Monday, June 17, 2024
Home » குழந்தை வரம் தந்தருளும் காத்தாயி

குழந்தை வரம் தந்தருளும் காத்தாயி

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் தாய் சேயிடம் கொள்ளும் அன்பு, உலகிலேயே உயர்ந்த அன்பாகும். தன்னிடமிருந்து தன்போல் உருவான குழந்தையைக் கண்டு, தாம் பெருமிதம் கொள்கிறாள். பாலூட்டிச் சீராட்டி மகிழ்கிறாள். கணம்தோறும் அதன் வளர்ச்சியைக் கண்டு ஆனந்தமடைகிறாள். கண்ணின் இமை போல காக்கிறாள். தாயையும், குழந்தையையும் காண்பது சுப சகுனமென்பர். நமது தெய்வங்களைத் தாயும்சேயுமாக வைத்து வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. பார்வதியை முருகனுடன் சேர்த்து வழிபடுகிறோம். அப்போது அவள், குககௌரி என்று அழைக்கப்படுகிறாள்.திருப்புறம்பியம் என்னும் தலத்தில் ஆறுமுகனை இடுப்பில் வைத்துக் கொண்டு அருள்புரியும் அம்பிகையைக் காண்கிறோம். பல்லவர்கள் குகாம்பிகை எனும் பெயரில் முருகனுடன் பார்வதியை அமைத்து மகிழ்ந்துள்ளனர். வைணவர்கள் காமன், சாமன் என்னும் இரண்டு குழந்தைகளை உடைய லட்சுமிதேவியை சந்தான லட்சுமி என்று கொண்டாடுகின்றனர். கிராமிய தெய்வங்களில் காத்தாயி என்ற தெய்வத்தைக் காண்கிறோம். சில வட்டாரங்களில் அவளைக் கந்தனைப் பெற்றெடுத்த காத்தாயி என்பர். வேறு சில இடங்களில் காத்தவராயனைப் பெற்றெடுத்துப் பேணிக் காக்கும் பார்வதி என்றும் கூறுகின்றனர். காத்தானின் ஆயி (காத்தான் – காத்தவராயன்) என்பதால் காத்தாயி என்பர்.ஒரு சமயம் சிவபெருமான், பார்வதி தேவியைப் பூவுலகில் பிறக்குமாறு சபித்தார். அப்போது அவரைத் தடுத்து யுத்தம் புரிய வந்த வீரபாகுவை அவளுக்கு மகனாகுமாறு சபித்தார் என்று நாட்டுப் புறப்பாடல்கள் கூறுகின்றன. அவர்களே காத்தாயி – காத்தவராயனாக மண்மேல் வந்தனர் என்பர்.மாரியம்மன் கோயில்களில் காத்தாயியை துணைத் தெய்வமாகக் காண்கிறோம். பச்சையம்மன் கோயில்களில் மூலஸ்தானத்தில் பச்சையம்மனுக்கு இணையாக அருகில் துணைத் தெய்வமாகக் காத்தாயியும் வீற்றிருக்கிறாள். காத்தாயி இரண்டு காலையும் மடித்து சம்மணமாக அல்லது ஒரு காலை மடித்து ஒரு காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளாள். அவள் மடியில் கந்தன் குழந்தையாகப் படுத்த வாறோ அமர்ந்தவாறோ காட்சியளிக்கின்றான். இவள் தலையில் கொண்டையிட்டுள்ளாள்.பரமசிவனுடைய ஆணையால் பூமிக்கு வந்த பார்வதிதேவி, பச்சை நாயகி என்ற பெயர் தாங்கி யோகம் செய்தாள். அவளுடன் மகாலட்சுமி வேங்க(ட)மலை நாச்சியாராகவும், இந்திராணி முடியால் அழகியாகவும், சரஸ்வதி பூங்குறத்தியாகவும், வள்ளி வனக்குறத்தியாகவும், தெய்வானை ஆனைமேல் குறத்தியாகவும் வடிவம் தாங்கி வந்தனர்.ஒரு சமயம் தேவ மாதர்கள் அவளிடம், “அம்மையே நீங்கள் தவம் செய்ய வந்து விட்டதால் உலகில் உற்பத்தி பெருகவில்லை. நீங்கள் சேயான கந்தனுடன் இருந்தால்தான் உலகம் தழைக்குமென்றனர். அவள் நாம் இப்போது தவக் கோலத்தில் இருப்பதால் அப்படி கந்தனுடன் கொஞ்சி மகிழ்ந்து இருக்க முடியாது என்று கூறினாள். சிறிது நேரம் கழித்து தன் நிழலிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கினாள். அவளிடம் கந்தனை ஏந்திக் காட்சி தந்து உலகம் தழைக்க அருளுமாறு கூறினாள். அதன்படியே அப்பெண் முருகனை மடியேந்தி எல்லோருக்கும் அருள்புரிந்தாள். அவளைக் “காத்தருளும் காத்தாயி’’ என அழைத்துக் கொண்டாடினர். அவள் எப்போதும் பச்சையம்மன் அருகில் வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.நெடுநாட்கள் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இவளுடைய சந்நதியில் தொட்டில் கட்டிப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினால் நல்ல குழந்தைகள் பிறப்பார்கள் வம்சம் விருத்தியாகும் என்று நம்புகின்றனர்.இவளைப் போற்றும் மந்திரம், கவசம், வழிபாடுகள் சிறப்பாக உள்ளன. ஆதியில் பச்சையம்மனுக்குத் துணை தெய்வமாக இருந்த இவள், காலப்போக்கில் தனித் தெய்வமாகி விட்டாள். இவளுக்கென தனிக்கோயில்களும் உள்ளன. கும்பகோணத்தில் மன்னார்சாமி பச்சையம்மன் கோயில் இப்போது இவள் பெயரால் காத்தாயி கோயில் என்றே அழைக்கப்படுகிறது.சென்னை – திருமுல்லைவாயில் பச்சையம்மன் ஆலயத்தில் பெரிய சுதைச் சிற்பமாகக் காத்தாயி அம்மனின் சுதைச்சிற்பம், வடக்கு நோக்கி நிலைப்படுத்தி வணங்கப்படுகிறது. கையில் முருகனுடன் விளங்கும் காத்தாயியைப் போல, பல தெய்வங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கிருஷ்ணனை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கும் யசோதை குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் இசக்கியம்மன் ஆகியவற்றைக் கூறலாம்.தொகுப்பு: பூசை. ச. அருணவசந்தன்

You may also like

Leave a Comment

17 − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi