காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சனி பகவானை தரிசிக்க தினமும் தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தரகள் வந்து தரிசனம் செய்வர். இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறும்.
இந்தாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்து அதிகாலை 5.30 மணியளவில் கோயில் வாசலில் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த 5 தேர்களில் விநாயகர், சுப்ரமணியர், செண்பக தியாகராஜர், நீலோத்பாலாம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து புதுச்சேரி அமைச்சர் சாய்.ஜே.சரவணகுமார், எம்எல்ஏ சிவா ஆகியோர் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தியாகேசா, ஈஸ்வரா கோஷம் முழங்க வடம் பிடித்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்கள் நான்கு வீதிகள் வழியாக கோயிலை சுற்றி வந்து மாலை நிலையை அடையும்.
பிரமோற்சவ விழாவில் நாளை(20ம் தேதி) இரவு சனி பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலாவும், நாளை மறுநாள் (21ம் தேதி) தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.