Saturday, May 18, 2024
Home » ராணி எலிசபெத்தின் மறைவுக்கு முன் நீடித்த சண்டை, சச்சரவுகள்; இங்கிலாந்து அரச குடும்பத்தின் விரிசல் முடிவுக்கு வந்தது: வில்லியம் – கேத், ஹாரி – மேகன் ஒன்றாக வந்ததால் மக்கள் மகிழ்ச்சி

ராணி எலிசபெத்தின் மறைவுக்கு முன் நீடித்த சண்டை, சச்சரவுகள்; இங்கிலாந்து அரச குடும்பத்தின் விரிசல் முடிவுக்கு வந்தது: வில்லியம் – கேத், ஹாரி – மேகன் ஒன்றாக வந்ததால் மக்கள் மகிழ்ச்சி

by kannappan

லண்டன்: இங்கிலாந்து அரச குடும்பத்தின் இருந்த விரிசல் முடிவுக்கு வந்ததால், சகோதரர்கள் வில்லியம் – கேத், ஹாரி – மேகன் ஜோடிகள் ஒன்றாக வந்ததால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் வரும் 19ம் தேதி வரை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் விவரங்களை பங்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் (96), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வியாழக் கிழமை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். ராணி எலிசபெத் மறைவு குறித்த செய்தி அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. லண்டனில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டுள்ளனர். இந்த நிலையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் (3) – மறைந்த டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி, அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டாதால் (இனவாத பிரச்னை), அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறி, மனைவியுடன் அமெரிக்கா சென்று விட்டார். ஆனால் முதல் மகன் வில்லியம் – கேத் தம்பதி இங்கிலாந்து அரச அரண்மனையில் வாழ்ந்து வந்தது. தற்போது ராணி எலிசபெத் மறைந்ததால், அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பேரனான ஹாரி – மேகன் தம்பதி வருவார்களா? என்ற கேள்வி ஐரோப்பிய நாடுகளில் பரபரப்பாக பேசப்பட்டது. ராணி எலிசபெத் இறப்பதற்கு முன்பு அவரை காண்பதற்கு மனைவி மேகன் மார்க்கலை அழைத்து வர வேண்டாம் என்று தனது இளைய மகன் ஹாரியிடம் இளவரசர் சார்லஸ் (இப்போது மூன்றாம் சார்லஸ் மன்னர்) கூறியதாக பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மகாராணி இறப்பதற்கு முன்பு, அவருடன் இருக்க வேண்டும் என்று நெருங்கிய உறவினர்கள் பலர் பால்மோரல் கோர்ட்டுக்கு விரைந்த நிலையில், ஹாரி மட்டும் கடைசியாக வியாழன் அன்றுதான் அங்கு வந்தார். அதேபோல, வெள்ளிக்கிழமை அன்று முதல் ஆளாக அங்கிருந்து ஹாரி கிளம்பினார். இதற்கு காரணம் முதல் மகன் வில்லியமுக்கும் ஹாரிக்கும் இடையே மோதல்கள் நீடித்தன என்று கூறப்படுகிறது. இதன் மூலம், ஹாரி ராஜ குடும்பத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பது தெளிவானது. இவ்வளவு சோகமான நேரத்தில், ஹாரி – மேகன் விவகாரம் அரச குடும்பத்தில் புயலை கிளப்பியது. இந்நிலையில் தனது மகன்களான சகோதரர்கள் வில்லியம் – ஹாரியிடம் மன்னர் சார்லஸ் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். இருவரும் தங்களது மனைவிகளுடன் விண்ட்சர் நடைபயணத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், தனது மனைவியுடன் வருவதற்கு ஹாரி முட்டுக்கட்டை ேபாட்டார். கடந்த கால கசப்பான அனுபவங்கள் அவரை மிகவும் நோகடித்தன. அதனால் ராணி எலிசபெத்தின் நிகழ்வுகளில் தனது மனைவியுடன் பங்கேற்பதை கடைசி வரை தவிர்த்து வந்தார். எப்படியோ தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி ஹாரியை அரச குடும்பத்தினர் சம்மதிக்கவைத்தனர். கிட்டதட்ட 11 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் சகோதரர்கள் வில்லியம் – ஹாரி ஆகியோர் தங்களது மனைவிகளுடன் ராணியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக பொதுவெளியில் தம்பதிகளை பார்க்காத இங்கிலாந்து மக்கள், முதல் முறையாக பொதுவில் மீண்டும் பார்த்ததை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். துக்க தினத்திலும் ஒரு நன்மை நடந்துள்ளதாக கூறினர். ராணியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்க வின்ட்சர் தோட்டத்தின் வாசலில் நின்றிருந்த நூற்றுக்கணக்கான மக்களும், வில்லியம் – கேட், ஹாரி – மேகன் தம்பதிகளை அருகருகே பார்த்து கைகுலுக்கு தங்களது அன்பை பகிர்ந்து கொண்டனர். இரண்டு ஜோடிகளும் கிட்டத்தட்ட 40 நிமிடம் நடைப்பயணமாக சென்று ராயல் எஸ்டேட்டின் வாயிலில் மலர் அஞ்சலி செய்தனர். தற்போது ஹாரி – மேகன் இணைவால் அரச குடும்பத்தில் முக்கியமான திருப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஹாரி மற்றும் மேகனுடன் பேசிய அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘சகோதரர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் மீண்டும் அரண்மனையில் ஒன்றாக வசிப்பதற்கு மீண்டும் வாய்ப்பு ஏற்படும். இவர்களின் இணைவானது ராணியின் விருப்பமாக இருந்திருக்கலாம்’ என்றார்.‘ஆபரேஷன் லண்டன் பாலம்’: ராணி எலிசபெத்தின் இறுதிசடங்கானது சம்பிரதாய மற்றும்  அரசியலமைப்பு விதிகளின்படி நடத்தப்பட வேண்டும் என்பதால் வரும் 19ம் தேதிதான் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ‘ஆபரேஷன் லண்டன் பாலம்’ என்ற பெயரில் வரும் 19ம் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த விபரங்களை பக்கிங்ஹாம்  அரண்மனை வெளியிட்டுள்ளது. அதனால் இன்று முதல் வரும்  நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை இங்கே பார்க்கலாம்:செப். 11: ஸ்காட்லாந்தில் உயிரிழந்த ராணி எலிசபெத்தின் உடல், பால்மோரல் தோட்டத்தில் உள்ள பால்ரூமில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இன்று காலை எடின்பர்க் நகருக்கு கொண்டு செல்லப்படுகிறது. கிராமங்கள், அபெர்டீன் மற்றும் டண்டீ நகரங்கள் வழியாக சாலை மார்க்கமாக ராணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் ஸ்காட்லாந்தில் உள்ள மன்னரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு ராணியின் உடல் இன்று மாலை வந்து சேரும். ஹோலிரூட்ஹவுஸில் உள்ள சிம்மாசன அறையில் ராணியின் சவப்பெட்டி  வைக்கப்படும். அதேநேரம் இன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் காமன்வெல்த் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு மன்னர் விருந்தளிப்பார்.செப். 12: மூன்றாம் சார்லஸ் மன்னர் மற்றும் அவரது மனைவி கமீலாவும் நாடாளுமன்றத்தில் நடக்கும் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்பார்கள். அதன்பின் அரச தம்பதிகள் எடின்பரோவுக்கு செல்வார்கள். ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு செல்லும் அவர்கள், அங்கு நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். அதன்பின் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை எடின்பர்க்கின் ராயல் மைல் வழியாக செயின்ட் கில்ஸ் கதீட்ரலுக்கு எடுத்துச் செல்லும் ஊர்வலம் நடைபெறும். பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்பு அளிக்கப்படும். செப். 13: செயின்ட் கில்ஸ் கதீட்ரலில் இருந்து ராயல் விமானப்படை விமானம் மூலம் லண்டனுக்கு அருகிலுள்ள விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணியின் உடல் கொண்டு செல்லப்படும். இதற்கிடையில், மன்னரும் மற்றும் அவரது மனைவியும் பெல்ஃபாஸ்டுக்கு செல்வார்கள். அவர்கள் வடக்கு அயர்லாந்தின் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, ராணியின் இரங்கல் செய்தியைப் பெறுவார். அதன் பின்னர் லண்டன் திரும்புவார்கள்.செப். 14: பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து பாராளுமன்றத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு ராணி எலிசபெத்தின் சவப்பெட்டியை ராணுவ வாகனம் சுமந்து செல்லும். அதன் பின்னால் மன்னர் தலைமையிலான குடும்பத்தினர் செல்வார்கள். கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி, ராணியின் உடலுக்கு மதச் சடங்குகளை செய்வார். அதன்பின் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்பளிக்கப்படும். தொடர்ந்து 4 நாட்கள் பலத்த பாதுகாப்புடன் ராணியின் உடல் அங்கு வைக்கப்பட்டிருக்கும். செப். 16: மன்னரும் அவரது மனைவியும் வேல்ஸ் நகருக்கு வருகை தருவார்கள். ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய நான்கு நாடுகளுக்கும் சென்றுவிட்டு திரும்புவார்கள். செப். 19: ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு நடத்தப்படும். இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறுதிச் சடங்கிற்குப் பிறகு, ராணியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியானது செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தின் விண்ட்சருக்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பின்னர் நடக்கும் நிகழ்வுகள் பின்னர் அறிவிக்கப்படும். மன்னர் ஜார்ஜ் – 4 நினைவு தேவாலயத்தில், அவரது ராணியின் கணவர் இளவரசர் பிலிப், அவரது சகோதரி இளவரசி மார்கரெட், அவர்களின் தாயார் எலிசபெத் மற்றும் தந்தை ஜார்ஜ் – 5 ஆகியோர் அடிக்கம் செய்யப்பட்ட இடத்தில் ராணி எலிசபெத்தின் உடலும் அடக்கம் செய்யப்படும்….

You may also like

Leave a Comment

8 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi