Monday, May 20, 2024
Home » சௌமியாவின் கண்களில் எப்போதும் ஃபயர் இருக்கும்!

சௌமியாவின் கண்களில் எப்போதும் ஃபயர் இருக்கும்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி கோவை கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்துள்ளது என முகமெல்லாம் புன்னகைக்கும் சௌமியா நாடோடி சமூகமான லம்பாடி சமூகத்தில் இருந்து மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகியுள்ள முதல் மாணவி.அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க அரசே முழு பொறுப்பை ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியான நொடியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. ‘நோ வேர்ட்ஸ் டூ சே’ எனச் சுறுக்கமாய் சொன்னவர், எனது பெற்றோர் இந்த செய்தியை கேட்டு அப்படியே திகைத்து நின்றார்கள் என்கிறார். மிகவும் ஏழ்மையான குடும்பம் என்னுடையது. அம்மா, அப்பா இருவருமே கேரள மாநிலத்தில் தினக்கூலிகள். அரசு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு இவ்வளவு பணத்தை எப்படிப் புரட்டி 5 ஆண்டும் படிக்க வைக்கப் போகிறோம் என்ற குழப்பத்தில் இரண்டு நாளாகச் சாப்பிடாமலே கவலையில் இருந்திருக்கிறார்கள். இயல்பிலே எனக்கு படிப்பு நன்றாக வரும். 10ம் வகுப்பில் 461 மதிப்பெண்களும் +2ல் 410 ம் கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் +2 வரை படித்தேன். என் பள்ளி ஊருக்கு ஒதுக்குபுறமாக காட்டுப் பகுதியை ஒட்டி அமைந்திருக்கும். பள்ளியில் இருந்து அரைகிலோ மீட்டரில் பி.எல்.தண்டா கிராமத்தில் என் வீடு உள்ளது. அம்மாவும் அப்பாவும் வேலைக்காக கேரளாவில் தங்கிவிட, நானும் என் இரண்டு தம்பிகளும் படிப்பிற்காக பாட்டி தாத்தா துணையோடு திருவண்ணாமலையில் இருக்கிறோம்.ரொம்ப சின்ன வயதில் எனக்கு டாக்டர் கனவு இருந்தது. பத்தாம் வகுப்பு படித்தபோது திருவண்ணாமலை மருத்துவமனை ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கிருந்த இளம் பெண் மருத்துவர் ஒருவரை பார்த்த கனத்தில் மீண்டும் ஸ்டெத்தெஸ்கோப்பும் வொயிட் கோர்ட்டுமாக என் மருத்துவர் கனவு விழித்துக்கொள்ள, நானும் டாக்டராவேன் என்பதை உறுதியாய் நம்பத் தொடங்கினேன். அரசு நடத்தும் நீட் பயிற்சியில் இணைந்து படித்ததில் முதல் முயற்சி தோல்வியானது. அரசுப் பள்ளியில் தமிழ் மீடியம் படித்த மாணவர்களால் நீட் தேர்வை எழுத முடியாது, சி.பி.எஸ்.ஸி மாணவர்களால் மட்டுமே முடியும் போன்ற வார்த்தைகள் காதுகளில் விழ எனக்கும் அந்த தயக்கம் இருந்தது. அப்பா என்னை பி.எஸ்.ஸி நர்ஸிங் சேர்த்துவிட, மனம் அதில் ஒட்டாமல், மருத்துவராவதே என் இலக்கு என தீர்க்கமாய் முடிவு செய்தேன்.மீண்டும் அப்பாவிடம் பேசி, இரண்டாவது முறை நீட் தேர்வை சந்திக்க, கோவையில் இருக்கும் பயிற்சி மையம் ஒன்றில் மிகமிகத் தாமதமாக நவம்பர் மாதத்தில் இணைந்தேன். எதிர்பாராமல் மார்ச்சில் வந்த கொரோனா ஊரடங்கில் வீட்டுக்கே திரும்ப வேண்டிய நிலை. வீட்டில் இருந்தே பயிற்சிகளை மேற்கொண்டதில், இரண்டாவது முறை எனக்கு 184 மதிப்பெண்கள் கிடைத்து தேர்வானேன். ஆனால் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய இந்த மதிப்பெண்கள் பத்தாது.விடாமல் மீண்டும் நீட் எழுத முயற்சித்தபோதுதான், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில் கோவை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் கல்லூரியில் கட்டச் சொல்லும் 2 லட்சத்திற்கு என்ன செய்வது என பெற்றோர் விழிபிதுங்கி நிற்க.. என் மருத்துவப் படிப்பு கானல் நீர்தான் என்றானது. ஆனால் என் பள்ளித் தலைமை ஆசிரியர், பணம் குறித்து பிறகு யோசிக்கலாம், முதலில் கிடைத்த வாய்ப்பை விடாமல் உறுதி செய்துவிடுங்கள் என்றார். பணம் கட்ட ஒரு வாரம் அனுமதி பெற்று திரும்பினோம்.ஆனால் என்னோடு கலந்தாய்வுக்கு வந்த சில மாணவர்கள் பணம் கட்ட முடியாது என முடிவு செய்து இடத்தை உறுதி செய்யாமலே திரும்பிவிட்டார்கள். அடுத்த இரண்டு நாளில், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புச் செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியாக அந்த நொடியில் நடப்பது கனவா? நிஜமா? சுத்தமாக நம்பமுடியவில்லை. இடத்தை உறுதி செய்யாமல் திரும்பிய மாணவர்களை நினைத்தால் வருத்தமாக இருந்தாலும், நானும் அவ்வாறு செய்திருந்தால் என்னவாயிருக்கும் என்பதை நினைக்கவே முடியவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆலோசனையை என் தலைமை ஆசிரியர் எனக்கு வழங்கினார். கல்லூரி தொடங்குவது 2021 பிப்ரவரி. டாக்டர் படிப்பை வெற்றிகரமாக முடித்து என் சமூகத்து மக்களுக்கான முன்மாதிரியாக வெளியில் வருவேன் எனப் புன்னகையோடு விடைபெற்றார்.லம்பாடி சமூகத்தில் இருந்து ஒரு பெண் மருத்துவராக வருவது இமாலய சாதனை என, செளமியா படித்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சதாசிவம் பேசத் தொடங்கினார். எங்கள் பள்ளி அதிகமாக பெண்கள் படிக்கும் பள்ளி. 865 மாணவர்களில் 411 பேர் பெண்கள். அதிலும் அதிகமாக லம்பாடி சமூகத்து குழந்தைகள்தான் இங்கே படிக்கிறார்கள். தண்டா என தங்கள் குடியிருப்பு பகுதிக்கு பெயரிட்டு அழைப்பார்கள். எங்கள் பள்ளியை தாண்டி காடுகள் நிறைந்திருக்கும். காடுகளை ஒட்டித்தான் இவர்கள் குடியிருப்புகளை அமைத்துக் கொள்வார்கள்.செளமியாவின் கண்களில் எப்போதும் ஒரு ஃபயர் இருக்கும். எப்போதும் அவர் தைரியமாகவும் துடுக்காகவும் இருப்பார். பள்ளியில் அவர்தான் ஸ்கூல் பியூப்பிள் லீடர். செளமியாவின் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பும் தெளிவாக இருக்கும். லம்பாடி சமூகத்துக் குழந்தைகளுக்கு அறிவுத் திறன் அதிகமாகவே இருக்கும். வாய்ப்புகள் இவர்களுக்கு சரியாக அமைந்தால் வெளிச்சத்திற்கு வருவார்கள் என விடைகொடுத்தார்.என் பொண்ணுக்கு மருத்துவக் கல்லூரி சீட் கிடைக்கும்னு நினைக்கவே இல்லை எனக் கண்கள் கலங்கி பேசத் தொடங்கினர் செளமியாவின் அப்பா மண்ணு மற்றும் அவர் தாய் ராதா இருவரும். எங்கள் மகள் ரொம்பவே துணிச்சலான பொண்ணு. அவள் எட்டாவது படிக்கும்போதே நாங்கள் இருவரும் வருமானம் தேடி அவளையும் எனது இரண்டு மகன்களையும் திருவண்ணாமலையில் விட்டுவிட்டு கேரளாவுக்கு கூலி வேலைக்கு வந்துவிட்டோம். அப்போதே குடும்பப் பொறுப்பைத் தோளில் சுமக்கத் தொடங்கி விட்டாள். தினமும் காலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடித்து, தன் தம்பிகள் இருவருக்கும் சமையல் செய்து வைத்துவிட்டு, அவர்களின் தேவைகளையும் கவனித்த பிறகே பள்ளிக்கு கிளம்புவாள். அத்தோடு சின்ன வயதிலிருந்தே நன்றாகப் படிக்கவும் செய்தாள். அடிக்கடி என்னிடத்தில் ‘டாக்டருக்கு படிக்கிறேன்பா’ என்று சொல்லுவாள். ‘அவ்வளவு செலவு பண்ணி படிக்க வைக்க அப்பாவாள் முடியாதும்மா நர்ஸ் படி’ன்னு சொல்லி அதில் சேர்த்துவிட்டேன். ஆனால் ஒரு நாள் முழுதும் அழுது, நீட் எழுத மறுபடியும் வாய்ப்பு கொடுங்கப்பா முயற்சிக்கிறேன்னு அழுத்தமாக அவள் நின்னபோது, சரிம்மா நல்லா படின்னு, ஒன்றரை லட்சம் கடன் வாங்கித்தான் நீட் பயிற்சியில் கோவையில் சேர்த்தேன். இன்று தமிழக அரசு அறிவிப்பால் என் மகளுக்கு மெடிக்கல் சீட் கிடைத்ததோடு, படிப்புச் செலவையும் தமிழக அரசே ஏற்பதை நினைத்தால் கட்டுப்படுத்த முடியாமல் எனக்கு அழுகையா வருது. அந்த சந்தோஷத்தை சொல்லத் தெரியலை. எல்லோருக்கும் நன்றி என்று தழுதழுத்தார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் கல்விக் கட்டணம் முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் போன்ற அறிவிப்புகளால் செளமியாவின் கனவு மட்டுமல்ல ஒரு தலைமுறையின் வாழ்க்கையே மாறப்போகிறது.ஹேமமாலினி, மானுடவியலாளர்‘லம்பாடி மாதிரி ஏன் சண்டை போடுற’ என ஒரு சொல்லாடல் உண்டு. வாய் மூடாமல் தொடர்ந்து பேசுவதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம். இவர்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வந்தவர்கள். பஞ்சாபியும் குஜராத்தியும் சேர்ந்த கிளை மொழி இவர்களுடையது. இவர்கள் அலைகுடிகள் ஆவர். அதாவது இடம் பெயர்ந்து செல்லும் நாடோடிகள். மொகலாயர்கள் காலத்தில் தெற்கில் போர்படையில் போர் ஆயுதங்கள், உணவு தானியம் போன்றவற்றை காட்டெருமை மீது ஏற்றி ஓட்டிச் சென்றுள்ளார்கள். அதில் சிலர் இங்கேயே தங்கியுள்ளனர். வாலி, சுக்ரீவன் வழித்தோன்றல் என தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள்.போக்குவரத்து வந்த பிறகு இவர்களின் தேவை குறையவே வருமானத்திற்காக குற்றத் தொழில்களில் ஈடுபடத் தொடங்கினர். சிலர் நாகரிகம் அடைந்து விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். லம்பாடிகளில் ஆண்களை விட பெண்கள் மிக அழகு. லம்பாடிப் பெண்கள் உடை உடுத்தும் அழகு பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். இரு கரங்களிலும் வளையல்களை முட்டி கை வரை சரமாக அடுக்கி இருப்பார்கள். கழுத்து மற்றும் காதுகளில் பெரிய பெரிய ஆபரணங்கள் இருக்கும். தங்கம் தவிர பிற உலோகங்களையே விரும்பி அணிவார்கள். தாங்கள் உடுத்தும் உடைகளில் இருக்கும் பூ வேலைப்பாடுகளை அவர்களே செய்துகொள்வார்கள். கால் விரல் நுணிவரை நீள பாவாடையும், மேலே ரவிக்கையும் அணிவதோடு, குஜராத்திகள் போல் தலையில் முக்காடிட்டுக் கொள்வார்கள். ஒருசில வயதான பெண்களே தங்கள் பாரம்பரியத்தை கடைபிடிக்கிறார்கள். மற்றபடி இப்போதைய தலைமுறை நவநாகரீக உடைகளை உடுக்கத் தொடங்கியுள்ளனர். ஊருக்கு ஒதுக்குபுறமாக குடியிருப்புகளை அமைத்து, தங்கள் குடியிருப்பை தண்டா என பெயர் வைத்து அழைப்பார்கள். இவர்கள் வீடுகளுக்கு ஜன்னல்கள் இருக்காது. அன்றைய தேவையை மட்டுமே பார்ப்பார்கள். பொருள் சேர்க்கும் பழக்கம் இல்லை. நாடோடி சமூகம் என்பதால் படிப்பு சதவிகிதம் மிகமிகக் குறைவு. கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இவர்கள் எஸ்.டி. பிரிவினராகவும், தமிழகத்தில் பி.சி. பிரிவிலும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.செய்தி: மகேஸ்வரி நாகராஜன்படங்கள்: எம்.பாபு

You may also like

Leave a Comment

4 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi