்த இடத்திற்கு இந்திய ஒன்றிய பிரதமர் அவர்கள் இதுநாள்வரை நேரில் செல்லாமல் தவிர்த்து வருவதுமே சான்றாகும். நாடு முழுவதும் மதவெறி, வெறுப்பரசியல், மாநில உரிமைகள் பறிப்பு, அரசியல் பழிவாங்கல், சிறுபான்மையினர் மனங்களில் அச்சத்தை விதைத்தல், உணவு அரசியல், நவீனத் தீண்டாமை, மொழி ஆதிக்கம் உள்ளிட்டவற்றைத் தீவிரப்படுத்தி, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் பன்முகத்தன்மைக்கும் எதிரான கொள்கைகளால் பத்தாண்டு காலம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், இந்தியாவைச் சீர்கெடச் செய்து வருவதுடன், தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை அடியோடு வீழ்த்திட, மாண்புமிகு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்கள் முன்னெடுக்கும் தேர்தல் களங்கள் அனைத்திலும் இளைஞர் அணி முன்களப் போர்வீரர்களாகச் செயல்படும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

 

தீர்மானம் 25

நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான சூளுரை

சமூக நீதி- மத நல்லிணக்கம்-சமத்துவம்-மாநிலங்களின் உரிமைகள்-தாய்மொழி வளர்ச்சி, பரவலான பொருளாதாரக் கட்டமைப்பு, மனித உரிமை இவற்றைக் கொள்கைகளாகக் கொண்ட இயக்கங்களின் ஒருங்கிணைப்பான ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்குவதிலும், வழிகாட்டுவதிலும் முன்னணி பங்காற்றி வருபவரும், மனிதநேய சக்திகளை ஒன்றிணைத்தால், பாசிசத்தை வீழ்த்திக் காட்ட முடியும் என 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டியவருமான திராவிட மாடல் முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், இயங்கும் கழக இளைஞர் அணி, கழகத் தலைவரின் கட்டளைக்கேற்ப 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் முன்னின்று செயலாற்றி, தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, ‘ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்’ என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் எனச் சூளுரைக்கிறது.

 

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi