Sunday, June 16, 2024
Home » பாம்பன் சுவாமிகளின் சஸ்திர பந்தம்

பாம்பன் சுவாமிகளின் சஸ்திர பந்தம்

by Porselvi

‘தனக்கு சண்முகனே காப்பு’ என்று சொன்ன சுவாமிகள், சண்முகக் கவசம், பஞ்சாமிருத வண்ணம், திருப்பா உள்ளிட்ட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். அனைத்தும் முருகனின் பெருமையைப் பாடுபவையே. அவற்றுள் மிகவும் இன்றியமையாதது ‘சஸ்திர பந்தம்’ என்னும் செய்யுள். தொழிலில் வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அருளும் சஸ்திர பந்தம்…
முற்காலத்தில் இந்த உலகைக் காக்க இறைவன் அவதரித்து அருள் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. கலியுகத்தில், அத்தகைய இறை அவதாரங்கள் மிகவும் குறைவு. எனினும் பல்வேறு மகான்கள் அவதரித்து, எளிய மக்களின் துயர்நீக்கி அருள் செய்வது இந்தக் கலியுகத்தில்தான்.

அப்படி 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்து, அழகு தமிழில் பல துதிகளைப் பாடி மக்களுக்கு முருகக் கடவுளின் அருள் கிடைக்க வழி செய்தவர் பாம்பன் சுவாமிகள். `இரை தேடுவதோடு, இறையையும் தேடு’ என்று அறிவுறுத்திய பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானின் பெருமைகளை உலகுக்கு உணர்த்துவதையே தம் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்.

ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள பாம்பனில் பிறந்ததால் அவருக்குப் பாம்பன் சுவாமிகள் என்ற திருநாமம் ஏற்பட்டது. குமரகுருதாச சுவாமிகள் என்ற பெயர் கொண்ட இவர், முருகப்பெருமானைப் பலமுறை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் என்று சொல்கிறார்கள். தமிழ் மொழியிலும் வடமொழியி லும் புலமை பெற்றிருந்த சுவாமிகள், தம் 12-ம் வயது முதல் முருகன் மீது பாடல்களை இயற்றத் தொடங்கினார். சுவாமிகள் தம் வாழ்நாளில் மொத்தம் 6,666 பாடல்களைப் பாடியதாகச் சொல்லப்படுகிறது.

தமிழகமெங்கும் இருக்கும் முருகனடியார்கள் பலரும், முருகப்பெருமானுக்கு உகந்த திருநாள்களில் `வேல்மாறல் பாராயணம்’ செய்து வழிபட்டு வருகிறார்கள்.இந்தத் திருமரபில் உதித்தவரான பாம்பன் சுவாமிகளும், முருகப்பெருமானின் வேலைப் புகழ்ந்து ‘சஸ்திர பந்தம்’ என்னும் காப்புச் செய்யுளை அருளியிருக்கிறார். ‘அஸ்திரம்’ என்றால் இருக்கும் இடத்திலிருந்து இலக்கை நோக்கி ஏவுவது. `சஸ்திரம்’ என்றால் எப்போதும் நமக்குக் கவசமாக இருந்து நம்மைப் பாதுகாப்பது.

பாம்பன் சுவாமிகள் முருகனின் வேலைத் துதித்து, வேலின் வடிவில் சித்திரக் கவியாகப் பாடியிருக்கும் பாடல், `சஸ்திர பந்தம்.’ இதைப் பாராயணம் செய்தால் அது நமக்குக் கவசமாக இருந்து நம்மைக் காக்கும். நமது எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் ஆற்றல் இந்த சஸ்திர பந்தத்திற்கு உண்டு என்கின்றனர் அடியவர்கள். இது சித்திர கவி வகையைச் சார்ந்தது. சித்திரகவி என்பது எழுத்துகளைக் கொண்டு வரையப்படும் சித்திரம். சஸ்திர பந்தத்தின் எழுத்துகள் கொண்டு முருகப்பெருமானின் வேலாயுதத்தைப் போல வரைந்து எழுதப்பட்ட சித்திரகவி இது.

சஸ்திர பந்தம்
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேல வா.

இந்தப் பாடலின் பொருள், `தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளேஞ் பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெனத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனேஞ் என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்கஞ் திருவடிச் செல்வத்தைத் தந்தருள்கஞ்’ என்பதாகும்.

பாடலாகப் பாடி அருள் பெறும் அதே வேளையில் இதை வேல் போல வரைந்து அதைக்கண்டு தொழுதுகொள்ளும்போது, தமிழின் வடிவாக முருகனை வணங்கும் பேறும் பக்தர்களுக்குக் கிடைக்கிறது. இதைப் பாராயணம் செய்வதன் மூலம், தொழிலில் சிறப்பு, செல்வச் செழிப்பு, நோய்கள் தீர்தல், ஞானம் அடைதல் ஆகியன விரைவில் கைகூடும் என்று சொல்கிறார்கள் அடியவர்கள்.

பாராயணம் செய்யும் முறை

சஸ்திர பந்தத்தைப் பாராயணம் செய்யும் முறையினையும் அடியார்கள் வகுத்துள்ளனர். முதலில் ஞானசம்பந்தர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போன்ற குருமார்களை வணங்கிவிட்டு சஸ்திர பந்தத்தைப் பாராயணம் செய்யத் தொடங்கவேண்டும். முதன்முதலில் பாராயணம் செய்யத் தொடங்குவது, செவ்வாய்க் கிழமை, கிருத்திகை, விசாகம் நட்சத்திரம், சஷ்டி ஆகிய முருகனுக்கு உகந்த தினங்களில் முருகப் பெருமானின் சந்நதிகளில் தொடங்குவது நல்லது.

முதன்முறை செய்யும்போது 27 முறை பாராயணம் செய்யவேண்டும். வீட்டில் வைத்தும், முருகன் விக்கிரகம் அல்லது படத்திற்கு முன்பு வைத்து பாராயணம் செய்யலாம். வேலுக்குப் பூஜை செய்து தொடங்குவது விசேஷம். இவ்வாறு தொடர்ந்து பாராயணம் செய்துவர, வலிமையான மந்திர சக்தி உருவாகும். எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்தி பெருகும் என்பது நம்பிக்கை. முருகப்பெருமானைத் தன் வாழ்நாளெல்லாம் வழிபட்டுப் பேறுபெற்ற பாம்பன் சுவாமி. அவரது ஜீவசமாதி அமைந்திருக்கும், திருவான்மியூர் திருக்கோயிலில் சஸ்திர பாராயணம் செய்து குருவருளையும் திருவருளையும் பெறலாம்.

You may also like

Leave a Comment

1 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi