Sunday, June 16, 2024
Home » வரும் 16ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

வரும் 16ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதுதொடர்பாக, தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: மிக்ஜாம் புயல், பெருமழைக்கு பின்னர் சென்னை மாநகரம் தற்போது மீண்டெழுந்து உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முதல்வர் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் அவரது ஈடுபாட்டின் காரணமாக சென்னைக்கு வர இருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. புயலுக்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக இன்றைக்கு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாக திரும்பி இருக்கிறார்கள்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரண தொகையாக ரூ.6 ஆயிரம் அறிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் தாங்கி கொள்ள முடியாமல் தமிழ்நாட்டில் இருக்கும் சில எதிர்க்கட்சிகள் அரசின் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். கடந்த 2021ம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்த போது, தமிழ்நாடு கொரோனாவின் கொடும்பிடியில் சிக்கி இருந்தது. அன்றைக்கு வடமாநிலங்களில் கங்கையில் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன.

டெல்லி மாநகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் எல்லாம் ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்தார்கள். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் முதல்வரின் சீரான தலைமையில் அவரது முழு ஈடுபாட்டோடு கொரோனா பேரிடர் நடவடிக்கைகளை திமுக அரசு மிக சிறப்பாக மேற்கொண்டது. முதல்வரே கவச உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். டெல்லியில் உட்கார்ந்துகொண்டு மணியை ஆட்டுங்கள், கையை தட்டுங்கள் என்று சொல்லவில்லை. களத்தில் இறங்கி முதல்வர் பணியாற்றினார் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஒரு இயற்கை பேரிடர் ஏற்பட்டால் எப்படி கையாள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக அரசு அன்றைக்கு செயல்பட்டது.

கொரோனா பேரிடரை எதிர்கொண்டது போன்றுதான் இந்த பேரிடரிலும் திமுக அரசு முன்னணியில் இருந்து போராடியது. தலைவன் என்பவன் முன்னணியில் இருந்து போராடுபவனாக இருக்க வேண்டும். முதல்வர் கொரோனா பேரிடரில் எப்படி முன்னணியில் இருந்தாரோ, அதேபோன்று இந்த பேரிடரிலும் முதல்வர் முழுமையாக களத்தில் இருந்தார். ‘எங்களுக்கு ஓட்டு போட்டவர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். எங்களுக்கு ஓட்டு போடாதவர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்று நிச்சயம் வருத்தப்படும் வகையில் எங்களுடைய பணிகள் இருக்கும்’ என்று முதல்வர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். இந்த வெள்ளத்திலும் அரசியலை பார்க்காமல் அனைவருக்கும் திமுக அரசு ஒட்டுமொத்தமாக களம் இறங்கி இந்த பேரிடரை சமாளித்து இருக்கிறது.

சென்னை மாநகரை பொறுத்தவரையில் 2015ம் ஆண்டு வந்த வெள்ளப்பெருக்கை அன்றைய ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு மோசமாக கையாண்டார்கள் என்பதையும், தற்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இன்றைக்கு உயிரிழப்புகள், சேதாரம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை ஆங்கில பத்திரிகையின் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சென்ற ஆட்சியில் ஜெயலலிதா படத்தையோ, எடப்பாடி பழனிசாமி படத்தையோ போட்டு நிவாரண பொருட்கள் வழங்கியது போன்று இந்த ஆட்சியில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டக்கூடிய வேலைகளை செய்யாமல் நிவாரண பொருட்களை வழங்கி கொண்டிருக்கிறோம்.

2015ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது அதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். வெள்ள சேதத்தை பார்த்து அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழ்நாட்டுக்கு செல்லாதீர்கள் என்று சொல்லக்கூடிய வகையில் நிலைமை மோசமாக இருந்தது. அப்போது நிவாரண பணிகளில் ஒருங்கிணைப்பு இல்லை என்று ஐகோர்ட் சுட்டிக்காட்டியது. 2015ம் ஆண்டு மழை நிவாரண பணிகளுக்கு ரூ.10,250 கோடி நிதி வேண்டும் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒன்றிய அரசிடம் கேட்டார். அவர் அன்றைக்கு மக்களுக்கு வழங்கிய நிவாரண தொகை ரூ.5 ஆயிரம்.

இன்றைக்கு ரூ.5,200 கோடிதான் கேட்டிருக்கிறோம். ஆனால் ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்குகிறோம். இந்த நிவாரணத்தை ஒன்றிய அரசுதான் வழங்குகிறது என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார். வெள்ளம் வந்தபோது கமலாலயத்தின் கதவுகளை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தவர்கள் எல்லாம், வெள்ளம் வடிந்த பின்னர் வெளியே வந்து அறிக்கைகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முழங்கால் அளவு தண்ணீரில் நின்றுக் கொண்டு பேட்டி அளித்துவிட்டு சேலத்துக்கு சென்றுவிட்டார். இன்றைக்கு இந்த நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சொல்கிறார். ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஒருவர் சொல்கிறார். ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மற்றொருவர் சொல்கிறார்.

நான் அண்ணாமலையிடம் கேட்டுக்கொள்வது, நீங்கள் ஒன்றிய அரசிடம் பேசி தமிழ்நாடு அரசு கேட்டுள்ள நிதியை பெற்று தர வேண்டும். ஏற்கனவே ஜிஎஸ்டி நிலுவைத்தொகைக்காக தொடர்ச்சியாக போராடி கொண்டிருக்கிறோம்.
2014-15 முதல் 2021-22 வரையில் ஒன்றிய அரசின் நேரடி வரி பகிர்வாக நாம் கொடுத்திருப்பது ரூ.5.16 லட்சம் கோடி. இதே காலக்கட்டத்தில் வரி பகிர்வாக ஒன்றிய அரசிடம் நாம் பெற்றிருப்பது ரூ.2.08 லட்சம் கோடிதான். தற்போது தமிழ்நாடு அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசிடம் பெற்று தரும் வேலையை அண்ணாமலை முதலில் செய்ய செய்துவிட்டு, அதற்கு பின்னர் அவருடைய விமர்சனங்களை முன் வகைக்கலாம்.

சென்னையை பொறுத்தவரையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும். இதற்கு ‘டோக்கன்’ வழங்கும் பணி 16ம் தேதி தொடங்கும். அடுத்த 10 நாட்களில் இந்த பணி நிறைவடையும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட வட்டங்களில் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணத்தொகை கிடைக்கும். நிவாரண தொகை வழங்குவதற்கான ஆதாரமாக ரேஷன் அட்டை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பாதிக்கப்படுபவர்கள் அரசிடம் முறையீடு செய்யலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் செலுத்தியபோது புகார்கள் வந்தது. ஏதேனும் கடன் இருந்தால் வங்கிகள் அந்த தொகையை பிடித்தம் செய்துக் கொள்கிறார்கள். தற்போது கஷ்டத்தில் இருக்கும் மக்கள் கையில் பணம் நேரடியாக போய் சேர வேண்டும். வங்கிகளில் பணம் செலுத்தி அவர்கள் பிடித்தம் செய்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையாது என்பதால்தான் வங்கி கணக்கில் செலுத்தாமல் நேரடியாக கொடுக்கிறோம்.இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

* உயிர் சேதங்களை திமுக அரசு தவிர்த்துள்ளது: அரசியல் உள்நோக்கத்திற்காக எதிர்க்கட்சிகள் அவதூறு பிரசாரம்
2015 வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள், பலியானவர்களின் எண்ணிக்கை 289. 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் 10 நாட்கள் கழித்தும் மின்சாரம் வராத நிலை இருந்தது. அரசு மற்றும் தனியார் சொத்துகள் பெருமளவில் சேதமடைந்தன. தற்போது அதுபோன்ற சூழ்நிலை ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பில் கவனம் செலுத்தினோம். இதன்மூலம் உயிர் சேதங்களை தவிர்த்துள்ளோம். 2011ம் ஆண்டு தானே புயல் கடலூர் மாவட்டத்தை சூறையாடியது. அந்த நேரத்தில் அதிமுகவின் பொதுக்குழுவை நடத்திக் கொண்டிருந்தார்கள். 2017ம் ஆண்டு வந்த ஒக்கி புயலில் கன்னியாகுமரி நிலை குலைந்தது.

அப்போது அதிமுகவினர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருந்தார்கள். 2018ம் ஆண்டு கஜா புயல் டெல்டா மாவட்டத்தை தாக்கியது. அன்றைக்கு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கோயில் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தார். இன்றைக்கு களத்தில் நின்று பணியாற்றி உயிர் சேதங்களை திமுக அரசு தவிர்த்து இருக்கிறது. ஆனால் அரசியல் உள்நோக்கத்துக்காக எதிர்க்கட்சியினர் அவதூறு பிரசாரத்தை செய்கிறார்கள். மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு நடைபெற்றது என்பதை அமைச்சர் கே.என்.நேரு விரிவாக சொல்லி விட்டார். நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை. எங்களுடைய பணி வெளிப்படையானது. எனவே இதில் வெள்ளை அறிக்கை கேட்பது என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

You may also like

Leave a Comment

3 + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi