Thursday, May 9, 2024
Home » மறக்க வேண்டியதும் மறக்கக் கூடாததும்…

மறக்க வேண்டியதும் மறக்கக் கூடாததும்…

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் குறளின் குரல்-மறதி மனிதனின் வரம். தன் வாழ்வின் கடந்த காலம் முழுவதையும் ஒருவன் ஒரு செய்தி விடாமல் ஞாபகம் வைத்துக்கொண்டிருந்தால் வாழ்க்கை நடத்த முடியுமா? ஞாபகச் சுமையிலிருந்து மனிதனைக் காப்பாற்ற இயற்கை ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறது. நம் மூளை, தானாகவே சிலவற்றை மறக்கிறது. கடும் துயரத்திற்கு ஆட்பட்ட மனிதர்கள் அந்தத் துயரம் தங்களுக்கு நேர்ந்த காலத்தில் உள்ள அதே மனநிலையில் தொடர்ந்து இருப்பதில்லை. காலப்போக்கில் அந்தத் துயரத்தை மறக்கவே செய்கிறார்கள்.‘உடலில் உப்பும் தண்ணீரும் சேரும்போது எல்லாத் துயரமும் மறந்துபோகும்’ என்று பெரியவர்கள் சொல்வது இந்தக் கண்ணோட்டத்தில்தான். இயற்கையின் ஏற்பாடு அப்படி. இல்லாவிட்டால் தொடர்ந்து வாழ்வது எப்படி?என்றாலும், எல்லாவற்றையும் அப்படி மறப்பது சரியல்ல. சிலவற்றை எப்பொழுதும் ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான் வேண்டும். வேறு சிலவற்றை உடனடியாக மறப்பதும் அவசியம். எதையெல்லாம் மறப்பது சிறந்தது என்றும், எதை மறக்காமல் இருக்க வேண்டும் என்றும் வள்ளுவப் பெருந்தகை ஆராய்கிறார்.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று. (குறள் எண் 108)ஒருவர் முன்னர் செய்த நன்மையை மறப்பது அறமல்ல. ஆனால் ஒருவர் செய்த தீமையை, தீமை செய்யப்பட்ட அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது.பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.(குறள் எண் 152)ஒருவர் நமக்குச் செய்த தீமையைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதை முற்றிலும் மறந்துவிடுவது பொறுத்துக்கொள்வதை விடவும் சிறந்தது.மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனால் வரும்.(குறள் எண் 303)யாரிடத்தும் சினம் தோன்றினால் அவ்விதம் சினம் கொள்ளாமல் அந்தச் சினத்தை மறந்துவிட வேண்டும். ஏனென்றால் தீமையான விளைவுகள் அந்தச் சினத்தாலேயே ஏற்படும். திருக்குறள் மட்டுமல்ல, நம் புராணங்களும் மறதியைப்பற்றிப் பேசுகின்றன. மகாகவி காளிதாசன் எழுதிய புகழ்பெற்ற சமஸ்கிருத நாடகமான சாகுந்தலத்தில், ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்துவது மறதிதான். காந்தர்வ விவாகம் செய்துகொண்ட பின் மீண்டும் கானகம் வந்து அவளை அழைத்துச் செல்வதாகக் கூறி மன்னன் துஷ்யந்தன் விலகிச் சென்றுவிடுகிறான். அந்தக் காலகட்டத்தில் சகுந்தலை இருக்குமிடத்திற்கு வருகிறார் சீற்றத்திற்குப் பெயர்பெற்ற முனிவரான துர்வாசர். தன்னை வரவேற்காமல் துஷ்யந்தன் நினைவில் ஆழ்ந்திருக்கும் அவளைக் கண்டு கடும் கோபம் கொள்கிறார்.ஞான திருஷ்டியால் அவள் துஷ்யந்தன் நினைவில் தோய்ந்திருப்பதை அறிகிறார். துஷ்யந்தன் அவளை முற்றிலுமாக மறக்கக் கடவது என்று சபித்துவிடுகிறார். அந்த சாபத்தால் ஏற்பட்ட துஷ்யந்தனின் மறதி, பின்னர் அந்த மறதி மறைய துர்வாசர் தரும் சாப விமோசனம் என நாடகக் கதை அதன்பின் விறுவிறுப்போடு சுவாரஸ்யமாக வளர்கிறது. சாபத்தால் துஷ்யந்தனுக்கு ஏற்பட்ட மறதி, இன்றைய மருத்துவ விஞ்ஞானம் ‘செலக்டட் அம்னீஷியா’ என்று சொல்லும் மறதியோடு ஒப்பிடக்கூடியது.தனித்தமிழ்த் தந்தை எனப் போற்றப்படும் மறைமலை அடிகள் சமஸ்கிருதத்திலும் பெரும்புலமை பெற்றிருந்தார் என்பதும் காளிதாசனின் சாகுந்தல நாடகத்தை, அவர் தமிழாக்கம் செய்துள்ளார் என்பதும் பரவலாக அறியப்படாத தகவல். கர்ணன் கதையிலும் மறதி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தான் யார் என்பதை மறைத்து, தன்னை அந்தணன் எனக் கூறிக்கொண்டு, அந்தணர்களுக்கு மட்டுமே வில்வித்தை கற்பிக்கும் பரசுராமரிடம் சீடனாகச் சேர்கிறான் கர்ணன். குரு பரசுராமர் களைப்போடு ஒருநாள் சீடன் மடியில் படுத்து உறங்கும்போது அசையாமல் அமர்ந்திருக்கும் கர்ணன் தொடையை ஒரு வண்டு துளைக்கிறது. காலை அசைத்தால் குருவின் உறக்கம் கெட்டுவிடும் என்று வலியைப் பொறுத்துக் கொண்டு காலை அசைக்காமல் இருக்கிறான் கர்ணன்.ஆனால், வண்டு துளைத்து குருதியின் ஈரம்பட்டுக் கண்விழிக்கும் பரசுராமர் திடுக்கிடுகிறார். இத்தனை வலியை அந்தணனால் தாங்க இயலாது என்பதால் கர்ணன், அந்தணன் அல்ல எனக் கண்டுபிடித்துவிடுகிறார். போர்க்களத்தில் மிக முக்கியமான தருணத்தில் கர்ணன் தன்னிடம் கற்ற வில்வித்தை அவனுக்கு மறந்துபோகும் என பரசுராமர்  சபிக்கிறார்.அதனால்தான் அர்ச்சுனனோடு கர்ணன் போர் நிகழ்த்தும்போது, இறுதியில் ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் அவனுக்கு அவன் கற்ற வித்தை முற்றிலும் மறந்துபோகிறது. அதுவே கர்ணனின் தோல்விக்கும், பின்னர் அவன் இறப்புக்கும் காரணமாகிறது என்கிறது மகாபாரதம். மகாபாரதத்தில் வரும் கச்சதேவயானி கதையிலும் மறதி இடம்பெறுகிறது. அசுர குருவான் சுக்ராச்சாரியாருக்கு “அமிர்த சஞ்சீவினி’’ மந்திரம் தெரியும். அதனால் தேவாசுர யுத்தத்தில் எந்த அசுரன் இறந்தாலும் அவனைத் தன் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தின் மூலம் மீண்டும் உயிர்ப்பித்துவிடுகிறார் அசுரகுரு.ஆனால், போரில் இறக்கும் தேவர்களை உயிர்ப்பிக்க யாருமில்லை. தேவர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது. எனவே எவ்விதமாவது அந்த மந்திரத்தைக் கற்று வருமாறு பிரகஸ்பதியின் மகன் கச்சனை தேவர்கள் அனுப்புகிறார்கள். அவனும் தான் யார் என்பதை மறைத்து, தந்திரமாக அந்த மந்திரத்தைக் கற்கிறான். சுக்ராச்சாரியாரின் மகளான தேவயானி கச்சனைக் காதலிக்கிறாள். தன்னை மணக்குமாறு வேண்டுகிறாள். திகைத்த கச்சன் குருவின் மகள் சகோதரிக்கு சமானம் எனக்கூறி, அவளை மணக்க மறுக்கிறான். சீற்றமடைந்த தேவயானி, அவன் கற்றுக்கொண்ட மந்திரம் சமயத்தில் அவனுக்கு மறந்துபோகக் கடவது எனச் சாபமிடுகிறாள். சாபத்தால் ஏற்பட்ட மறதி காரணமாக, தேவர்கள் நினைத்தது நடக்காமல் போகிறது. அதன் பின்னரே தேவர்களுக்குச் சாகாத நிலைமை ஏற்படவேண்டி, அமிர்தத்திற்காகப் பாற்கடல் கடையப்பட்டது என்கிறது புராணம்.ஆக கர்ணன் மறதி, துஷ்யந்தன் மறதி, கச்சன் மறதி என எல்லாமே சாபத்தால் விளைந்த மறதிகள்தான்.  `நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’ என்ற வரி இலக்கிய உலகில் புகழ்பெற்றது. தலைவன் தன்னை மறந்தாலும் தன்னால் தலைவனை மறக்க இயலவில்லை என்ற பொருளுடைய இந்த வரி சிலப்பதிகாரத்தில் வரும் கானல்வரிச் செய்யுளில் இடம்பெற்றுள்ளது. மாதவி தன்னை விட்டுவிட்டு இன்னொருவனை நினைக்கிறாள் போலும் எனக் கோவலன் எண்ணுவதும், பின்னர் அதன் காரணமாகவே அவன் மாதவியை விட்டுப் பிரிவதும், மாதவி பாடிய இந்தப் பாடலுக்குப் பின்னர்தான் நிகழ்கின்றன.அந்த வகையில் இந்த வரிகளையும் உள்ளிட்டு மாதவி பாடிய கானல் வரிப் பாடல் சிலப்பதிகாரத்தில் ஒரு முக்கியத் திருப்பம் நேரக் காரணமாய் அமைகிறது. பாடல் இதோ:‘தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்கஅம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’என்மேல் அவர் கொண்டிருந்த அன்பை மறந்துவிட்டு அவர் தன் குதிரை பூட்டிய தேரில் விலகிச் செல்கிறார். பூக்களே! அன்னங்களே! அவர் என்னை மறந்தாலும் நான் அவரை மறக்கமுடியாமல் தவிக்கிறேன்! எனத் தன் மனநிலையைத் தலைவி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ள பாடல் இது. தலைவன் தன்னை மறந்துவிட்டதாகக் கருதி தலைவி பாடும் இதுபோன்ற பாடல்கள் பழைய இலக்கியத்தில் நிறைய உள்ளன. மறதியை மையப்படுத்தி மகாகவி பாரதியார் அழகான ஒரு காதல் பாடலை இயற்றியுள்ளார்.‘ஆசை முகம்மறந்து போச்சே – இதையாரிடம் சொல்வேனடி தோழிநேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்நினைவு முகம் மறக்கலாமோ?’என்ற அந்தப் பாடல் காலத்தால் அழியாத காவியத்தன்மை பெற்றுவிட்டது. பல நடன நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலுக்கு நடனமணிகள் நாட்டியம் ஆடுவதை இப்போதும் நாம் பார்க்கிறோம். ஞாபக மறதியைப் பற்றி கண்ணதாசன் எழுதியுள்ள வரிகள் நம்மை முறுவல் பூக்க வைக்கும். கவியரசர் எழுதுகிறார்:`ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலை வளர்க்க ஒரு மாத்திரை இருக்கிறது. அந்த மாத்திரையைச் சாப்பிட்டால் எதுவுமே மறக்காது. அந்த மாத்திரையை நானே சாப்பிட்டிருக்கிறேன். அதை உங்களுக்கும் பரிந்துரைக்க விரும்புகிறேன். அந்த மாத்திரையின் பெயர்… அடடா, அதுதானே மறந்துவிட்டது!’ தமிழ்த் திரைப்படங்களிலும் மறதி பல முக்கியமான படங்களில் இடம்பெற்று திரைக்கதையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மூன்றாம் பிறை’ என்னும் திரைப்படத்தில் அந்தக் கதையின் மையமே கதாநாயகியின் மறதிதானே? மறதியை மையப்படுத்தி தமிழில் இன்னும் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ‘மறக்க முடியுமா?’ என்ற தலைப்பிலேயே முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் ஒரு திரைப்படம் வந்துள்ளது. தனக்கு மணமான பின்னரும் கண்ணனை மறக்க இயலாமல் தவிக்கிறாள் மீரா. எம்.எஸ்.சுப்புலட்சுமி மீராவாக நடித்த திரைப்படத்தில், கண்ணனை மறக்க இயலாமல் மீரா பாடுவதாக ஒரு பாடலை எழுதியுள்ளார் கல்கி கிருஷ்ணமூர்த்தி.‘மறவேனே எந்நாளிலுமே கிரிதாரிஉனதருளே கிரிதாரி…நஞ்சை நீ உண்டனையோ இந்தபஞ்சையைக் காத்தனையோ ஒருவிஞ்சை புரிந்தனையோ…’என எம்.எஸ்.எஸ்.ஸின் பக்திக் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் கண்ணனை மறக்கமுடியாமல் தவிக்கும் மீராவின் மனநிலையை உணர்த்தி நம் உள்ளத்தை உருக்கும்.ஆனந்தஜோதி திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பி.சுசீலா குரலில் ஒலிக்கும் ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்ற கண்ணதாசன் பாடலை ரசிக்காதவர் உண்டா? கலங்கரை விளக்கம் திரைப்படத்தில் பி.சுசீலா குரலில் ஒலிக்கும் ஒரு பாடல் தென்றலைத் தலைவனிடம் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. தலைவன் தன்னை ஏன் மறந்தான் என்று கேட்டுவருமாறு தென்றலைத் தலைவனிடம் அனுப்புகிறாள் தலைவி.‘என்னை மறந்ததேன்தென்றலே இன்று நீஎன்நிலை சொல்லிவா…காற்றோடு வளரும் சொந்தம்காற்றோடு போகும் மன்னவாகண்ணோடு மலரும் அன்புகனியாக மாறாதோ’என அந்தப் பாடலில் கண்ணீரோடு கேட்கிறாள் தலைவி.பல துயர நினைவுகளை மனம் மறக்கும்போது மறதி என்பது வரம்தான். ஆனால் எல்லாவற்றையும் மறப்பது என்பது ஒரு நோய். டிமென்ஷியா, அல்சைமர் என மறதி நோய்கள் பலவகைப்பட்டன. இத்தகைய நோய்கள் புதிய வாழ்க்கை முறை காரணமாக இப்போது அதிகம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இரவெல்லாம் தொடர்ந்து கண்விழிப்பது, பாரம்பரிய உணவை விட்டுவிட்டு, தொடர்ந்து புதிய வகை உணவுகளை உட்கொள்வது, கதிர்வீச்சை ஏற்படுத்தும் கைபேசியை மணிக்கணக்கில் பார்ப்பது போன்றவை மறதி நோயைத் தோற்றுவிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.கைபேசி, தொலைக்காட்சி, கணிப்பொறி உள்பட எதையும் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு எதிலும் மிதமாக இருப்பதே உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது.ஞாபக மறதி தொடர்பாகப் பல துணுக்குகள் சொல்லப்படுகின்றன. அந்தத் துணுக்குகளைப் பலரும் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்! ஞாபகமறதிப் பேராசிரியர்களைப் பற்றிய நகைச்சுவைகளுக்குப் பஞ்சமே இல்லை. மழைக்காலத்தில் தபால் பெட்டியில் ஒரு கடிதத்தைப் போடக் குடையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் ஒரு ஞாபகமறதிப் பேராசிரியர். தபால்பெட்டியில் குடையை மாட்டிவிட்டு, கடிதத்தைத் தலைக்குமேல் பிடித்துக் கொண்டு அவர் வீடு திரும்பினார் என்று சொல்லி நம்மைத் துணுக்குற வைக்கிறது ஒரு துணுக்கு!சுதந்திர இந்தியா தன் எழுபத்தைந்தாவது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், நாம் மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய நினைவுகள் எவை தெரியுமா? நம் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடி உயிர்நீத்த கடந்தகால சுதந்திரத் தியாகிகளின் வரலாற்று நினைவுகள்தான். எத்தனை தியாகங்களுக்குப் பிறகு நமக்கு இந்த சுதந்திரம் கிட்டியது என்பதை மறக்காமல் இருந்தால்தானே இன்றைய சுதந்திரத்தின் மதிப்பு நமக்குத் தெரியும்?‘நன்றி மறப்பது நன்றன்று’ என்கிறாரே வள்ளுவர்? சுதந்திரத் தியாகிகள் செய்த தியாகத்தை மறப்பது நல்லதல்ல என்பதுதானே இன்றைய காலகட்டத்தில் அதன் பொருள்?(குறள் உரைக்கும்)தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

You may also like

Leave a Comment

fourteen − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi