Wednesday, May 15, 2024
Home » சீரான குடிநீர் விநியோகம் செய்ய பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

சீரான குடிநீர் விநியோகம் செய்ய பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

by MuthuKumar

சேலம், மார்ச் 6: சேலம் மாவட்டத்தில் கோடைகாலத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஏதுவாக, 8 வட்டாரங்களுக்கு மண்டல அளவிலான பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடப்பாண்டு கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ெபாதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றன. அதேசமயம், பல்வேறு நீர்நிலைகள் வற்ற தொடங்கியுள்ளன. இதனையடுத்து கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 10 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள் மற்றும் 4,475 ஊரக குடியிருப்புகளுக்கு நாள்தோறும் சராசரியாக 177 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 29.21 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு வழங்கப்படும் குடிநீர் அளவினை 40 லிட்டரில் இருந்து 55 லிட்டர் ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குடிநீர் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகளை முடித்து, கோடை காலத்திற்கு முன்னதாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் உரிய அளவு சீரான குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் எந்தவித தடையுமின்றி குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் குடிநீர் விநியோகம் தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து வரும் கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை 1077 மற்றும் 0427-2450498 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

அத்துடன், கோடைக்காலத்தில் குடிநீர் தேவைகள் அதிகம் உள்ளதாகக் கருதப்படும் 8 வட்டாரங்களுக்கு, மண்டல அளவிலான பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில், கொளத்தூர் வட்டாரத்திற்குட்பட்டவர்கள் சேலம் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளரை 73737 04567 என்ற எண்ணிலும், காடையாம்பட்டி வட்டாரத்திற்குட்பட்டவர்கள், சேலம் உதவி இயக்குநரை (தணிக்கை) 74026 06747 என்ற எண்ணிலும், ஓமலூர் வட்டாரத்திற்குட்பட்டவர்கள் சேலம் உதவி இயக்குநரை (ஊராட்சிகள்) 74026 06746 என்ற எண்ணிலும், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்திற்குட்பட்டவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலரை (ஊதியம் மற்றும் வேலை வாய்ப்பு) 74026 06751 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல், தாரமங்கலம் வட்டாரத்திற்குட்பட்டவர்கள் ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலரை (உட்கட்டமைப்பு 2) 74026 06753 என்ற எண்ணிலும், பனமரத்துப்பட்டி வட்டாரத்திற்குட்பட்டவர்கள் சேலம் ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளரை 74026 06740 என்ற எண்ணிலும், கெங்கவல்லி வட்டாரத்திற்குட்பட்டவர்கள் ஆத்தூர் ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளரை 74026 06742 என்ற எண்ணிலும், மேச்சேரி வட்டாரத்திற்குட்பட்டவர்கள் ஓமலூர் உதவி செயற்பொறியாளரை (சாலைகள் மற்றும் பாலங்கள்) 74026 06739 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

two × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi