Friday, May 10, 2024
Home » கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா வார்டில் கவச உடையணிந்து மு.க.ஸ்டாலின் ஆய்வு: நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா வார்டில் கவச உடையணிந்து மு.க.ஸ்டாலின் ஆய்வு: நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்

by kannappan

கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொரோனா வார்டில், கவச உடையணிந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அங்கிருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். தமிழகத்தில்  ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி  உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து  வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு போர்க்கால  அடிப்படையில் நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது.கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை  துரிதப்படுத்தவும்,  ஒருங்கிணைந்து செயல்படவும் சிறப்பு அதிகாரிகளை நியமனம்  செய்து தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகளை ஆராயவும், பணிகளை துரிதப்படுத்தவும் அமைச்சர்களை நியமித்துள்ளார். மேலும் அவர் கொரோனா தடுப்பு  பணிகளை மாவட்டம்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்தும் வருகிறார். ஏற்கனவே கடந்த 20ம் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் 2-வது முறையாக நேற்று கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு வந்து ஆய்வு செய்தார்.  நேற்று மதியம் திருப்பூரில் இருந்து கோவைக்கு வந்த அவர் சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்றார். அவரை அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் வரவேற்றனர். பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில்,  கோவை மாநகராட்சி சார்பில் 5  மண்டலங்களுக்கு தலா 10 கார் ஆம்புலன்ஸ் வீதம்  தயார் செய்யப்பட்டிருந்த 50 கார்  ஆம்புலன்ஸ்களை முதல்வர்  மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கார்களை திறந்து பார்த்து அதில் இடம் பெற்றுள்ள வசதிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.பின்னர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுக்கு சென்றார். அவர் வார்டுக்குள் சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்து நலம் விசாரிக்க விருப்பம் தெரிவித்தார். மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் தயங்கினர். ஆனாலும் எந்தவித பயமும், தயக்கமும் இன்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா வார்டுக்குள் செல்ல தயாரானார். இதையடுத்து அவருக்கு அணிவிக்க கவச உடை (பி.பி.இ. கிட்) கொண்டு வரப்பட்டது. மருத்துவமனை ஊழியர் ஒருவர் உதவியுடன் அந்த கவச உடையை முதல்வர் மு.க. ஸ்டாலின் அணிந்து கொண்டார்.அதேபோல மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கவச உடை அணிந்தார். பின்னர் அமைச்சர் மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகளுடன் முதலில் கொரோனா ஐ.சி.யூ. வார்டுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றார். அங்கிருந்த நோயாளிகள் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், கொரோனா சாதாரண சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு  நோயாளிகள் தங்கள் படுக்கையில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் முதல்வர் நலம் விசாரித்தார். அப்போது, கொரோனா நோயாளிகளிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், ‘‘தைரியமாக இருங்கள். உங்களுக்கு அரசு  துணை நிற்கும். கொரோனாவை வெல்வோம். தமிழகத்தை விட்டு விரட்டியடிப்போம்’’ என்றுநம்பிக்கையூட்டினார். இது நோயாளிகளுக்கு ஆறுதலாகவும், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்தது. பின்னர், அங்கிருந்த மருத்துவர்களுடன் சுமார் அரை மணி நேரம்  முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஈரோடு மாவட்டம்: முன்னதாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் ₹3.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 300 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு பிரிவை  பார்வையிட்டு மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சிகிச்சைப்பிரிவின்  செயல்பாடுகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் விளக்கி கூறினர். கூடுதலாக இந்த மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து முதல்வர்  ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் கொரோனா சிகிச்சை பிரிவில்  பணியாற்ற உள்ள தற்காலிக டாக்டர்கள் 5 பேர், தற்காலிக நர்ஸ்கள் 5 பேர் என  மொத்தம் 10 பேருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை  வழங்கினார். தொடர்ந்து அதே வளாகத்தில் ரோட்டரி சங்கங்கள் சார்பில்  ₹14 கோடி செலவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 401 படுக்கைகளுடன் கட்டப்பட  உள்ள புதிய கட்டிடத்தின் வரைபடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின்  பார்வையிட்டார். பணிகளை விரைவாக முடித்து கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு  வரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்துக்கு  புறப்பட்டார். திருப்பூர் மாவட்டம்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தன்னார்வலர்கள் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100 ஆக்சிஜன் படுக்கைகள்  கொண்ட அரங்கையும், நோயாளிகள் தாமதமின்றி சிகிச்சைகளை மேற்கொள்ள 20 கார்  ஆம்புலன்ஸ்களையும் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். தொகுப்பூதிய  அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிய 30 மருத்துவர்கள் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 6 பேருக்கு பணி ஆணையை முதல்வர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  இந்த நிகழ்வுகளின்போது சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தி  மக்கள்  தொடர்பு துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவுத்துறை  அமைச்சர் ஆர்.சக்கரபாணி, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்  கயல்விழி செல்வராஜ், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கலெக்டர்கள் நாகராஜன்(கோவை), கதிரவன் (ஈரோடு), விஜயகார்த்திகேயன் (திருப்பூர்), எம்.பி.க்கள் கணேசமூர்த்தி,  சுப்பராயன்,  அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள்  திருப்பூர் தெற்கு செல்வராஜ், வெங்கடாசலம், திமுக  துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கோவை மாநகர் கிழக்கு  மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் உள்பட பலர்  உடனிருந்தனர்.இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன ‘வி ஸ்டான்ட் வித் ஸ்டாலின்’கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், கவச உடையணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும், கோவையை புறக்கணிக்கவில்லை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கூறினார். இதையடுத்து, நேற்று மாலை ‘‘வி ஸ்டான்ட் வித் ஸ்டாலின்’’ (we stand with Stalin) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி முதலிடம் பிடித்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொழில்துறையினர் ஒத்துழைப்பு அவசியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுபெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி   மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர்   மு.க.ஸ்டாலின்  ‘ஒளிரும் ஈரோடு’ உள்ளிட்ட அமைப்பு சார்பில் ₹2 கோடி   செலவில் 200 ஆக்சிஜன்  படுக்கைகளுடன் கட்டப்படும் கட்டிடத்தை   பார்வையிட்டார். ஒளிரும் ஈரோடு  நிர்வாகிகள் டாக்டர் அபுல்ஹாசன்,   தொழிலதிபர்கள் கணேசன், எம்.சி.ஆர். ராபின்  உட்பட பல்வேறு அமைப்பினரிடம் பேசினார். பின்னர் தொழில்துறையினரிடம்  முதல்வர் மு.க.ஸ்டாலின்   பேசுகையில், ‘‘கொரோனா தொற்று பரவல் உள்ள நிலையில்,  தமிழக அரசு பல்வேறு தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டு தொற்று பரவலை குறைத்து  வருகிறது. ஒரு புறம் சிகிச்சை வழங்குவதை அதிகரிப்பதுடன், மக்களின்  ஒத்துழைப்புடன் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. உங்களை போன்ற பொதுநல அமைப்புகள், தொழில்துறையினர்  அரசுக்கு மிகப்பெரிய உதவியாக  இருந்து  வருகிறீர்கள். இதன் மூலம் கொரோனா  பரவலை குறைக்கவும், நோயாளிகள்  விரைவாக  குணமடையும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.  அரசின் செயல்பாடுகளுக்கும்,  கொரோனா  தடுப்பு பணிகளிலும் அனைத்து தரப்பினரும்  முழு ஒத்துழைப்பு வழங்க  வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.* தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகளில் திமுக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.*  மாவட்டம்தோறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.* கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொரோனா வார்டுக்குள் கவச உடை அணிந்து சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்….

You may also like

Leave a Comment

fourteen + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi