Saturday, April 20, 2024
Home » அருஞ்சுனை காத்த அய்யனார்

அருஞ்சுனை காத்த அய்யனார்

by

மேலப்புதுக்குடி, தூத்துக்குடி.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது மேலப்புதுக்குடி. இந்த ஊரில் அமைந்துள்ளது அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு திருவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அப்பகுதியில் தடாகம் (நீர்நிலை) ஒன்று இருந்தது. அதிலுள்ள நீர் பன்னீர் போன்று தெளிந்தும், சுவை மிக்கதாகவும் இருந்தது. ஒரு முறை இந்த தடாகத்தில் இருந்து கனகமணி என்ற கன்னிப்பெண் ஒருவர் குடத்தினில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினாள். கானகத்தின் வழியே நடந்து சென்றபோது வழியில் கல்லால் கால் இடறி விழுந்தாள். அவள் விழுந்ததால் குடத்து நீர் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரை நனைத்தது. தவநிலை கலைந்த முனிவர் கடும்சினம் கொண்டார். கவனச்சிதறலால் கால் இடறி விழுந்த கன்னிகையே, ‘‘உன் கையால் எவர் நீர் வாங்கி அருந்தினாலும் அடுத்த கனமே அவர் மாண்டுபோவார். இதை நீ வெளியே தெரிவித்தால் மறுகனமே மரணம் உன்னை தழுவும். இதையெல்லாம்விட நீ எவ்வகையில் இறந்தாலும் இறக்கும் தருவாயில் செய்யாத குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைக்காக மரணிப்பாய்’’ என்று சாபமிட்டார். ‘‘அனைத்தும் அறிந்த மாமுனியே, அறியாது செய்த பிழைக்கு மாபெரும் தண்டனையா,’’ என்று மங்கையவள் வினவ, ‘‘பெண்ணே, நீ இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும். மரணத்திற்கு பிறகு நீ சொர்க்கம் போவாய்’’ என்று உரைத்தார் அவர். இந்த நிலையில் மன்னன் சிங்கராஜன் தினமும் உண்டு வந்த கனி மரம், தினமும் ஒரு கனிதான் காய்க்கும். அக்கனியைதான் மன்னன் உண்டு வந்தான். மரத்திலிருந்து விழும் கனி மன்னன் வருகைக்காக அதே இடத்தில் கிடக்கும். அதை யாரும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மன்னனின் காவலாட்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் அங்கு காவல் காத்து வந்தனர். வழக்கம் போல் தடாகத்தில் தண்ணீர் எடுத்து வந்த கனகமணியின் குடத்திற்குள் அந்த கனி விழுந்துவிட்டது. இதை காவலாட்களும், கண்காணிக்கவில்லை, கன்னி கனகமணியும் கவனிக்கவில்லை. குடத்து நீருடன் குமரி அவள் இல்லம் சென்றாள். வரும் வழியில் இருபத்தோரு தேவாதி தேவதைகள் எதிரில் வந்தனர். அவர்கள், “தாகத்தோடு இருக்கிறோம் பெண்ணே… தண்ணீர் கொடு’’ என்று கனகமணியிடம் கேட்க, திடுக்கிட்டாள் அவள். காரணம் முனிவரிட்ட சாபம் நினைவுக்கு வந்தது. யாருக்கேனும் நீ தண்ணீர் கொடுத்தால் அவர்கள் மரணம் அடைவார்கள். இந்த ரகசியத்தை எடுத்துக்கூறினால் நீ மரித்து போவாய் என்றது. அதை எண்ணி தண்ணீர் கொடுக்க மறுத்தாள் கனகமணி. அப்போது, தாகத்தால் நாங்கள் மரணித்து போய் விடுவோம் போல் உள்ளதே என்று கெஞ்சினார்கள். மனதை கல்லாக்கிய மங்கை கனகமணி, தண்ணீர் கொடுக்க மறுத்து சினத்துடன், “வழியை விட்டு விலகி செல்லுங்கள். நான் அனுதினமும் வழிபடும் அரிஹர புத்திரன் மீது ஆணை’’ என்றுரைக்க, தேவதைகள் வழிவிட்டன. அவள், வீடு போய் சேர்ந்தாள்.கானகத்தில் பசியோடு கனி தேடி மரத்தடி வந்தான் மன்னவன். காவலாட்கள் இன்னும் கனி விழவில்லை என்றனர் கனிவோடு. கடுஞ்சினம் கொண்ட மன்னன், “நேரம் தவறிவிட்டது. விழாமல் இருக்காது கனி. காரணம், இது இறைவன் கொடுத்த அருட்பணி. மாலை பொழுதாக போகிறது மறுபடியும் விழாது இனி. கனியை உண்டது உங்களில் யார்’’ என்று வினவ, “மறைத்து வைக்கவே மனமிருக்காது. மறந்தும் மன்னவருக்கு உரிய கனியை உண்ண நேருமோ, மரணத்தை மனம் உவர்ந்து வரவேற்க யார் முன் வருவர்’’ என்று காவலர்கள் பதில் உரைத்தனர். “அப்படியானால் கனி களவாடப்பட்டிருக்கிறது. காப்பவனைவிட கள்வனே பெரியவனாகிவிட்டான். ‘‘சரி, எப்படியானாலும் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் நான் கனியை உட்கொள்ள வேண்டும். ஊருக்குள் செல்லுங்கள். ஒரு வீடுவிடாமல் தேடுங்கள். கனியோடு வாருங்கள். இல்லையேல் உங்களில் ஒருவருக்கும் தலை தப்பாது’’ என்று எச்சரித்தார். மன்னன் கட்டளையை ஏற்று காவலர்கள் ஊருக்குள் சென்று எல்லா வீடுகளிலும் தேடினர். கடைசியில் கனகமணி வீட்டில் தேடும் போது குடத்திற்குள் நீரோடு கனியும் இருப்பதை கண்டனர். கனியை எடுத்த காவலர்கள், கன்னியவளை இழுத்து வந்தனர். மன்னன் முன் நிறுத்தினர். காவலர்கள் கூறினர், “குடத்தில் நீருக்குள் இருந்தது’’ என்று. அப்போது அவ்விடம் வந்த தேவதைகள், ‘‘கொற்றவனே நாங்கள் உரைப்பதையும் ஒரு கனம் கேளீர், குடத்து நீரில் கனியை இவள் களவாடி சென்றிருக்க வேண்டும். அதனால்தான் குரல்வளை காய்ந்து குடிக்க நீருக்காக மன்றாடி கேட்டும், குமரி இவள், மறுத்து போனதன் மர்மம் இப்போது புரிகிறது’’ என்றனர். அப்போது முதுமையடைந்த பெண்ணாய் அங்கு வந்த பேச்சியம்மன், ‘‘ மன்னா, இவள் களவாடவில்லை. கனி தானாக விழுந்தது’’ என்றுரைத்தும் மன்னன் கேளாமல் மங்கை இவளுக்கு மரண தண்டனையை உடனே நிறைவேற்றுங்கள் என்று கட்டளையிட்டான். மன்னனின் கட்டளையை ஏற்ற காவலர்கள், கன்னி கனகமணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர். இறக்கும் தருவாயில் அரிஹரபுத்திரனை அழைத்தாள். நான் வணங்கும் அய்யனே என்று தனது தெய்வத்தை அழைத்தாள் கனகமணி. அவள் பக்திக்கு மனமிறங்கி வந்தார் சாஸ்தா. ‘‘கலங்காதே உன்னை உயிர்ப்பிக்கிறேன்’’ என்றார் சாஸ்தா. ‘‘வேண்டாம் அப்பனே, இந்த பிறவியில் நான் சாபம் வாங்கிவிட்டேன். அந்த சாபத்தோடு வாழ்வதை விரும்பவில்லை. இறக்கும் தருவாயில் நான் எண்ணியது நிறைவேறும் என்றார் அந்த மாமுனி. எந்த தண்ணீருக்காக நான் சாபம் பெற்றேனோ, அது போல் இனி எவரும் தண்ணிக்கு அலைந்து சாபம் பெறக்கூடாது என்பதற்காக, நான் இவ்விடம் சுனையாக மாறி இருக்க விரும்புகிறேன். சுவாமி, சுனையை யாரும் அபகரிக்காமலும், மற்றவர்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் வேலியிட்டு தடுக்காமலும் இருக்க, அய்யனே நீரே, சுனையை காத்தருள வேண்டும்’’ என்றார்.  ‘‘அருமையான சுனையாக மாறும் உன்னை காத்தருள்வேன்’’ என்று உறுதியளித்த அய்யன் சாஸ்தா, “இவ்விடம் அருஞ்சுனை காத்த அய்யனார்’’ என்று அழைக்கப்பட்டார். மன்னன், “மதி மயங்கி தவறு இழைத்துவிட்டேன்’’ என எண்ணி, தனது உயிரை மாய்த்துக் கொண்டான். இருபத்தோரு தேவதைகள் அய்யனாரிடம் மன்னிப்பு கோரினர். அதன் பின்னர் அவர்களுக்கு தனது இருப்பிடத்தில் இடம் கொடுத்து தனது கண்காணிப்பில் வைத்துக்கொண்டார் அய்யனார். மூலவர் பூர்ண புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பரிவார தெய்வங்களாக பேச்சியம்மன், பரமேஸ்வரி அம்மன், தளவாய்மாடன், வன்னியடி ராஜன், கருப்பசாமி, சுடலைமாடன், இசக்கியம்மன், பட்டாணி சாமி, முன்னோடி முருகன் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சுனையில் குளித்தால் தீராத பினிகளும் விலகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பட்ட கடன் தீரவும், இட்ட துயர் மாறவும் இத்தலம் வந்து அருஞ்சுனை காத்த அய்யனாரை வழிபட்டால் அவை மாறிவிடுகிறது. துன்பங்களை நீக்கி அருமையான வாழ்க்கையை அருள்கிறார் அருஞ்சுனை காத்த அய்யனார். ஆண்டுதோறும் இக்கோயிலில் பங்குனி மாதம் உத்திரத்தையொட்டி திருவிழா நடைபெறுகிறது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் குரும்பூரிலிருந்து 5.கி.மீ. தொலைவிலுள்ள மேலப்புதுக்குடியில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் உள்ளது. அம்மன்புரத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது….

You may also like

Leave a Comment

eighteen + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi