Tuesday, June 18, 2024
Home » திருப்பணிக்குப் பொருள் வேண்டி வேலாயுதத்தில் விளம்பரம் செய்த வேலன்!

திருப்பணிக்குப் பொருள் வேண்டி வேலாயுதத்தில் விளம்பரம் செய்த வேலன்!

by Lavanya

திருச்செந்தூர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 56 கி.மீ. தூரத்தில் கடலோரத்தில் அமைந்துள்ளது. இந்தத் திருத்தலத்தைப் பழைய கபாடபுரம் என்போரும் உண்டு. வால்மீகி இராமாயணத்தில் இந்தக் கபாடபுரம் பற்றிக் கூறுகிறது. ஒரு காலத்தில் இந்த ஊர் சந்தனக் காடாக இருந்ததாம். ‘அலைவாய்’ என்ற பெயரும் இந்த ஊருக்கு இருந்திருக்கிறது. ‘திருச்சீரலைவாய்’ என்பதுதான் சரியான தமிழ்ப் பெயர் என்று தமிழறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதற்குச் சாட்சி சொல்வது போல கோயிலுக்குள் ‘அலைவாய் உகந்த பெருமாள் என்று ஒரு உற்சவ விக்ரகம் இருக்கிறது.’‘வெண்டலைப்புணரி அலைக்கும் செந்தில் நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை’ என்று சங்க இலக்கியமான புறநானூறும், சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்’ என்று சிலப்பதிகாரமும் போற்றுகின்றன. ஆகவே சிலப்பதிகார காலத்துக்கும் முற்பட்ட ஊர் திருச்செந்தூர் என்றறியலாம்.

வடமொழியில் இதற்கு ஜெயந்திபுரம் என்று பெயர் என்றும், ஜெயந்திபுர மகாத்மியம் என்ற ஒரு நூல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. சுப்பிரமணியர் சூரனை அழித்து ஜெயங்கொண்ட ஊராகையால் ஜெயிந்திபுரம் ஆயிற்று என்கிறார்கள். இங்கு ‘செந்தில்’ குடி கொண்டுள்ள ஆண்டவனாதலால் ‘செந்திலாண்டவன் கோயில்’ என்பது தான் பரவலான பெயர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என்பது தான் அதிகார பூர்வமான பெயர். சுவாமி சுப்பிரமணியர் தான், ஆச்சரியம் என்னவென்றால் ஒரே சுவாமி சண்முகம், மூலவர் என்று இரு உருவாய் இரு சந்நிதி களில் இருவிதமான பூசாரிகளின் ஆதிக்கத்தில் இருக்கிறார். இரண்டு சந்நிதியும், ஒரே மண்டபத்தில் தனித்தனியே இருக்கின்றன.

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பார்கள். கோயிலுக்கு அழகு சேர்ப்பது இராஜகோபுரம். நாம் கோபுரங்கள் மீது ஏறிச் சென்றால் எழு நிலை மாடத்தில் ஒவ்வோர் அடுக்கிலும் தூண்களே இல்லாது பெரிய மண்டபத்தில் நான்கு புறத்திலும் காற்று கலந்து வீசுகிற அழகையும் இனிமையையும் உணரலாம்.இதே போன்றதொரு கோபுரத்தில் இருந்துதான் ‘இராமானுஜர்’ எனக்கு நரகம் வந்தாலும் இந்த உலக மக்கள் எல்லாம் என்றும் ‘இன்ப வாழ்வு வாழ முயல்வேன்’ என்று கூறித் துள்ளி எழுந்தார்.

இத்தகைய கோபுரத்திலிருந்து தான் அருணகிரியார் கிளிபோலக் கவலையற்றுத் திருப்புகழ் பாடினார். ஒரு காலத்தில் கோபுர மாடங்களில் கற்றவர் வாழ்ந்து கலைகளைப் பயிற்றுவித்து வந்தனர். இப்படி எண்ணற்ற ஆலயங்களில் இராஜகோபுரம் ஆன்மீகத்தையும் கலைகளையும் பரப்பி வந்தது. கோயிலுக்கு மிகுந்த அழகு தருவது இராஜகோபுரம். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் பல நூற்றாண்டுகளாக இராஜகோபுரம் அமைக்கப்படாமல் இருந்தது. சுமார் முன்னூற்று ஐம்பது ஆண்டுகட்கு முன்புதான் இராஜகோபுரம் கட்டப்பட்டது.

கோயில் கடற்கரையோரம் இருப்பதால், ஊர் மேற்கே இருக்கிறது. அதாவது ஊரின் கீழ்க்கோடையில் கோயில் இருக்கிறது. ஆகவே இங்கு மேல வாசலில் கோயிலில் பிரதான பெரிய கோபுரம் இருக்கிறது. கோயிலுக்கு அப்பால் கடல் தான். ஆனால் மேலக் கோபுரம் வழியை இப்போது யாரும் பயன்படுத்துவது இல்லை. பக்தர்கள் எல்லாரும் தெற்கு வாசல் வழியாகவே
கோயிலுக்குள் வருகிறார்கள்.

இந்த இராஜகோபுரம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். இதை உறுதி செய்ய கோபுரத்தின் ஆறாம் மாடத்தில் நாயக்கர் கால பாணி ஓவியங்கள் இருக்கின்றனவாம். மேல வாசல் கோபுரம் 9- நிலைகள் உடையது. 137 அடி உயரமானது. கீழமேலாக 65 அடி அகலமும், தென்வடலாக 90 அடி நீளமுடைய அஸ்திவாரத்தின் மீது அது எழுந்து நிற்கிறது. கோபுரத்தின் மீது
9 -கலசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கலசமும் ஏழரையடி உயரம் கொண்டது. இந்தக் கோபுர வாசலை ஆண்டுக்கு ஒருமுறை சுப்பிரமணியர், தெய்வானை திருமணத்தின் போது மட்டும் திறக்கிறார்கள்.

திருச்செந்தூர் செந்தில் குமரன் கோயில் இராஜகோபுரம் உருவானதே ஒரு சுவையான வரலாறு:- திருவாவடுதுறை ஆதினத் திருமடாலயம், நாகை மாவட்டத்தில் கும்பகோணம்- மயிலாடுதுறைப் பெருவழியில் திருவாலங்காடு என்னும் திருத்தலத்திற்கு அருகே உள்ளது. பெருவழியில் அமைக்கப் பெற்றுள்ள அழகொளிரும் வளைவு வழியாகச் சென்றால், ஒரு கிலோ மீட்டர் தொலைவில், அருள்மிகு கோமுத்தீசுவரர் திருக்கோயிலையும் அடுத்து பிரம்மாண்மாகக் காட்சி தரும் திருமடாலயத்தையும் காணலாம். இந்தத் திருவாவடுதுறை ஆதினத் திருமடாலயம், ‘திருக்கயிலாய பரம்பரை’ எனக் குறிப்பிடப் பெறுகின்றது.

திருக்கயிலாய பரம்பரை, மெய்கண்ட சந்தான மரபு வழி வந்த அருள் திரு நமச்சிவாய மூர்த்திகளை, ஆதி முதல்வராகக் கொண்டு ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப் பெற்ற திருவாவடுதுறை ஆதீனத் திருமடாலயத்தின் அருளாட்சியை, வாழையடி வாழையாக வந்த மகாசந்நிதானங்கள் ஏற்றருளி, தமிழ் மொழியையும், சைவநெறிகளையும், ஆலயங்களையும் செழிக்கச்செய்து வருகின்றனர். சீலமும் ஞானமும் கொண்ட ஆதீன அருளாளர் மரபு காலத்திற்கேற்ற சமுதாயப் பணிகளில் கவனம் வைத்துத் தொழத்தக்க தொண்டாற்றிவருவது-
வரலாற்றுச் சிறப்பிற்குரியது.

இத்தகு பெருமை பெற்ற திருவாவடுதுறை ஆதீனம் இருபது திருக்கோயில்களையும், இருபத்து நான்கு சிறிய ஆலயங்களையும் நிர்வகித்து வரும் ஆதீனத்திற்கு, கிளை மடங்களாகவும், கட்டளை மடங்களாகவும் நாற்பத்தொன்பது உள்ளன. திருக்கயிலாயதுறை திருவாவடுதுறை ஆதீனத்தின் கிளை மடங்களில் ஒன்றாகத் திகழ்வது திருச்செந்தூரில் அமைக்கப்பட்டிருக்கும் ‘தேசிக மூர்த்தி நிலையம்’ எனும் பெயர் தாங்கி அமைக்கப்பெற்ற திருமடமாகும்.

திருச்சீரலைவாய், திருச்செந்தில், ஜெயந்திபுரம், கந்தமாதனமலை, செந்திலாண்டவன் கோயில் என்றெல்லாம் போற்றப்படும் திருச்செந்தூரில் சுமார் 350-வருடங்களுக்கு முன்பு ஓர் அற்புதமான அருளாடல் நிகழ்ந்தது. ஒரு நாள் திருச்செந்தூரில் அமைந்திருக்கும் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிக மூர்த்தி சுவாமிகள் என்னும் ஒடுக்கத் தம்பிரான் சுவாமிகளின் கனவில் திருமுருகப் பெருமான் தோன்றி ஒரு திருப்பணி செய்யக் கட்டளையிட்டார். ராஜகோபுரம் கட்டப்பட வேண்டும் என்று பல நாட்களாக எண்ணி வந்த தேசிக மூர்த்தி சுவாமிகளுக்கு முருகன் கட்டளையிட்டது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உடனே கோபுரம் கட்டும் வேலையை விரைவாகத் தொடங்கினார்.

பல நூற்றாண்டுகளாக இக்கோயிலுக்கு இராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. அக்குறையைப் போக்க திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிக மூர்த்தி சுவாமிகள், இவரை ‘ஒடுக்கத்
தம்பிரான்’ என்றும் கூறுவர். செந்தூர் முருகன் கட்டளைப்படி இராஜகோபுரம் கட்டத் தீர்மானித்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். தினமும் கோபுரம் கட்டும் பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு கூலியாக பன்னீர் இலை விபூதி தருவார்.

தூண்டுகளை விநாயகர் கோயில் அருகில் சென்று பணியாளர்கள் தங்கள் கையில் உள்ள பன்னீர் இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் அன்றைய வேலைக்குரிய கூலி இருக்கும். பல நாட்கள் இப்படியே ராஜகோபுரம் உருவாக்கும் பணி தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற்றது வந்தது.திடீரென்று ஒருநாள் இந்த அதிசயம் நின்று போனது. காரணம் தெரியாமல் தேசிக மூர்த்தி சுவாமிகள் செய்வதறியாது திகைத்தார். கோபுரம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உரிய கூலியைக் கொடுக்க இயலாத நிலையை எண்ணி வருந்தினார். திருச்செந்தூர் திருக்கோயில் இராஜகோபுரம் கட்டும் பணியில் ஆறாம் நிலை வந்தபோது, பொருள் கிடைக்காது கோபுரப் பணி நின்று போனது. கோபுரம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று செந்தில் குமரனிடம் சுவாமிகள் பிரார்த்தித்து வந்தார்.

ஒரு நாள் நடு இரவில் தேசிக மூர்த்தி சுவாமிகளின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், ‘அன்பரே’, காயல்பட்டினத்தில் சீதக்காதி என்ற வள்ளல் இருக்கிறார். அவரிடம் சென்று உதவி பெற்று வந்து திருப்பணியை முடியுங்கள்’’ என்று கட்டளையிட்டார். அதைக் கேட்டு மகிழ்ந்த தேசிக மூர்த்தி சுவாமிகள் காயல்பட்டினம் சென்று வள்ளல் சீதக்காதியிடம் முருகன் இட்ட கட்டளையை எடுத்துக் கூறினார்.

வள்ளல் சீதக்காதியும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஒரு பெரிய மூட்டை நிறைய கல் உப்பினைக் கொடுத்தனுப்பினார். அதைத் திருக்கோயிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்த போது அவை தங்கக் காசுகளாக மாறியிருந்ததுக் கண்டு வியந்த சுவாமிகள் மகிழ்ச்சியுடன் மீண்டும் ராஜகோபுரம் கட்டும் பணியைத் தொடங்கினார். மீண்டும் சோதனை அந்தப் பொருளும் சில
நாட்களுக்கு மட்டுமே உதவின.

மீண்டும் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. தேசிக மூர்த்தி சுவாமிகளுக்கு மீண்டும் கவலை சூழ்ந்தது. ‘முருகா, இது என்ன சோதனை?’ என்று எண்ணியெண்ணி மனம் வருந்தினார். மீண்டும் கட்டடப் பணி முடியாமல் நின்று போய்விட்டதே. யாரிடம் போய்க் கேட்பது. இப்பணியை எப்படிச் செய்து முடிப்பேன் என்று வருந்தினார்.

அன்று இரவு செந்தில் குமரன் அவரது கனவில் மீண்டும் தோன்றி ‘அன்பரே’ எனது கை வேலாயுதத்தில் கோபுரம் கட்டும் திருப்பணிக்கு பொருள் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதை எடுத்துக் கொண்டு போய் பொது மக்களிடம் கொண்டு சென்று திருப்பணிக்குப் பொருள் வழங்குமாறு கேளுங்கள். பணி விரைவில் முடியும். ‘‘கவலற்க’’ என்று செந்தில் முருகன் அசரீரியாக வரமீந்தார்.

விடியாற்காலையில் தேசிக மூர்த்தி சுவாமிகள் கண் விழித்தபோது, சுமார் நான்கு அடி உயரமுள்ள செம்பினால் ஆன முருகன் கை வேல் ஒளி வீச தனக்கு முன்னே இருப்பதைக் கண்டு மெய் சிலிர்த்தார். அதில் கட்டிடப் பணி செவ்வனே செய்து முடிக்க நன்கொடை தருமாறு வேலாயுதத்தீன் நீண்ட அகலமான தலைப்பகுதியில் சில வாசகங்கள் கல்வெட்டுப் போல் பொறித் திருக்கக் கண்டு மெய்சிலிர்த்தார்.

அதிலே பண்டைய எழுத்து வடிவில் வாசகங்கள் பொறிக்கப்பட்டு, அதன் இறுதியில் இப்படிக்கு ‘ஆறுமுக நாயனார்’ என்ற பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. கண்டு மிகவும் ஆச்சர்யம் கொண்டார். செந்தில் முருகன் உத்தரவிட ஆதின கர்த்தாவே இப்படியொரு வேலாயுதத்தில் முருகனிட்ட கட்டளை உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இருவேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன. தேசிக மூர்த்தி சுவாமிகள் பயபக்தியுடன் அவ்வேலாயுதத்திற்கு பூஜைகள் பல செய்து, அதை வீரபாகு என்ற நபரிடம் கொடுத்து ஆலயத்திருப்பணிக்கு பொது மக்களிடமிருந்து பொருள் பெற்று வரும்படி அனுப்பி வைத்தார்.

‘‘சுமார் 4 அடி உயரமுள்ள செம்பினாலான மிகவும் பழமை வாய்ந்த இந்த வேலாயுதம் இன்றைக்கும் திருச்செந்தூர் நகரில் கீழரத வீதியில் உள்ள திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை திருஆதீன மடத்தின் ‘தேசிக மூர்த்தி நிலையம்’ எனப் பெயர் கொண்ட திருமடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தினமும் பூஜிக்கப்பட்டு வருகிறது.’ வீரபாகுவும் அந்த முருகன் கை வேலாயுதத்துடன் சென்று பக்தர்களிடம் திருப்பணிக்குப் பொருள் பெற்று வந்தார்.

உரிய பொருள் கைவரப் பெற்றதும் ராஜகோபுரம் கட்டும் பணியும் நிறைவு பெற்றது. மிகவும் பழமை வாய்ந்த அந்த ‘வேலாயுதம்’ இன்றைக்கும் திருச்செந்தூர் கீழரதவீதியில் உள்ள திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை திருஆதீன மடத்தின் ‘தேசிக மூர்த்தி நிலையம்’ எனப் பெயர் தாங்கியுள்ள திருமடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நாளும் பூஜிக்கப்பட்டு வருகிறது. திருச்சீரலைவாய் திருக்குமரனைத் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள் தவறாமல் தேசிக மூர்த்தி நிலையம் சென்று முருகன் திருப்பணிக்குப் பொருள் வேண்டி, தனது வேலாயுதத்தில் வேண்டுகோள் விடுத்த வேலினைக் கண்டு தரிசித்து இன்புறலாம்.

டி.எம்.ரத்தினவேல்

You may also like

Leave a Comment

12 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi