Sunday, June 2, 2024
Home » மக்களின் குலதெய்வம் பச்சையம்மன்

மக்களின் குலதெய்வம் பச்சையம்மன்

by kannappan

இந்தியாவில் உள்ள அம்மன் சன்னதிகளும் அம்மன் வடிவங்களும் பல்வேறு வகைகளில் இருந்தாலும், ஒரு சில வடிவங்களில் காட்சி தரும் அம்மன் மிகவும் சக்தியும், அற்புத ஆற்றலும் படைத்து விளங்குவார்கள். அந்த வகையில் பச்சையம்மன் வழிபாடு என்பது மிகவும் பிரசித்தி பெற்றது மட்டுமல்லாமல், பச்சையம்மனை வணங்கினால், ஒரே நேரத்தில் பெருமாள், விநாயகர், பைரவர், மகாலட்சுமி (வேங்கடமலை நாச்சியார்), சரஸ்வதி (பூங்குறத்தி நாச்சியார்), இந்திராணி (ஆனைக் குறத்தி), மன்மதன்- ரதி, வாழ்முனி, சுகரிஷி, கருடாழ்வார், செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, நாதமுனி, சடாமுனி, யோகினி போன்ற பல தெய்வங்களின் அருளும் ஒன்றுசேர கிடைக்கும். இதற்கு பல்வேறு சான்றுகளும், காரண காரியங்களும் உண்டு. பச்சையம்மன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருப்பதற்கு, மேற்கண்ட அனைவரும் பச்சையம்மனுடன் இருந்து உதவி புரிந்தனர். அம்மனின் தவம் நிறைவடையும்போது மேற்கண்ட அனைவரும் அம்மனுக்கு துணையாக இருந்ததால் பச்சையம்மன் கோயில் கொண்டுள்ள அனைத்து இடங்களிலும் இவர்களும் அம்மனுக்கு மட்டுமில்லாமல் இவர்களை வழிபடும் பக்தர்களுக்கும் பாதுகாப்பு தருகின்றனர்.இதன் காரணமாகத்தான் பேய், பிசாசு, பில்லி, சூன்யம், சாபம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் பச்சையம்மனை நாடி வழிபாடு செய்கின்றனர்.பச்சையம்மனின் வரலாறுசிவபெருமானின் தீவிர பக்தரான பிருங்கி முனிவர், சிவனைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்காதவர். அந்த அளவிற்கு சிவபெருமான் மீது கட்டுக்கடங்காத பக்தியை வைத்திருந்தார். ஒருசமயம் கயிலையில் சிவபெருமானை வணங்க வேண்டி பிருங்கி முனிவர் வந்த சமயம், சிவனுடன் பார்வதி தேவியும், தேவர்களும், முனிவர்களும் ஒன்று சேர இருந்தனர். சிவனை மட்டும் வணங்கும் கொள்கையுடைய பிருங்கி முனிவர் ஒரு வண்டாக உருவத்தை மாற்றி சிவனை மட்டும் வலம் வந்து, பார்வதி தேவியை வணங்காமல் சென்றுவிட்டார். இதனால் பார்வதி தேவி மிகுந்த மன வேதனை அடைந்தார், உடனே சிவபெருமானிடம் தனது வேதனையை தெரிவிக்கும் வகையில் ‘‘ஐயனே! முற்றும் அறிந்த முனிவரே இப்படிச் செய்வது எந்த வகையில் நியாயம்? இனியும் இப்படி நிகழாமல் இருக்க தங்களின் உடலில் சரி பாதியை எனக்குத் தந்தருளுங்கள்’’ என்று ஈசனை வேண்டினார். அதற்குச் சிவபெருமான் செவிசாய்க்கவில்லை. அன்னைக்கு ஒரு யோசனை தோன்றியது. கடும் தவம் இருந்தால், இவரிடம் வேண்டிய வரத்தினைப் பெறலாம் என்று முடிவு செய்து பூமியில் தவமிருக்க முடிவு செய்தார். காவி உடை, ருத்திராட்சம், சடை தரித்துப் பூலோகத்துக்கு வந்து தவம் செய்ய சரியான இடத்தைத் தேடினார். இமயம் தொடங்கி ராமேஸ்வரம், கன்னியாகுமரிவரை அனைத்துத் தலங்களிலும் நீராடி, சிவபிரான் குடிகொண்டுள்ள தலங்களில் சிவபூஜை செய்தார். அவருடன் 64 யோகினியர் துணையாக வந்தார்கள்.பச்சை நிறமாக மாறிய அன்னைபூமியில் தவம் புரியவும், லிங்கம் வடிக்கவும் தண்ணீர் தேடினார் அன்னை பார்வதி தேவி. ஆனால் தண்ணீர் உடனடியாக கிடைக்கவில்லை. இதனால் தவித்துப் போன அன்னையின் உடல் கோபத்தால் சிவந்த மேனியாக மாறியது. உடனே தன் புதல்வர்களான விநாயகரையும், முருகனையும் தண்ணீர் கொண்டுவரப் பணித்தாள். அதன்படி விநாயகர் சற்றுத் தொலைவில் உள்ள மலையில் முனிவர் தவமிருப்பதையும், அவர் அருகே கமண்டலத்தில் நீர் இருப்பதையும் அறிந்து, அதனைத் தன் வாகனமான மூஞ்சுறுவின் உதவியால் கவிழ்த்தார். கமண்டல நீர், அன்னை தவம் இருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்தது.முருகப்பெருமான் தொலைவில் உள்ள மலை மீது தன் வேலைப் பாய்ச்சி நீர் வரச்செய்து ஆறாக்கியதால், அது சேயாறு ஆனது. இதற்குள் அன்னை தன் பிரம்பினை பூமியில் அடித்து நீர் வரச் செய்தாள். அது பிரம்பக நதி என்று பெயர் பெற்றது. இதனால் மனம் குளிர்ந்த அன்னையின் மேனி பச்சை நிறமாக மாறியதாக கூறப்படுகிறது.சென்னையைச் சுற்றி சுமார் 15 பச்சையம்மன் தலங்கள் உள்ளன. அதில் மிகவும் பழமையும், புராண தொடர்பும் மிகுந்தது சென்னை ஆவடி செல்லும் வழியில் திருமுல்லைவாயிலில் அமைந்துள்ள பச்சையம்மன் தலம். இத்தலத்தில் கங்கை சூரிய புஷ்கரணி என்னும் சக்தி தீர்த்தத்தை பச்சையம்மன் உருவாக்கினார். அங்கு மக்களுக்கும் தேவர்களுக்கும் அல்லல் கொடுத்துவந்த ஹதாசுரனை வதம் செய்து, கோயில் அமைத்து சிவபூஜை செய்தார். மரகதவல்லியாக குடிகொண்டதால் இங்கு அவளை பச்சைமலை அம்மன் என அழைத்து வழிபடுகிறார்கள்.இந்தக் கோயிலில் மன்மதன்- ரதி, பெருமாள், பூங்குறத்தி, விநாயகர், பைரவர் ஆகியோருடன் திருமால் பெரிய மீசையுடன் வாழ்முனியாக அமர்ந்திருக்கிறார். எதிரில் சுகரிஷியும் கருடாழ்வாரும் துணை நிற்கின்றனர். செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, நாதமுனி, சடாமுனி ஆகிய ஆறு முனிகளும் அமர்ந்து காவல் காக்கின்றனர். எதிரே அவர்களது குதிரை முதலிய வாகனங்கள் தயார் நிலையில் அணிவகுத்து நிற்கின்றன. எதிரில் கௌதம முனிவர் சிவலிங்க உருவோடு நின்ற கோலத்தில் அருள, அவருக்கு வலப்புறம் பச்சையம்மன் தவக்காலத்தில் வழிபட்ட மன்னாதீஸ்வரர், அகோர வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளானூர் சிற்றரசரால் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் தற்போது, இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இங்கு அம்பாள், பச்சையம்மனாகவும், இறைவன் மன்னாதீஸ்வரராகவும் அருள் பாலிக்கின்றனர். இந்த கோயில் வளாகத்தில் வராகி, ஐயங்கிரீவர், காயத்ரி, காத்தாயி, துர்க்கை, உக்கிரவீரன், வீராட்சி, விஸ்வரூப மகாவிஷ்ணு, சப்த ரிஷிகள் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு பச்சையம்மன் குல தெய்வமாக விளங்குகிறாள்.சீனு…

You may also like

Leave a Comment

14 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi