Tuesday, May 14, 2024
Home » மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன

மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன

by Neethimaan

சேலம், மார்ச் 17: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார். இதனையடுத்து தலைவர்களின் சிலைகள், படங்கள் மறைக்கப்பட்டன. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், ஒரேகட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து, தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாதுமே உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருந்த தலைவர்களின் படங்கள் அறக்கப்பட்டு, விளம்பர பாதகைகள் மறைக்கப்பட்டன. மேலும், சேலம் அண்ணா பூங்காவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சிலைகள் திரையிட்டு மறைக்கப்பட்டன.
இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், அதன் பீடம், கொடி மரங்கள் ஆகியவை துணி மூலம் மறைக்கப்பட்டது.

மேலும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி அலுவலகங்கள் மூடப்பட்டதுடன், மக்கள் பிரதிநிதிகளின் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன. மாநகரில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள், ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ், போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். முன்னதாக, சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. மாவட்டத்தில் 14,56,299 ஆண் வாக்காளர்கள், 14,71,524 பெண் வாக்காளர்கள் மற்றும் 299 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 85 வயதிற்கு மேல் 25,577 வயதுமுதிர்ந்த வாக்காளர்களும், 25,160 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை, 8,23,336 ஆண் வாக்காளர்கள், 8,25,354 பெண் வாக்காளர்கள் மற்றும் 221 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 16,48,911 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 1,249 வாக்குச்சாவடி மையங்களில், 3,257 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 264 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும், மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் 33 பறக்கும் படைகளும், 33 நிலை கண்காணிப்பு குழுக்களும், 11 வீடியோ பார்வை குழுக்களும், 11 வீடியோ கண்காணிப்பு குழுக்களும், 3 ஊடக சான்றிதழ் காண்காணிப்பு குழுக்களும், 11 கணக்கு சரிபார்ப்பு குழுக்களும் மற்றும் ஒரு தினசரி அறிக்கை சமர்ப்பிக்கும் குழு ஆகிய 7 வகையான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைகளில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்படும். தேர்தல் பணியில் சுமார் 15,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ₹50 ஆயிரம் வரை ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். தங்கம் மற்றும் வெள்ளியை பொறுத்தவரை, அதற்கான ஆவணங்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டால், அதுகுறித்த புகார்களை தெரிவிக்க ஏதுவாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் தங்கள் புகார்களை 1800-425-7020 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0427-2450031, 0427-2450032, 0427-2450035 மற்றும் 0427-2450046 ஆகிய தொலைபேசி எண்களிலும் மற்றும் 94899 39699 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும் தெரிவிக்கலாம். அத்துடன், e-Vigil என்ற இணைய வழி ஆப் மூலமும் புகார்கள் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் மீது 100 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காண தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார். முன்னதாக, தேர்தலையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, டிஆர்ஓ மேனகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) ஜெகநாதன், (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன், போலீஸ் துணை கமிஷனர்கள் பிருந்தா, மதிவாணன், ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

4 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi