Wednesday, June 19, 2024
Home » நலங்கள் அருள்வார் நரசிம்மர்!

நலங்கள் அருள்வார் நரசிம்மர்!

by Porselvi

கோவை, அவிநாசியில் உள்ள தாளக்கரையில், நின்ற திருக்கோலத்தில் லட்சுமி நரசிம்மரை தரிசிக்கலாம். திருமகளின் சகோதரனான சந்திரனே இங்கு கருவறை விமானமாக அமைந்திருப்பதாக ஐதீகம். எனவே இது சந்திர விமானம் என வணங்கப்படுகிறது. விழுப்புரம், அந்திலியில், கருடனுக்கு காட்சியளித்த நரசிம்மரை தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இந்த நரசிம்மமூர்த்தியின் மீது படர்வது அதிசயமான நிகழ்வாகும்.

மதுரை, மாட்டுத்தாவணியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒத்தக்கடையின் அருகே யானைமலை அமைந்துள்ளது. இங்கு அருளும் நரசிம்ம மூர்த்திக்கு பிரதோஷ காலத்தில் பானகம் நிவேதித்து வேண்டிட நினைத்த காரியம் நிறைவேறுகிறது.விழுப்புரம், பரிக்கல்லில் அஷ்டகோண விமானத்தின் கீழ் நரசிம்ம மூர்த்தி அருள்கிறார். பதவி உயர்வு வேண்டுவோரும், இழந்த பதவியைத் திரும்பப் பெற வேண்டுவோரும் இவரை தரிசித்து பலனடைகின்றனர். பில்லி, சூன்ய பாதிப்புகள் இவரை நினைத்த மாத்திரத்திலேயே நீங்கும்.

காஞ்சிபுரம், அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு எதிரில் வீற்றிருக்கும் கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காது சற்றே தலை சாய்த்த நிலையில் காணப்படுகிறார். திருநெல்வேலி, மேலமாடவீதியில் உள்ள நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மரின் தோளை அணைத்தபடி மகாலட்சுமி தாயார் வீற்றுள்ளார். சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் எனும் திருப்பெயருடன் நரசிம்மரை தரிசிக்கலாம். இவருக்கு சிம்மமுகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம், கர்நூலில் உள்ள அகோபிலத்தில் பிரகலாத வரதன் எனும் திருப்பெயரில் பக்தபிரகலாதனுக்கு அருளிய நரசிம்மரையும் அவர் வெளிப்பட்ட உக்ரஸ்தம்பத்தையும்
தரிசிக்கலாம். இத்தலம் நவ நரசிம்மத் தலமாக போற்றப்படுகிறது. திண்டுக்கல், வேடசந்தூரில் உள்ளது, நரசிம்மப் பெருமாள் ஆலயம். இரண்யனை அழித்த கோபத்துடன் இருந்த நரசிம்மரை ஈசன் சரபேஸ்வர வடிவம் கொண்டு தணித்ததால் சிங்க முகம் நீங்கி, இயல்பாக தரிசனம் தருகிறார், பெருமாள்.

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டழகிய சிங்கர் 8 அடி உயரத்தில் திருமகளை தன் இடது மடியில் இருத்தி அருட்கோலம் பூண்டிருக்கிறார். ஒவ்வொரு சுவாதி நட்சத்திர தினத்தன்றும் இந்த நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் ஆலயத்தில், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்த களைப்பு தீர, சயன நிலையில் நரசிம்மரை தரிசிக்கலாம்.

தாம்பரம் செங்கல்பட்டு பாதையில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் பிரமாண்டமான நரசிம்மமூர்த்தியை தரிசிக்கலாம். கடன்கள் தீர, வழக்குகளில் வெற்றி பெற, இவர் அருள்
கிறார். ஆலயத்தில் உள்ள அழிஞ்சில் மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது.

மைசூர் ஜெயலட்சுமிபுரம், காளிதாசர் சாலை, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் பசு நெய் விளக்கேற்றி வழிபட, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதாக நம்பிக்கை.சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் முதல் பூஜை அழகியசிங்கர் என போற்றப்படும் யோகநரசிம்மருக்கே. அவர் எப்போதும் யோகத்திலேயே இருப்பதால் ஓசையால் அவர் யோகம் கலையக்கூடாது என்பதற்காக அவர் கருவறை கதவுகளில் உள்ள மணிகளுக்கு நாக்குகள் இல்லை.

திண்டிவனத்தில் உள்ள நரசிங்கப் பெருமாளை அவர் கோபம் தீர, வேண்டிக் கொள்ளும் தாயாரை வணங்கிய கோலத்தில் தரிசிக்கலாம். ராகுதசை நடப்பவர்கள் மற்றும் திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்காரர்களின் பரிகாரத்தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது.நாமக்கல் நரசிம்மர், குடைவரைக் கோயிலில் தேவர்கள் புடைசூழ அருள்கிறார். இத்தல தாயாரான நாமகிரித்தாயார்தான் கணிதமேதை ராமானுஜருக்கு அந்த புலமையை அருளியதாகக் கூறுவர்.

நாகப்பட்டினம், திருவாலியில் திருவாலி நகராளன் எனும் பெயரில் நரசிம்மரை தரிசிக்கலாம். இத்தலத்தைச் சுற்றிலும் குறையலூர் உக்ரநரசிம்மர், மங்கைமடம் வீரநரசிம்மர், திருநகரி யோகநரசிம்மர், மற்றுமொரு ஹிரண்ய நரசிம்மர் என நான்கு நரசிம்மமூர்த்திகள் அருள்கின்றனர்.

வந்தவாசிக்கு அருகே உள்ள ஆவனியாபுரத்தில் யாகத்தீயால் கருகிய நரசிம்மப் பெருமாளின் திருமுகத்தை தான் கேட்டு பெற்ற மகாலட்சுமித் தாயார் சிங்கமுகத்துடன் அருள்கிறாள்.
மதுரை சோழவந்தான் அருகில் உள்ள மன்னாடி மங்கலத்தில் நரசிங்கப்பெருமாள் திருமாலைப் போன்ற திருத்தோற்றத்தில் சிம்மமுகம் இல்லாது எழுந்தருளியுள்ளார். விழுப்புரம், பூவரசங்குப்பத்தில் லட்சுமியையும் நரசிம்மரையும் ஒரே அளவில் ஒருவரை ஒருவர் நோக்கிய நிலையில் தரிசிக்கலாம். இந்த நரசிம்மர் 12 திருக்கரங்களுடன் அருளாட்சி புரிந்து வருகிறார்.

ஜெயசெல்வி

You may also like

Leave a Comment

twenty − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi