Sunday, June 16, 2024
Home » பேச்சியம்மன் எனும் சரஸ்வதிதேவி

பேச்சியம்மன் எனும் சரஸ்வதிதேவி

by kannappan

தாய்தெய்வ வழிபாடு அக்காலம் தொட்டு இக்காலம் வரை நடைமுறையில் இருந்து வருகிறது. நவராத்திரியில் துர்க்கா பரமேஸ்வரியையும், மகாலட்சுமியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனை வடிவங்களும் ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா சஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது, அவளே சிருஷ்டி செய்பவள். (ஸ்ருஷ்டிகர்த்ரி – ப்ரம்மரூபா), அவளே பரிபாலனம் செய்பவள். (கோப்த்ரீ – கோவிந்த ரூபிணி), அவளே சம்ஹாரம் செய்பவள். (ஸம்ஹாரிணீ – ருத்ர ரூபா) என்று சொல்கிறது. லலிதா, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான், மகாலட்சுமியாகவும் சரஸ்வதியாகவும் இருக்கிறாள். லட்சுமி அஷ்டோத்தரத்தில் ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகையை நம’ என்று வருகிறது. சரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம’ என்று வருகிறது. படைப்பு, காப்பு, அழிப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வடிவங்களாக உருவெடுத்து வெவ்வேறு காரியங்களைச் செய்கிறாள். துர்க்கையாக இருக்கிற போது வீரம், சக்தி எல்லாம் தருகிறாள். மகாலட்சுமியாகி சம்பத்துக்களைத் தருகிறாள். சரஸ்வதியாகி ஞானம் தருகிறாள்.ஆதிபராசக்தியான துர்க்கையைப் பொதுவாகப் பார்வதி என்று சொல்லலாம். அவள் இமவானின் புத்திரியானதால் மலைமகள். மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். சரஸ்வதி சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள்.பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீரசாகரத்திலிருந்து (பாற் கடல்) பிறந்த மகாலட்சுமியும் இரண்டு மகரிஷிகளுக்கு பெண்களாக அவதரித்திருக்கிறார்கள்.மகாலட்சுமியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தவம் இருந்தார். அதற்கிணங்கவே லட்சுமி தேவி அவருக்குப் புத்திரியாக அவதாரம் எடுத்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் அவளுக்குப் பார்கவி என்று பெயர் ஏற்பட்டது. இப்படியே காத்யாயன மகரிஷி சாட்சாத் பரமேஸ்வரியைப் மகளாக அடைய வேண்டும் என்று விரும்பி தவம் செய்தார். அம்பிகையும் அவருக்கு மகளாக ஆவிர்பவித்தாள். காத்யாயனருக்கு மகளாக பிறந்ததாலேயே அவளுக்குக் காத்யாயனி என்ற பெயர் உண்டாயிற்று. தெய்வத்தைக் குழந்தையாக வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது. ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்கிறோம். தெய்வமே குழந்தையாக வந்தால் ரொம்பக் கொண்டாட்டமாகும். குழந்தைக்கு நம்மைப் போல் காமமும், குரோதமும், துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. இந்த நேரத்தில் ரொம்பவும் ஆசைப்பட்ட ஒரு வஸ்துவை அடுத்த நேரத்தில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. அழுகையும் இவ்வாறேதான். நாம்தான் உணர்ச்சிகளை உள்ளுக்குள் வாங்கிக் கொண்டு மனத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். உணர்ச்சிகள் வேரூன்றாமல் குழந்தைகள் போல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இதனால்தான் உபநிஷதமும் ‘குழந்தையாய் இரு’ என்கிறது. காத்யாயனியைத்தான் கிராம மக்கள் ‘காத்தாயி’ என்று சொல்லி வழிபட்டு வருகிறார்கள்.‘பட்டாரிகை’ என்று பெரியஸ்ரீ வித்யா உபாசகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான் நம் கிராம மக்கள் ‘பிடாரி’ ‘முப்பிடாதி’ என்று அழைத்து வழிபட்டு வந்தார்கள். பழைய செப்பேடுகளில் ‘பட்டாரிகா மான்யம்’ என்பதை ‘பிடாரி மானியம்’ என்று குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம்.இவ்வாறே நம் கிராம மக்கள் சரஸ்வதியை பேச்சு தரும் தாய் பேச்சு+தாயி என்பதே ‘பேச்சாயி’ என்றும் பேச்சு தரும் அம்மா, அம்மன் என்றும் பேச்சு+அம்மன் என்பதை பேச்சியம்மன் என்றும் நாமமிட்டு வழிபட்டு வந்துள்ளனர். இந்த பேச்சியம்மன் தான் பெரியாச்சி என்றும் பேராச்சி என்றும் அழைக்கப்படுகிறாள். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பேச்சாயி, பெரியாயி, பெரியாண்டியம்மன் என்றும் பல நாமங்களில் பேச்சியம்மன் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறாள்.தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

You may also like

Leave a Comment

5 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi