Tuesday, May 21, 2024
Home » பிரகாசமான வாழ்வருளும் பிரசன்ன வெங்கடேஸ்வரர்!

பிரகாசமான வாழ்வருளும் பிரசன்ன வெங்கடேஸ்வரர்!

by kannappan

பல்லாண்டுகளுக்கு முன்பு லால்தாஸ் என்ற பெருமாள் பக்தர் சென்னை செளகார்பேட்டை பகுதியில் வசித்து வந்தார். சந்நியாசியான இவர் தினமும் திருப்பதி பெருமாளை மனதார வணங்கிய பின்பே, தன் அன்றாடப் பணிகளை துவக்குவார். இவ்வழியாக தலயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தன்னால் இயன்ற சேவை செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு திருப்பதி சென்று பெருமாளை வணங்க வேண்டுமென்பது நீண்டநாள் ஆசை. நாளடைவில் அந்த ஆசையே ஏக்கமாக மாறியது. அவருக்கு அருள்புரிய எண்ணினார் வேங்கடவன். ஒருநாள் இரவில் லால்தாஸின் கனவில் தோன்றி தனக்கு அவரது இருப்பிடத்திலேயே கோயில் நிர்மாணித்து வழிபடும்படி கூறினார். அதுகேட்டு மகிழ்ந்த சந்நியாசி, கோயில் கட்ட ஆயத்தமானார். ஆனால், அவரிடம் ஆலயம் எழுப்பும் அளவிற்கு வசதி இல்லை.எனவே அவர் பக்தர்களிடம் பெருமாளுக்கு கோயில் கட்ட பொருளுதவி செய்யும்படி கேட்டார். யாரும் பணம் கொடுக்கத் தயாராக இல்லை. எனவே தனக்கு தெரிந்த வித்தையை பயன்படுத்தி செம்பை, தங்கமாக மாற்றினார். அதை விற்று கிடைத்த பணத்தில் கோயில் கட்டும் பணியை தொடங்கினார். அவரது மகிமையை அறிந்த மக்கள் கோயில் கட்ட பணம் கொடுத்தனர். அதன்பின்பு இவ்விடத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியைப் போலவே சுவாமி சிலை அமைத்து, கோயில் உருவானது. அலர்மேல்மங்கை தாயாருக்கும் சந்நதி அமைக்கப்பட்டது. சுவாமி, லால்தாஸின் மனதில் பிரசன்னமாக தோன்றி காட்சி கொடுத்தருளியதால் பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்று பெயர் பெற்றார்.லால்தாஸ் கோயில் கட்டியபின்பு, பெருமாளை அனுதினமும் ஆராதித்து வந்தார். ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் தான் விக்கிரகமாக இருப்பதாக உணர்த்தினார். அதன்படி சிலையை எடுத்த அவர், இங்கு பிரதிஷ்டை செய்தார். புரட்டாசி பிரம்மோத்ஸவத்தின் போது இந்த உற்சவரை, பூமிக்கடியில் கிடைத்த இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அப்போது இந்த பெருமாளை, ‘பிறப்பிடம் செல்லும் பெருமாள்’ என்று அழைக்கின்றனர். அங்கு சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கின்றன. வைகாசியில் 3 நாட்கள் சயனபேரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜை நடக்கும்போது யாரும் பார்க்க முடியாதபடி 7 திரைகளை கட்டி மறைத்து விடுவர்.அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு இவரை உற்சவமூர்த்திக்கு அருகில் வைத்து, 7 வகையான கனிகளை நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.  அந்த சமயத்தில்தான் இவரை தரிசிக்க முடியும். திருப்பதி-திருமலை போலவே இங்கும் பூஜை நடக்கிறது. மூலஸ்தானத்தில் பஞ்ச பேரர்கள் என்னும் ஐந்து சீனிவாசர்கள் கொலுவிருக்கின்றனர். சுவாமி, 108 லட்சுமி திருவுருவம் பொறித்த மாலை அணிந்திருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு பச்சைக்கற்பூரம் சாத்தி விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இவரது சந்நதி முன்மண்டபத்தில் ரங்கநாதர் காட்சி தருகிறார். புரட்டாசி பிரம்மோத்ஸவத்தின் முதல் நாளில் ராமானுஜரும், சக்கரத்தாழ்வாரும் கொடியேற்ற செல்வது விசேஷம்.விழாவின் 5ம் நாளில் சுவாமி அணிந்திருக்கும் லட்சுமி மாலையை, தாயாருக்கு அணிவிக்கும் வைபவம் நடக்கிறது. அப்போது, சுவாமியை தரிசிக்க முடியாதபடி சந்நதியை சாத்தி விடுகிறார்கள். பெருமாளை லட்சுமி மட்டுமே தரிசிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். அன்று இரவு கருடசேவை நடக்கிறது. பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீதேவி-பூதேவி-அலர்மேல்மங்கை தாயார்-ஆண்டாளுடன் சேர்ந்து பெருமாள் சேவை சாதிக்கிறார். இத்தலத்தின் விமானம் பத்ம விமானம் எனப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. வைகானஸ ஆகம முறைப்படி இத்தலத்தில் பூஜைகள் நடைபெறுகிறது. தல தீர்த்தம் வராக புஷ்கரணி என போற்றப்படுகிறது.அலர்மேல்மங்கை தாயார் தனி சந்நதியில் திருவருட்பாலிக்கிறார். பெருமாளுக்கு அணிவிக்கப்படும் மாலையே, இவருக்கும் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. வழக்கமான பெருமாள் கோயில்களில் சுவாமி மட்டும் கருடன் மீது எழுந்தருளி சேவை சாதிப்பார். ஆனால், இக்கோயிலில் தாயார், கருடசேவை சாதிக்கிறார். கார்த்திகையில் 9 நாட்கள் தாயாருக்கு தீர்த்த உற்சவம் நடக்கிறது. இவ்விழாவின்போது கருட வாகனத்தில் எழுந்தருளி, பிராகாரத்தை சுற்றி வருகிறார். இதற்கென தனியே பெண் கருட வாகனம் இருக்கிறது. லட்சுமி நரசிம்மர் மேற்கு நோக்கி தனி சந்நதியில் இருக்கிறார். இவரது திருவடியில் நரசிம்மர் யந்திரம் இருக்கிறது.பொதுவாக கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, கையில் கொடுப்பார்கள். ஆனால், இவரது சந்நதியில் தீர்த்தத்தை பக்தர்கள் மீது தெளிக்கிறார்கள். இதனால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. வரதராஜர், ராமர், வராகர், ஆண்டாள், ரங்கநாதருக்கு சந்நதிகள் உள்ளன. திருமங்கையாழ்வார் தனிச் சந்நதியில் மனைவி குமுதவல்லியுடன் காட்சி தருகிறார். கோயில் முகப்பு மண்டபம் தேர் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வடமொழியில் ‘பைராகி’ என்றால் ‘சந்நியாசி’ என்று பொருள். சந்நியாசிக்காக பெருமாள் காட்சி தந்த தலமென்பதால் இக்கோயில் ‘பைராகி வெங்கடேசப்பெருமாள் கோயில்’ என்றே அழைக்கப்படுகிறது. சென்னை செளகார்பேட்டை ஜெனரல் முத்தையா 6வது தெருவில் உள்ளது இத்திருக்கோயில்.- சந்த்ரமௌலி…

You may also like

Leave a Comment

13 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi