Tuesday, April 23, 2024
Home » அங்க குறையை நிவர்த்தி செய்வாள் பாலாடை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி

அங்க குறையை நிவர்த்தி செய்வாள் பாலாடை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி

by Kalaivani Saravanan
Published: Last Updated on

நம்ம ஊரு சாமிகள்

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்டது கவுண்டம்பட்டி. இங்கு சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்திலிருந்து சுமார் 100 குடும்பங்கள் வந்து குடியேறினர். இவர்களது தாய்மொழி கன்னடம். இப்பகுதியில் இவர்கள் குடியேறியதால் தமிழ்மொழி பேசலாயினர். இந்த கிராமத்தைச் சேர்ந்த வைரவன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்துவந்தார். இவரது உடன் பிறந்த அக்காவிற்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இரண்டும் பெண் குழந்தைகள். இந்த குழந்தைகளை பெற்ற அவள் அன்றைய தினமே இயற்கை எய்துவிட்டார். கண்ணுக்கு அழகாய் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றுவிட்டு, கட்டிய மனைவி காலம் சென்று விட்டாளே என்று கண் கலங்கிய குழந்தைகளின் தந்தை, கால் போன போக்கில் சென்றார்.
தாய், தந்தையர் ஆதரவு இல்லாமல் குழந்தைகள் தவிக்கக்கூடாது என்று எண்ணி, தாய்க்கு தாயாய் நானிருக்கிறேன்.

என் உடன் பிறந்தவள் குழந்தைகளை, நான் வளர்த்து ஆளாக்குகிறேன் என்று உறுதி எடுத்துக்கொண்ட வைரவன், தனது தாயிடம் குழந்தை எடுத்துக்கொண்டு வாம்மா என்று கூறி தனது வீட்டுக்கு எடுத்து வந்து குழந்தைகளை வளர்த்து வருகிறார். அந்த குழந்தைகளுக்கு வீரவையம்மாள், சின்னவையம்மாள் என பெயரிட்டு வளர்த்துவந்தாள் அவர்களது பாட்டி தோணியம்மா.

அகவை 13 ஆன பின்னும் வீரவையும், சின்னவையும் தாய், தந்தையர் பாசத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அன்போடும், பாசத்தோடும் வளர்த்து வந்தார் தாய்மாமன் வைரவன். தனக்காப் பாடுபடும் தன் மாமனை அவர்களும் மதித்து வந்தனர். அன்று வைகாசி விசாகம், பாட்டி தோனியிடம் மூத்தவள் வீரவை கூறினாள்.

‘‘யம்மா, இன்னைக்கு உளுந்து போட்டு கஞ்சி வைப்பேன்னு சொல்லிட்டு, சோறு பொங்குக போலுக்கு.’’ ‘‘ஏட்டி, இன்னைக்கு வைகாசி விசாகம், சோறு வடிச்சி 2 கூட்டு வச்சு, பாயாசமும் வைக்கணும்.’’ என்ற பாட்டியின் பேச்சுக்கு பதில் பேசினாள் சின்னவை, ‘‘யம்மோய், அப்ப இன்னைக்கு அடைஞ்ச பொறவுதான் மாமன் சாப்பிட போறாரு, அதுவர அவரு இன்னைக்கு பட்டினிதான்.’’ ‘‘யாமிட்டி, அப்படி சொல்லுதே, அடுப்புல காஞ்ச புளியன் விறகுதான் வச்சிருக்கேன். சட்டுபுட்டுன்னு வச்சிரமாட்டேன். என் மவன ஏன் பட்டினியா போடப்போறேன்.’’ என்று பதிலுரைத்த அவளது பாட்டி. திடீரென்று கோபம் கொண்டு ‘‘உங்க ரெண்டு பேரையும் எத்தன நாள் சொல்லுறது, பாவாடை சட்டை மட்டும் போடாதிக, தாவணி போடுங்கன்னு.’’

‘‘போம்மா, அது சமைஞ்ச பிறவு போடுவோம். இப்பவே வா,’’ என்று பதிலுரைத்த வீரவையிடம். ‘‘அடியே, அது எனக்கு தெரியுமிடி, வயசுக்கு மிஞ்சி வளர்ந்து தொலைஞ்சிருக்கியே, அதான் சொன்னேன்’’ என்றாள் பாட்டி. ‘‘சரியாத்தா, நாங்க குளிச்சிட்டு வாரோம், நீ சோறாக்கி வை’’ என்ற படி வீரவையும், சின்னவையும் குளிக்கச் சென்றனர். நண்பகல் 2 மணி ஆனது. இருவரும் குளித்துவிட்டு பாவாடை சட்டை தாவணியில் தயாராகி பாட்டி முன்பு வந்து நின்றனர். உடனே தோணியம்மா கூறினாள்.

‘‘என் மகள உரிச்சு வச்சது போல இருக்கேளடி, நீங்க தாவணி போட்டு, உங்க மாமன் பாத்ததில்ல, அவன் பாத்தான் அசந்துபோவான்’’ என்றாள். அப்போது வீரவை ‘‘யம்மா, மாமாவுக்கு சோறு கொண்டு கொடுத்திட்டு வந்து நாங்க சாப்பிடுறோம்’’ என்று கூறினாள். பின்னர் மாமாவுக்கு சோறு கொண்டு இருவரும் சென்றனர். கவுண்டம்பட்டியிலிருந்து, கால் நடையாய் நடந்து 5 கி.மீ தூரம் உள்ள மேலக்கல்லூரணிக்கு சென்றனர். அந்த காலத்தில் மேலக்கல்லூரணி பகுதி மிகவும் காடாக இருந்தது.

அங்குதான் வைரவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். 2 கி.மீ தூரம் நடந்து வந்து கொண்டிருந்த போது, வீரவை, சின்னவையிடம் கேட்டாள். “என்ன, சின்னு, வாய் மூடிட்டு வர, ஏதாவது விடுகதை சொல்லு என்று கூறினாள். உடனே சின்னவை பேசலானாள். ‘‘பச்சை பட்டை பிடிச்சி இழுத்து கிடத்தி வச்சி, பாயாசம் விருந்து வச்சி, வீதியில வீசி எறிஞ்சிட்டாங்க, கிழிஞ்சு கிடக்கிறேன். எம்பேரென்ன?’’ என்று கூறியதும், வீரவை சொன்னாள். ‘‘இது தெரியாதாங்கும் வாழ இலை.’’ ‘‘இப்ப நான் சொல்லுதேன், பதில சொல்லு பாப்பும்,’’ என்று கூறிய வீரவை விடுகதை போட்டாள்.

‘‘வயிறுண்டு, காலில்லை, கையில்லை. ஆனா, ராசாவுக்கும் விருந்தாவா, குளத்துல இருப்பா, ஆனா குடத்துல வரமாட்டா. அவ யாரு.’’ ‘‘ஆங். மீனு மீனு.’’ என்று வேகமாக கூறினாள் சின்னவை. உடனே வீரவை, ‘‘ஏய், சின்னு விருசுல நட, நேரம் போகுதா வருதா.. என்று சொல்ல, அக்கா, மாமா அந்தா நிக்காக’’ என்று கூறிய சின்னுவை பதற்றத்துடன். ‘‘அக்கா பாம்பு கால சுத்திடுச்சு’’ என்றாள். உடனே கண்களை மூடிக்கொண்டு கலக்கத்துடன் கூறினாள் வீரவை, ‘‘சின்னு அப்படியே நில்லு நம்ம இரண்டு பேரையும் சேர்த்து தான் சுத்தியிருக்கு’’ என்று கூறிக்கொண்டு இருவரும் அசையாமல் நின்றனர்.

இருவரின் கால்களையும் நாகம் ஒன்று சுற்றிக்கொள்கிறது. தூரத்து தொலைவிலிருந்து இதை பார்த்துக்கொண்டிருந்த வைரவன், “இதுக ரெண்டும் ஏன் அப்படியே அசையாம, சிலையாட்டம் நிக்குதுக என்று எண்ணிக்கொண்டு அவர்கள் நிற்கும் இடம் நோக்கி வருகிறார். வந்து பார்த்தால் நல்ல பாம்பு ஒன்று இருவரின் கால்களையும் பின்னி இருந்தது. உடனே தன் கையில் இருந்த தொரட்டி கம்பு (அரிவாள் இணைக்கப்பட்ட கம்பு) கொண்டு பாம்பை வெட்ட, துண்டாடப்பட்ட பாம்பின் தலை, சிதறி வந்து, வைரவன் தலையை தீண்டியது.

வைரவன், அதே இடத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மாண்டு போனார். வீரவையும், சின்னுவும் ஓடி வந்தனர். மாமன் உடல் அருகே இருந்து கதறி அழுதனர். சிறிது நேரத்திற்கு பின்னர் வீரவை சொன்னாள். ‘‘சின்னு, நாம என்ன பாவம் பண்ணினோமோ தெரியல, பெத்த ஆத்தா, அப்பன பார்த்ததில்ல, தாயுக்கு தாயா இருந்து, நமக்காக கஷ்டப்பட்ட மாமன் சாவுக்கு நாம காரணமாயிட்டோம். இனி நாம இந்த மண்ணுல வாழக்கூடாது. ஊரார், உறவினர் பழி சொல்லும் ஆளாகக்கூடாது. வா, சாவோம்.’’

‘‘அக்கா…’’ என்று மெல்லிய குரல் கொடுத்தாள். சின்னு. ‘‘என்ன, சின்னு பண்ண, உன்ன விட்டுட்டு போக எனக்கு மனசில்ல, அதான் கூப்பிட்டேன். சரி, பரவாயில்ல, என் கதைய நான் முடிச்சுக்கிறேன். நீ பொழுது சாயுமுன்ன, வீடு போய் சேர்ந்திரு,’’ என்று கூறிவிட்டு, மாமா உடலருகே இருந்த வீரவை எழுந்தாள். விரிந்த தலைமுடியை முடித்தாள். அங்கே இருந்த வன்னிமரம் அருகே வந்தாள். அப்போது, அக்கா என்றபடி ஓடி வந்தாள் சின்னவை. வந்த வேகத்தில் கட்டிப்பிடித்தாள். பின்னர் இருவரும் சகஜநிலைக்கு திரும்பினர்.

வன்னிமரத்தின் முன் நின்று இருவரும் வேண்ட, வன்னிமரம் சாய்ந்து, தானே தீப்பற்றி எரிந்தது. அந்த தீயினுள் வீரவையும், சின்னுவையும் இறங்கினர். நின்ற கோலத்தில் உடல் கருகி, மாண்டுபோயினர். இந்த சம்பவம் நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்கு பின் கவுண்டம்பட்டியில் வசித்துவந்த ஒருவர், வளையல் வியாபாரம் செய்து வந்தார். அவர் வீரவை, சின்னவை அடக்கமான இடத்தின் வழியாக ஒரு முறை செல்லும் போது, அங்கே கூரையால் வேயப்பட்ட கொட்டகை இருந்தது போன்றும், அந்த கொட்டகையின் ஜன்னல் வழியாக இரண்டு இளம் பெண்களின் 4 கைகள் மட்டும் வெளியே தெரிந்துள்ளது.

அப்போது “வளையல்காரரே, எங்க கைகளுக்கு வளையல் போடுங்க’’ என்று குரல் கேட்டுள்ளது. துட்டு கொடுங்க தாயி அப்புறமா வளையல் போடுறேன் என்று அவர் கூறிவிட்டு சென்றுள்ளார். அவர் அங்கிருந்து 1 கி.மீ தூரமுள்ள ஒரு ஊரில் சென்று வியாபாரத்திற்காக, வளையல் மூட்டையை பிரித்துள்ளார். அப்போது மூட்டையிலிருந்து அனைத்து வளையல்களும் உடைந்திருந்தது.

இதுபோல மறுநாளும் வளையல் உடைந்தது. உடனே வளையல்காரர் குறிகேட்க, குறி சொன்ன பெண், வீரவை, சின்னுவை கதையை கூறி அவர்கள்தான் வளையல் கேட்டதாக சொல்ல. மறு நாள் வளையல் காரர், அவர் கண்ட கொட்டகை இடம் தேடிச் சென்று 6 செட் வளையல்களை அவ்விடம் வைத்துவிட்டு வியாபாரத்திற்கு சென்றுள்ளார். அன்று நல்ல முறையில் வியாபாரம் நடந்துள்ளது. மேலும், வீட்டிற்கு வந்த போது வீட்டில் உடைந்த வளையல்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 மூட்டைகளிலும் உடைந்த வளையல்கள் நல்ல முறையில் இருந்தன.

இவற்றை பெருமைப்பட, வீரவை, சின்னவை குடும்பத்தாரிடம் கூற, அவர்கள் மேலக்கல்லூரணியில் வீரவை, சின்னவை அக்னியில் அடக்கம் ஆன அந்த இடத்தில் கோயில் கட்டினர். கோயிலுக்கு சென்று வழிபட்டவர்களின் குறைகள் நிவர்த்தி ஆனது. தோஷங்கள் விலகியது. நாளடைவில் அது அக்கம் பக்கம் கிராமங்களில் பரவ, ஆலயம் தேடி பக்தர்கள் வருகை அதிகரித்தது. திருமணம் தள்ளிப் போன பல பெண்களுக்கு இவ்வாலயம் வந்த பின் திருமணம் நடந்தேறியதால், தங்கள் வாழ்க்கைக்கு மாலை கொடுத்த தாய் என்பதால் வீரவை, சின்னுவை சேர்த்து மாலையம்மன் கோயில் என்று அழைக்கலாயினர்.

அந்த பெயரே இப்போதும் நிலை பெற்று விளங்குகிறது. இந்த கோயிலில் வீரவை, சின்னுவை அவதரித்த நாளான திங்கள் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அவர்கள் அடக்கமான வைகாசி மாதம் விசாகம் நாளில் குருபூஜை நடக்கிறது. அப்போது, வளையல்காரர்களின் குடும்பத்தினர் இன்றும் வளையல் கொண்டு வரப்படுகிறது. அவர்கள் தற்போது அந்த வியாபாரம் செய்யாத நிலையிலும் அவர்களே வளையல் கொடுத்து வருகின்றனர். கோயிலில் தினசரி பூஜை நடக் கிறது. இந்த கோயிலில் பலியிடுதலோ, அசைவ படையலோ இல்லை. இக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த நாகலாபுரம் பஞ்சாயத்திலுள்ள மேலக்கல்லூரணியில் அமைந்துள்ளது.

தொகுப்பு: சு. இளம் கலைமாறன்

You may also like

Leave a Comment

eighteen + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi