Monday, June 17, 2024
Home » கொரோனாவின் மூன்றாவது அலை அச்சத்துக்கு மத்தியில் குழந்தைகளுக்கான ‘கேம் சேஞ்சர்’ஆக வருகிறது ‘நாசி’தடுப்பு மருந்து: டெல்லி, பாட்னா, நாக்பூரில் பரிசோதனைகள் தீவிரம்

கொரோனாவின் மூன்றாவது அலை அச்சத்துக்கு மத்தியில் குழந்தைகளுக்கான ‘கேம் சேஞ்சர்’ஆக வருகிறது ‘நாசி’தடுப்பு மருந்து: டெல்லி, பாட்னா, நாக்பூரில் பரிசோதனைகள் தீவிரம்

by kannappan

புதுடெல்லி: கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சத்துக்கு மத்தியில், குழந்தைகளுக்கான ‘கேம் சேஞ்சர்’தடுப்பூசியாக ‘நாசி’தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. அதற்காக டெல்லி, பாட்னா, நாக்பூரில் பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை இன்னும் சில பகுதிகளில் மோசமாக பரவிவரும் நிலையில், மூன்றாவது அலை இன்னும் மோசமாக இருக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன. இந்த மூன்றாவது அலையில் பரவும் கொரோனாவானது, குழந்தைகளை பிரதானமாக பாதிக்கும் என்று கூறுகின்றனர். இந்திய மக்கள் தொகை 130 கோடிக்கும் மேலாக இருக்கும் நிலையில், அதில்  கிட்டதிட்ட 35.29 சதவீதம் பேர் 20 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட எந்த நாடாக இருந்தாலும், அந்நாட்டில் அனைருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடுவது என்பது சவாலான காரியம் என்கின்றனர். இருந்தாலும், இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஐஏபி) மாற்று கருத்தை கூறுகிறது. அதாவது, ‘வயதானவர்களை போன்றே, குழந்தைகளும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிட வாய்ப்புள்ளதால், மூன்றாவது அலையில் கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இரண்டாவது அலை முடிந்தபின்னர், நாம் தொடர்ந்து கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்றால், மூன்றாவது அலையானது குழந்தைகள் மற்றுமின்றி நோயெதிர்ப்பு குறைவாக உள்ள மீதமுள்ள நபர்களையும் தாக்கும்’என்று கூறுகிறது. கடந்த ஜனவரி 2020 முதல் மார்ச் 2021 வரை 100 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளை யுனிசெஃப் தொகுத்து வெளியிட்டதில், தொற்றால் பாதிக்கப்பட்ட 8 கோடி பேரில் 1.1 கோடி பேர் (13 சதவீதம்) குழந்தைகளாக இருந்தனர். மேலும், 78 நாடுகளில் தொற்று பாதித்து இறந்தவர்களை கணக்கிட்டால், 23 லட்சம் பேரின் இறப்பு சதவீதம் 0.3 ஆக உள்ளது. இவர்களில் தொற்று காரணமாக 6,800க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் இறந்துள்ளனர். ஜனவரி 1 முதல் ஏப்ரல் 21 வரை இந்தியாவில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, மொத்த 56 லட்சம் பாதிப்புகளில் சுமார் 12 சதவீதம் பேர் 20 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். பெரியவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை போன்று அல்லாமல் குழந்தைகளுக்கு நோய்த்தொற்றின் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. குழந்தைகளை வெளியேவிட்டால், அவர்கள் கொரோனா வைரஸ் பரவலின் ‘சூப்பர் ஸ்ப்ரெடர்’களாக மாறிவிடுவார்கள் என்ற அச்சத்தால், அவர்களுக்கும் தடுப்பூசி போடுவது அவசியம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக, அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (சிடிசி) கூறுவது என்னவென்றால், ‘தடுப்பூசியை பரவலாக போட்டால் மட்டுமே தொற்றுநோய் பரவலைத் தடுக்க முடியும். குறிப்பாக 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்’ என்று கூறுகிறது. கொரோனா பரவல் 2019 கடைசியில் வந்தாலும் கூட, முதன்முதலாக உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக வெளிவந்தது, ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிதான். இந்த தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கும் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பெரியவர்களுக்கு போடும் அதே அளவில் தடுப்பூசியை போடலாம். இரண்டு டோஸ்களையும் மூன்று வாரங்கள் (21 நாட்கள்) இடைவெளியில் போட வேண்டும். கடந்த மார்ச் 31 அன்று ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘2,260 குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட 3ம்கட்ட பரிசோதனை முடிவில் எங்கள் தடுப்பூசி 100 சதவீதம் பயனுள்ளதாக உள்ளது. தற்போது, 6 மாதங்கள் முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனைகளை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த வயதினருக்கான தடுப்பூசி போட முடியும். அதற்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது. ஃபைசர் தடுப்பூசியை 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போடலாம் என்று கடந்த மே 5ம் தேதி கனடா முதன்முதலாக ஒப்புதல் அளித்தது. மே 12 அன்று, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பானது, 12 முதல் 15 வயதுடைய இளம் பருவத்தினருக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த இடைக்கால பரிந்துரையை அளித்தது. மே 28 அன்று, ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம், 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்காக ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்று நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு ‘மயோர்கார்டிடிஸ்’ (இதய தசையில் வீக்கம்) மற்றும் ‘பெரிகார்டிடிஸ்’ (பெரிகார்டியத்தின் அழற்சி) குறித்த பாதிப்புகள் குறித்து சிடிசி கண்காணித்து வருகிறது. ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி குறித்து சிடிசி அளித்த பரிந்துரையில், ‘கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பிற தடுப்பூசிகளை ஒரே காலகட்டத்தில் பயன்படுத்தலாம். இவ்வாறாக ஒரே நேரத்தில் பல தடுப்பூசிகள் போடும்பட்சத்தில், ஒவ்வொரு ஊசியையும், வெவ்வேறு ஊசியின் மூலம் போட வேண்டும். கடந்த மே 25ம் தேதி, அமெரிக்காவின் மற்றொரு தடுப்பூசி உற்பத்தியாளரான மாடர்னா, 3,732 குழந்தைகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை முடித்துள்ளது. அவர்களின் அறிக்கையின்படி, மாடர்னா தடுப்பூசியானது 12 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினருக்கு 100 சதவீதம் பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளதாக கூறுகிறது. இந்நிறுவனம் வரும் ஜூன் மாதத்தில், அமெரிக்க எஃப்.டி.ஏ மற்றும் மற்ற நாடுகளில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை அமைப்புகளிடம் ஒப்புதலை பெற விண்ணப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எல்லாம் சரியாக நடந்து ஒப்புதல் கிடைத்துவிட்டால், அமெரிக்காவில் உள்ள இளம்பருவத்தினருக்கு அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசியாக மாடர்னா இருக்கும். இந்நிறுவனம், தற்போது குழந்தைகளுக்கான ‘கிட்கோவ்’ தடுப்பூசி ஆய்வையும் நடத்தி வருகிறது. அதை, 6 மாதங்கள் முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு போடமுடியும். முதற் மற்றும் இரண்டாம்கட்ட பரிசோதனையில் உள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியானது, 12 முதல் 17 வயதுடையோருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் பரிசோதனையை முடித்தது. ஆனால், முடிவுகளுக்காக காத்திருக்கிறது. அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், 6 முதல் 17 வயதுடையோருக்கு நடைமுறைப்படுத்தியது.ஆனால், இங்கிலாந்தில் ஏப்ரல் 7ம் தேதி தடுப்பூசி போட்ட சிலருக்கு ரத்த உறைதல் ஏற்பட்டதால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகின் நிலவரம் இவ்வாறு இருக்க, தற்போது, இந்தியாவில் ஐதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக்கின் கோவாக்சின், புனேவை தளமாக கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் – 5 ஆகிய தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு எந்த தடுப்பூசியும் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஃபைசர் நிறுவன தடுப்பூசியானது, இந்திய ஒழுங்குமுறை அமைப்பின் ஒப்புதலை பெற காத்திருக்கிறது. இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில், 4வது தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசி இருக்கும். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் (டிஜிசிஐ), பாரத் பயோடெக்கின் குழந்தைகளுக்கான கோவாக்சின் மருத்தை, 2 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு 2 மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி அளித்தது. தற்போது, டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், நாக்பூர் மெடிட்ரினா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் உள்ளிட்ட இடங்களில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய மருத்துவ சோதனை பதிவேட்டின் (சி.டி.ஆர்.ஐ) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைத்த தகவல்களின்படி, குழந்தைகளுக்கான கோவாக்சின் பரிசோதனையானது, வயது வந்தோருக்கான முறையில் பரிசோதிக்கப்பட்டது போன்று இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட ஜைடஸ் காடிலா நிறுவனம், 5 முதல் 12 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி (ZyCoV-D) பரிசோதனைக்கு தயாராக உள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் என்பது உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வராது என்பதால், கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து தப்பிக்க கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதுதான் சரியாக இருக்கும் என்கின்றனர். இருந்தாலும், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்தை தடுப்பூசியாக அல்லாமல் வாய்வழி மாத்திரைகள், சொட்டு மருந்து அல்லது மூக்கின் வழியாக ஸ்பிரே செய்தல் போன்ற நடைமுறைகளை பின்பற்றுவதற்கான ஆய்வுகளும் நடக்கின்றன. இவ்வாறு செய்வதால், கொரோனா அபாயத்தில் இருந்து தப்பித்தல் மட்டுமின்றி, தடுப்பூசிகளை பாதுகாத்தல், சேமித்தல், தடுப்பூசிகளை கொண்டு சேர்தல் போன்ற சிரமங்கள் இருக்காது.‘மியூகோசல்’ முறையிலான குழந்தைகளுக்கான இந்த தடுப்பு மருந்து வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும். நாசி மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி, நுரையீரலுக்குள் அது பரவுவதைகட்டுப்படுத்தும். மூக்கின் மூலம் செலுத்தப்படும் மருந்தானது, வைரஸ் பரவலைக் குறைக்க முடியும் என்கின்றனர். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிக்கு மாற்றாக, மேற்கண்ட முறையானது ஆரம்பகட்ட ஆராய்ச்சியில் உள்ளது. கடந்த மே 5ம் தேதி உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா, ஈரான், கியூபா ஆகிய 6 நாடுகள் ‘நாசி’ மூலம் செலுத்தப்படும் தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனையை நடத்தி வருகின்றன’ என்று தெரிவித்தது. மேலும், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான ‘நாசி’தடுப்பூசி மருந்து இந்தாண்டு கிடைக்கவில்லை என்றாலும் கூட, சுவாசக் குழாயில் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். கொரோனாவின் மூன்றாவது அலை குறித்த அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நாசி மூலம் வழங்கப்படும் இம்மருந்து, இந்தியாவின் முக்கிய ‘கேம் சேஞ்சர்’ (விளையாட்டில் ஆட்டத்தை மாற்றியமைக்கும் யுக்தியை போன்று தடுப்பூசி தயாரிப்பில்) ஆக இருக்கும். பல நாடுகளில் குழந்தைகளுக்காக தடுப்பூசி உருவாக்கப்பட்டு வரும் நிலையில், ஃபைசர் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது’என்றார். ‘மியூகோசல்’ முறையில் குழந்தைகளுக்கான இந்த தடுப்பு மருந்து வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும். நாசி மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி, நுரையீரலுக்குள் தொற்று பரவுவதை தடுக்கும்.கொஞ்சம் பொதுநலனை பாருங்கப்பா…!கடந்த  மே மாதம், ஜெனீவாவில் நடந்த காணொலி மாநாட்டில் பேசிய உலக சுகாதார  அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ‘சில நாடுகள் தங்கள்  குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போட ஆர்வம்  காட்டுகின்றன. இதனை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக வளர்ந்த  மற்றும் வளர்ந்து வரும் நாடுகள், தங்களின் குழந்தைகள் மற்றும்  இளைஞர்களுக்கு தடுப்பூசிகளை போடுவதற்கான திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும்.  மாறாக ஏழை நாடுகளுக்கு தடுப்பூசியை நன்கொடையாக வழங்க வேண்டும். அப்போதுதான்  உலகளாவிய தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்’என்றார்….

You may also like

Leave a Comment

three × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi