Saturday, May 25, 2024
Home » வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம்: வேலுமணி, எடப்பாடி, ஓபிஎஸ்சை தொடர்ந்து தங்கமணிக்கும் சிக்கல்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம்: வேலுமணி, எடப்பாடி, ஓபிஎஸ்சை தொடர்ந்து தங்கமணிக்கும் சிக்கல்

by kannappan

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.85 கோடி மதிப்புள்ள 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தவறை செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள், யாரும் தண்டனைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி பதவியேற்ற 100 நாளை தாண்டி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. திமுக தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழகத்தில் ஊழல் செய்த அமைச்சர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதையடுத்து, உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இரண்டு அமைச்சர்கள் வீடுகளிலும் முறைகேடாக சொத்து வாங்கி குவித்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து மீண்டும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் தன்னை குற்றவாளியாக சேர்க்க சதி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பிரச்னை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் எதிர்க்கட்சி தலைவர் கூறி வருகிறார். நீதிமன்ற உத்தரவுபடி விசாரணை நடைபெறுகிறது. தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக ஆளுநரை சந்தித்து மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, சென்னை, புளியந்தோப்பு பகுதியில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரியத்தின் 9 மற்றும் 11 மாடிகள் கொண்ட குடியிருப்புகள் தரம் இல்லாமல் கட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொட்டால் சிணுங்கி தாவரத்தை பார்த்திருப்போம், தொட்டால் உதிரும் சிமென்டை அதிமுகவினர் கண்டுபிடித்து ஊழல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில், ஓ.பன்னீர்செல்வம்  மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார். இப்படி தினசரி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பல்வேறு முறைகேடுகளில் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பால்வளத் துறை அமைச்சர்  சா.மு.நாசர் ஆகியோர் நேற்று, திருவள்ளுர் மாவட்டம், அத்திப்பட்டு,  வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கிடங்குகளை  நேரில் சென்று ஆய்வு செய்தனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன்,  மேலாண்மை இயக்குநர் சண்முகம் மற்றும் தலைமை பொறியாளர்கள் உடனிருந்தனர். இந்த ஆய்வின்போது, வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.85 கோடி என்றும் அமைச்சர்கள் கூறினர். இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழகாட்டுதலின்படி, 100 நாட்களை கடந்து மின்சார வாரியத்தில்  பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். அதில், சிறப்பாக வடசென்னை அனல் மின் நிலையம்  அலகு-1, 100 நாட்களை கடந்து தொடர் மின்சார உற்பத்தியை செய்து   சாதனை படைத்து வருகிறது.  இந்த சாதனை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது 2013-14-க்கு பிறகு 100 நாட்களைத் தாண்டி தொடர் மின்சார உற்பத்தியினை செய்து வருகிறது. இந்த நேரத்தில் ஒரு வருத்தப்படக் கூடிய  செய்தி, நிலக்கரி கிடங்கில் இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்க்கப்பட்டதில் வடசென்னை அனல் மின் நிலையத்தில்  மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம்  இருக்கிறது.  இந்த இருப்பை சரிபார்க்க கூடிய பணியை இயக்குநர் (உற்பத்தி), இயக்குநர் (விநியோகம்) மற்றும் தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய  மூன்று பேர் சேர்ந்து கடந்த 6 மற்றும் 9ம் தேதியும் ஆய்வு செய்தனர்.  அந்த ஆய்வின் அடிப்படையில்  2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி  இருப்பில் இல்லை என்ற தகவல் வரப்பெற்றுள்ளது. இது முதற்கட்ட ஆய்வு.  தொடர்ந்து முழுவதுமாக ஆய்வு  செய்து என்னென்ன முறைகேடுகள் நடந்திருக்கின்றன, எப்படி இந்த நிலக்கரி  இருப்பு பதிவேட்டில் இருப்பதற்கும், கையிருப்பில் இருப்பதற்கும் வித்தியாசம்  வருகிறது.  இதில்  என்ன தவறு நடந்திருக்கிறது  என்பதை முழுவதுமாக கண்டறியப்பட்டு நிச்சயம் யாராக இருந்தாலும் அவர்களின் மீது  தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இதேபோல், தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையங்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் அறிக்கை பெற்றவுடன் அதன் உண்மை நிலவரங்கள்  தெரிவிக்கப்படும்.  இந்த இருப்பு விவரம் 31.03.2021 வரை பதிவேட்டில் எடுக்கப்பட்ட கணக்குகளின் அடிப்படையில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி  இருப்பில் இல்லாமல் இருக்கிறது. இதனுடைய மதிப்பு ரூ.85 கோடி இருக்கும். யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள், யாரும் தவறுகளில் இருந்து தப்பிக்க முடியாது.  நல்ல உழைக்கக்கூடிய அதிகாரிகள், மின்வாரியத்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களுடைய உழைப்பெல்லாம் வீணடிக்கப்பட்டு சீர்கெட்ட நிர்வாகத்தால் 1 லட்சத்து, 59 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மின் கட்டணம்  சரியான வகையில் மின் உற்பத்தி செய்யப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்க, சேவை செய்யக்கூடிய வாரியத்தில் இவ்வளவு பெரிய தவறுகள், முறைகேடுகள் நடந்து இருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார். நிலக்கரி மாயமானதாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதால், இது குறித்து தனி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 1991-1996ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போதும் நிலக்கரி ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நிலக்கரி முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நிலக்கரி மாயமானது எப்படி?தமிழ்நாட்டில் உள்ள எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி அனல்மின்நிலையங்களுக்கு ஒடிசா மாநிலத்தில் இருந்து நிலக்கரி வாங்கப்படுகிறது. இந்தோனேஷியாவில் இருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. ஒடிசாவில் இருந்து தமிழக அரசே கொள்முதல் செய்கிறது. வெளிநாட்டில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறது. நிலக்கரி அனைத்துமே துறைமுகம் வந்தடைகிறது. அங்கிருந்து கண்வேயர் பெல்ட் மூலம் எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அதில் கடந்த 3 மாதத்தில் எவ்வளவு நிலக்கரி பயன்படுத்தப்பட்டது, எவ்வளவு மீதம் இருக்கிறது என்று கணக்கிடப்பட்டபோதுதான் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது தெரியவந்துள்ளது. ஒரு கப்பலில் 70 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வரலாம். அப்படி என்றால், 3 கப்பலில் இருந்து கொண்டு வரப்படும் அளவுக்கான நிலக்கரி மாயமாகியுள்ளது. இது இந்தோனேஷியா அல்லது ஒடிசாவில் இருந்து கப்பலில் கொண்டு வராமல், கொண்டு வந்ததாக கணக்கு காட்டினார்களா அல்லது கடந்த சில மாதங்களாக கப்பலில் கொண்டு வரப்படும் நிலக்கரி குறைவாக கொண்டு வரப்பட்டிருக்கலாம். ஆனால் கணக்கில் அதிகமாக காட்டியிருக்கலாம். இதன் மூலமும் மாயமாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும். எண்ணூர் அனல் மின்நிலையத்தில் ஆய்வு செய்தபோதுதான் இவ்வளவு மாயமானது தெரியவந்தது. அதேபோல தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையத்திலும் ஆய்வு செய்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்….

You may also like

Leave a Comment

three × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi