Sunday, May 19, 2024
Home » தரிகொண்ட வெங்கமாம்பா

தரிகொண்ட வெங்கமாம்பா

by kannappan
Published: Last Updated on

ஆண்டாள் தன் தந்தை பெரியாழ்வார் வழிகாட்டி அரங்கன் திருவடியில் சரணம் பற்றி ஜோதி வடிவில் இரண்டெனக் கலந்தாள். மீராவோ, கண்ணன் மீது கொண்ட காதல் அகம் குழைந்து அவள் பாடிய கீர்த்தனைகள் கேட்போர் உள்ளம் பாகாய் கரையும். அவளின் பாடல்களில் காணப்படும் எளிமை பாமரனுக்கும் புரியும். அவ்வரிசையில் இடம் பெற்ற மற்றொரு பெண் பாவையே ‘வெங்கமாம்பா’ என்னும் திருநாமம் உடையவள். ஆண்டாளை ஆட்கொண்டது அரங்கன் எனில், வெங்கமாம்பாவை ஆட்கொண்டது வேங்கடவனே ஆவான். ஆந்திர மாநிலத்தில் சித்தூர் ஜில்லா வயலபாடிலு அருகே ஒரு குக்கிராமம் உண்டு. அதற்கு ‘தரி கொண்டா’ என்று பெயர், ‘தரி’ என்பதற்கு தயிர் பானை என்பதாகும். முன்னொரு காலத்தில் லட்சுமி என்ற பெண் தயிர் விற்பவள், மலையின் மீது ஏறியே கடந்து போகவேண்டும். ஒரு சமயம் வெயிலில் ஒரு பொருள் கீழே பளபளவென மின்னுவதைக் கண்டாள். அதை (கல்) எடுத்து தயிர் பானையில் போட்டாள். ஆச்சரியம்! அந்தக் கல் பேசத் தொடங்கியது அசரீரி போன்று. இங்கு ஒரு கோயில் கட்ட வேண்டுமென கேட்க ஊர் மக்கள் கூடி முடிவெடுக்க, அந்தக் கல் சாளகிராமக் கல்லாகும். லட்சுமி நரசிம்மர் வடிவம் தாங்கியது. அவ்வாறுதான் கோயில் எழுப்பப்பட்டது என்பது ஐதீகம்.இந்த தரி கொண்ட கிராமத்தில் நந்தவரிலு வம்சத்தில் கிருஷ்ணயமத்ய என்பவர் அதி குணவதியான மங்கமாம்பா என்ற பெண்மணியை மணந்தார். சில காலம் மகட்பேறு இன்றி கவலை அடைந்தனர். நரசிம்மன் அருளால் மங்கமாம்பா கருவுற்றாள். ஓர் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். 1730 ஆம் ஆண்டு சிறப்படைந்தது. தன்னிகரில்லா மகத்துவம் வாய்க்கப் பெற்ற நாளில் திருமகள்போல பேரழகும் பூமி தேவியைப் போன்ற பொறுமையும் கலைமகளைப் போன்ற கல்வியறிவும் பெற்றவளாக மண்ணில் உதித்தாள். உக்ர மூர்த்தியான நரசிம்மன் அருள் பெற்றவள். அனைவரையும் கவர்ந்திழுத்தாள். இரும்பை காந்தம் இழுப்பது போன்று இளமையிலே நரசிம்மர் மீது பக்தி கொண்டாள். எப்பொழுதும் நரசிம்மர் கோயிலிலும் ஆஞ்சநேய சுவாமியின் அருகேயும் அமர்ந்து தியானம் செய்தாள். ஊரார் அவள் இறைவன் பால் கொண்டு நேசத்தைக் கண்டு வியந்தனர். சிறுமியாக இருந்தவள் பருவ வயதை நெருங்கினாள். பெற்றோருக்கு மனதில் சிறிய அச்சம் துளிர்த்தது. குமரிப் பருவம் அடைந்தால் இவ்வாறே கோயில், பஜனை, தாளம் தவறாமல் அடி போட்டு ஆடும் நிலையைத் தொடர்ந்தால் குடும்பத்திற்கு இழுக்கல்லவா? யார் இவளை மணந்து வாழ்வளிப்பார் என்று பல வினாக்கள் உள்ளத்தில் எழுந்து ஆட்டிப் படைத்தது.மகளிடம் நீ திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் சென்றால் உன் வீட்டிலுள்ளோர்க்கு என்ன சமைத்து வைப்பாய் என்று விளையாட்டாக ேகட்பதுபோல கேட்டறிய முயன்றாள் அன்னை. ஆனால் அவளோ! சிறிதும் வெட்கமோ நாணமின்றி தெளிவுபடுத்தினாள். தனக்கு, கணவனாக வருபவன் திருமலையில் குடிகொண்ட சீனிவாச வெங்கடேசனே! அவரைத் தவிர மற்றொருவரை கணவனாக ஏற்றுக் கொள்ள மனம் இசைவு தரவில்லை என்று மொழிந்தாள். அவளின் தீர்க்க முடிவைக் கண்டு பீதி அடைந்தனர். மானிடர் வாழ்க்கைக்கு இது ஒப்புமா ?ஆண்டாள், திருவரங்க பெருமானே தனக்கு கணவனாக வரித்தாள்.அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்வழுத்தாய் மனமே மகிழ்ந்து.மானிடற் கென்ற பேச்சுப் படில் வாழகில்லேன் என்றாள். பெரிய ஆழ்வார் தம் மகளின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆனால், வெங்கமாம்பாவின் தாயார் என்ன செய்ய இயலும். பெரியோர்களுடன் கலந்து பேசினார். தன் மகள் வெங்கமாம்பாவிற்கு ஏற்ற குணவான் கிடைக்க வழி தேடினார்.வெங்கடாசலபதி என்னும் செல்வன் இறை பக்தியும் நல்லொழுக்கமும் உள்ளவன். அவனே வெங்கமாம்பாவிற்கு ஏற்றவன் என்று முடிவு எடுத்தனர். ஆனால், எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் தந்தை உள்ளம் நோகாமல் வரனை ஏற்றாள். திருமணம் வெங்கடாசலபதியுடன் நன்கு நடந்தேறியது. புகுந்த வீட்டில் அவளின் தன்னலமற்ற போக்கை ஏற்கவில்லை. கணவன் அவளுக்கு துணையாகப் பக்க பலமாக இருந்தான்.ஒருநாள் ஏதோ வியாதி படுத்தியது. ஜாதகம் அறிந்தவன். எதிர்க் காலத்தைத் துல்லியமாக கணக்கிடக் கூடியவன். வெங்கமாம்பா ஆன்மீக பக்தி நரசிம்ம பெருமான் அருள் பூரணமாகக் கிடைக்கப் ெபற்றவள். அவள் தன்னுடன் வாழ புவியில் பிறக்கவில்லை. உலக நலனை முன்னிட்டு பக்தி இலக்கிய நூல்கள் இயற்றவும், அந்த மலைமேல் குடியிருக்கும் ஏழுமலையானின் புகழை வைணவ பக்தியை பரப்பவே அவதரித்தவள் என்பதை உணர்ந்தான். தனக்கு ஆயுள் மிகவும் குறைவு என்பதையும் துல்லியமாகக் கணக்கிட்டு அறிந்தான். அச்சமயம் அவள் புஷ்பவதியாக இருந்தாள். எம்பெருமான் வீதிஉலா வரும்போது முன்னால் அவர்கள் பாடும் பாடலுக்கு ஏற்ப நடனமிட்டு தன்னையே மறந்து ஆடுவாள். அவ்வாறு வெங்கமாம்பாவை காண்பதற்காக ஊருக்கு வந்த வெங்கடாசலபதி கண்முன் மனைவி தாளம் தப்பாமல் ஆடும் அழகைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தான். அதை அறியாத மூட ஜனங்கள் கணவன் கதறும்படி தூய்மையற்றவளாக தெருவில் நடை பயின்றாளே! என வருந்தினான் என அவரவர் தோரணைக்கு ஏற்ப கட்டுக் கதைகள் பின்னப்பட்டது. பெற்றோர் வேதனை அடைந்தனர். அன்று முழுவதும் உணவு வழங்கப்பட மாட்டாது என்று கூறினாள் மங்கமாம்பா. பசி பொறுக்காதவள் துடித்தாள். கணவன், மாமியார் மனம் சங்கடப்படாமல் அதே சமயம் தன் மனைவியையும் விட்டுக் கொடுக்காமல் பேசினான். அவள் விருப்பப்படியே எதையும் செய்யட்டும் தடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டான். இவ்வாரே காலம் உருண்டோடியது. ஒருநாள் வயலில் வேலைக்குச் செல்லும்போது அரவம் தீண்டி உயிர் இழந்தான், வெங்கடாசலபதி. பெரியோர்கள் ஒன்று கூடி சடங்குகள் செய்ய முற்பட தடுத்து விட்டாள் வெங்கமாம்பா. மங்கள சின்னங்கள் என்னுடன் பிறக்கும் போதே பிறந்தது. மேலும், எம்பெருமான் திருமலை வெங்கடேசன் இருக்கும்போது அழிக்க விரும்பவில்லை என்று துணிச்சலுடன் எடுத்து உரைத்தாள். அவள் பேச்சில் பொதிந்துள்ள வேதாந்த ரகசியங்கள் புரிய மக்கள் திண்டாடினர். பெற்றோரின் துணையும் தேவையற்ற நிகழ்வுகளும் தடுக்கப்பட்டன. அதன் பின்பு நரசிம்மர் கோயிலில் தியானத்தில் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தினாள்!வெங்கமாம்பா துணிச்சலை காணப் பொறுக்காதவர் பலர் இருந்தனர். அவர்கள் அவளைப் பற்றி அவதூறாகப் பழித்தனர். கணவன் இறந்த பின்னரும் மங்களச் சின்னங்கள் தரித்து இருக்கிறாள் என்று பலவாறு துவேஷித்து பேசினர். அக்கடும் சொற்களைக் கேட்டு பெற்றோர் வருந்தினர். திருத்துழாய் மாலையை சுவாமி நரசிம்மருக்கு கொடுக்க அவளை அவமதித்து மலரை எறிந்தார், கோயில் பட்டாச்சாரி.மனம் பொறுக்காமல் கண்ணீர் சிந்தியபோது, திருமலை நாயகன் முன் தோன்றி அம்மாலையை ஏற்றான். சூடிக் கொடுத்த மாலையும் கீர்த்தனையில் உருகவைத்த பாவையும் மீராவும் போன்றே உன்னுடைய பக்தியை ஏற்றோம் என்று கூறிய சொல் கேட்டு பேரானந்தம் அடைந்தாள். யோகக்கலைப் பயில விருப்பப்பட்டதை தன் பெற்றோரிடம் கூறினாள். அவர்கள் மகளின் ஆர்வத்தை பூர்த்தி செய்ய ‘சுப்ரமண்யுடு’ என்ற குருவைத் தேடிச் சென்றார்கள். அவர் அவளை சிஷ்யையாக ஏற்றுக் கொள்ள, மறை நூல்களும் யோகக் கலையும் பயின்று திரும்பினாள். ஒருமுறை ‘நரசிம்ம சதகம்’ என்னும் நூலை ஓலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதி பூஜை அறையில் வைத்திருந்தாள். வேண்டாத உறவினர் ஓலைச் சுவடியை எரிக்கவும் அவளுடைய மகள் வயிற்று வலியால் துடித்தாள். வைத்தியராலும் குணப்படுத்த முடியவில்லை. வெங்கமாம்பா கைவிரல்கள் பட்டதும் வலியும் எரிச்சலும் நீங்கியது. தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினர். இவ்வாறு இடையூறுகளை எல்லாம் வீட்டிலுள்ளோர் நிறுத்தினர். அவளின் இறை பக்தியை மெச்சினர்.ஊரில் வேலையில்லாமல் வம்பு பேச்சுப் பேசுவோர் வெங்கமாம்பா தரித்திருக்கும் மங்கல சின்னத்தை களைந்தெறிய வேண்டி புவனகிரி சங்கரானி மடாதிபதியை ஊருக்கு அழைத்து வந்தனர். அவர் முன் வெங்கமாம்பாவை திரைச் சீலை இட்டு நாற்காலியில் அமர்ந்தார், மடாதிமதி. திரைச்சீலைக்கு அப்புறம் நின்றவள், திரையை நீக்காமலே நீ கைம்மை ஏற்ற பின்பும் மங்கள சூத்திரம் அணிவது தவறு. பெண் குலத்திற்கு அவமானம். நம் குல தர்மம் ஏற்கவில்லை என்று பலவாறு அறிவுரை வழங்கினார். நீ சொல்லியவாறு கடைபிடித்து வாழ்வாயா? என்று கேட்டார். எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை. அந்நிலைகண்டு வெகுண்டவர் பதில் ஏன் அளிக்கவில்லை சரி என்று கூறு என அதட்டினர்.திரைச் சீலை விலகினால் பேசுவேன் என்று துணிச்சலாக பதில் அளித்தார்.  ‘‘கைம்பெண்கள் முகத்தில் விழிப்பதில்லை. கணவன் இறந்த பின்பு கூந்தல் முடிக்கக் கூடாது. தலைமுடியை இறக்கி மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். அதுதான் தர்மம்’’ என்று கூறினார், மடாதிபதி. அவரின் உரையைக் கேட்டவள், சுவாமி! தங்களின் கட்டளையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், சிறிய விண்ணப்பம் அதனைக் கேட்டருள வேண்டுகிறேன். சுற்றி நின்றிருந்த மக்கள் மடாதிபதியின் சக்தியைப் போற்றினர். அவள் மீது வன்மம் கொண்ட துவேஷர்கள் பூரிப்பில் திளைத்தனர். ஆனால், அவளின் பண்பை உணர்ந்தோர் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தன.உன் தரப்பு செய்தியைக் கூறு என்றார். மொட்டை அடித்துக் கொண்டால் மீண்டும் கூந்தல் வளராது எனில் தவறாது ஒப்புக்கொள்கிறேன்.அடிகளாருக்கு சினம் உச்சிக்கு ஏறியது. ‘‘ஆணவம் முதிர்ந்த நங்கையை காண வேண்டும். அவள் என் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று கடும் கோபத்துடன் மொழிந்தார். ‘‘அதற்கும் முன்பாக நீங்கள் அமர்ந்திருக்கும் ஆசனம் விட்டு எழுந்தருள வேண்டும்.காலதாமதம் விபரீதத்தை உண்டாக்கும்.’’தன்னையே எழுந்திருக்கச் சொல்லும் அளவிற்கு மமதையா? என்று வெறுப்புடன் எழுந்தார் மடாதிபதி.‘‘என்ன ஆச்சரியம்! அப்பப்பா! சுற்றிச் சூழ்ந்திருந்த மக்கள் கண்கள் விழிகள் விரிந்தன. வாயைத் திறந்தோர் ஆ… வென இயல்பாக மூடவும் மறந்தனர்.அவ்விடம் எங்கும் புகை மண்டலம்! மடாதிபதி வியப்பின் எல்லையைக் கடந்தார்.திரைச் சீலை அறுந்து விழுந்தது.(தொடரும்)பொன்முகரியன்…

You may also like

Leave a Comment

three + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi