Wednesday, June 5, 2024
Home » பன்றி முகப் பாவை

பன்றி முகப் பாவை

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மீகம் பெரும் பலமும் கோபாவேசமும் நிறைந்த விலங்கு காட்டுப்பன்றி, இந்த இனத்தில் ஆண் பன்றி, பெண் பன்றி ஆகிய இரண்டுமே வெறியுடன் எதிர்த்துப் போராடும் இயல்பைக் கொண்டவை. அவற்றின் இலக்கு வெற்றி அல்லது வீரமரணமே.  மக்களைக் காக்கும் தெய்வமாக வீரமும், அன்பும் நிறைந்த பெரிய தெய்வம் பெண்பன்றியின் வடிவில் காட்டில் உறைவதாகப் பண்டைய மக்கள் நம்பினர். போரில் வெற்றி அல்லது வீரமரணம் என்னும் நோக்கத்துடன் போரிடுவதைக் கண்ட ஆதிமனிதன் பன்றிமுகப் பாவை வெற்றியைத் தரும் வீரமங்கை என்று கொண்டாடினான். அவளை வழிபட்டால் சகல சுகங்களும் கிடைக்கும் என நம்பினர்.பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் அவளை மக்கள் ஏனமுகப் பாவை என்றும், கேழல் முகச்செல்வி என்றும் போற்றி வழிபட்டனர். வடமொழியில் அவள் வாராஹி எனப்படுகிறாள். தொடக்கத்தில் தொல் பழங்குடியினரிடம் மலையகத்தில் இருந்த வாராஹி வழிபாடு பின்னாளில் அனைத்துச் சமயங்களிலும் கலந்துவிட்டது என்பது ஆய்வாளர் கருத்தாகும். அவள் சைவ சமயத்தில் சப்த மாதர் களில் ஒருத்தியாகப் போற்றப்படுகிறாள். இவள் பூமாதேவியின் அம்சமாகத் திகழ்கிறாள். சாக்தர்கள் அவளை லலிதாதேவியின் சேனாதிபதியாகக் கொண்டாடுகின்றனர்.சித்தர்கள் இவள் மனதில் மறைந்து கிடக்கும் அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுத்து தூய்மையாக்கி மேலான ஞானத்தைத் தருபவளாகக் கொண்டாடுகின்றனர்.திருமூலர் தான் அருளிய திருமந்திரத்தில் ‘சக்தி பேதம்’ என்னும் தலைப்பில் சக்தியின் பல்வேறு வடிவங்களைத் தெரிவிக்கின்றார். திரிபுரசுந்தரி, சண்டிகை, கலைமகள், ராஜராஜேஸ்வரி போன்ற வடிவங்களைக் கூறும் அவர், வாராஹியையும் இப்படிக்கூறுகின்றார்.ஆன வராக முகத்தி பதத்தினள்ஈன வராகம் இடிக்கும் முசலத்தோடுஏனை உழுபடை ஏந்திய வெண்ணகைஊனமஹ உணர்ந் தாரஉளத்து ஓங்குமே – என்பது அவர் காட்டும் வாராஹி கோலமாகும். இதில் பூமியை பண்படுத்தி உழவைச் செய்து விளைபொருளைப் பெருக்கும் படைக்கருவிகளான தண்டம், ஏர் (கலப்பை) ஏந்தியவளாகவும், பன்றி முகம் கொண்டவளாகவும், ஈனத்தனம் செய்பவர்களின் உடலை அடித்து பதப்படுத்தும் உலக்கையை ஏந்தியவளாகவும், தன்னை உணர்ந்தவர் தம் உள்ளத்தில் வெளிப்படுபவளாகும் அவளைக் குறிப்பிடுகின்றார்.தொகுப்பு: ஆட்சிலிங்கம்

You may also like

Leave a Comment

17 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi