Monday, July 22, 2024
Home » ஏற்றமிகு வாழ்வருளும் ஏகௌரி அம்மன்

ஏற்றமிகு வாழ்வருளும் ஏகௌரி அம்மன்

by Lavanya

காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை

தஞ்சாவூர் நகரம் தோன்றுவதற்கு முன்பு, வல்லம் சோழர்களின் தலைநகராக இருந்தது. அப்போது, முற்காலச் சோழர்களால் அமைக்கப்பட்ட கோயில்தான் வல்லம் ஏகௌரியம்மன் கோயில். சோழர்களின் வழிபடு தெய்வமாகவும், குலதெய்வமாகவும் அவர்களுக்கு வெற்றிகளை வாரிவழங்கிய வல்லத்துக் காளியாகவும் விளங்கியவள்தான் இந்த ஏகௌரியம்மன். கோயிலின் நுழை
வாயில் முதல் பெரிய சுற்றுப்பாதை ஒரு கோட்டையைப் போல பாதுகாப்பாக உள்ளது. வல்லப சோழன் காலத்தில் வழிபடப்பட்டு, கரிகாலசோழ மன்னனால் “கரிகாற் சோழ மாகாளி’’ என்றும், பராந்தக சோழனால் வல்லத்துப் பட்டாரகி என்றும், ராஜராஜ சோழனால் காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை என்றும் அழைக்கப்பட்டு வந்தவள்.  கோயில் அமைப்பு, தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் கட்டுவதற்கு முன்பாகவே கட்டிய கோயிலாக இக்கோயில் இருந்துள்ளது. சோழ மன்னர்கள், அரசு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும், வெற்றி வாகை சூடப் போர்க்களம் செல்லும்போதும், இந்தத் தேவியிடம் அருள்வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துவது வழக்கம் என குறிக்கப்பட்டுள்ளது.

ரம் கேட்ட தஞ்சாசுரன்

தஞ்சாசுரன் என்னும் அசுரன், தஞ்சையில் வாழ்ந்தான். சிறந்த சிவபக்தனான அவன், சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்தான். தவத்துக்கு மகிழ்ந்த இறைவன், அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும் கேள்’’ எனக் கேட்டார். பெண்களைத் தவிர வேறு எவரும் என்னை வெல்ல முடியாத வரம் வேண்டும் என்றார் தஞ்சாசுரன். அதைக் கேட்ட சிவனார் சிரித்தார். “அப்படியானால் உன்னை பெண் ஒருத்தி வென்றால் பரவாயில்லையா?’’ எனக் கேட்டார். அதற்குத் தஞ்சாசுரன்; “ஆண்களை வெல்ல பெண்களால் முடியாது. அதனால்தான் அப்படியொரு வரம் கேட்டேன்’’ என்றான். பெண்மையைக் கேவலமாக நினைத்த தஞ்சாசுரனுக்குத் தன்னுள் பாதியாக இருந்த பார்வதிதேவி மூலம் பாடம் புகட்ட எண்ணினார் இறைவன். அப்படியே ஆகட்டும், உன்னை ஒரு பெண்ணைத் தவிர யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை வழங்கினார். அந்த வரமே சாபமாகப்போவது அப்போது அசுரனுக்குத் தெரியாது.

வதம் செய்த தேவி

வரம்பெற்ற ஆணவத்தில், மனிதர்களையும், தேவர்களையும் இம்சிக்கத் தொடங்கினான். தேவர்கள் அழுதபடி சிவனைச் சரண் அடைந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய சிவன், பெண்மையே சக்தி என அறியாத பேதை அரக்கன் அவன். அவன் அழியும் நேரம் வந்துவிட்டது. கவலைப்படாதீர்கள் என்றார். பார்வதி தேவியை அழைத்து அசுரனை அழிக்க ஆணையிட்டார். அசுரனின் அக்கிரமங்களை அறிந்த தேவியின் முகத்தில் உக்கிரம் ஏற, எட்டுக் கரங்களிலும் ஆயுதம் ஏந்தி அசுரனை நோக்கிப் புறப்பட்டாள் தேவி. இதையடுத்து, அசுரனுக்கும், தேவிக்கும் கடும் போர் மூண்டது. இதில், அசுரனை வதம் செய்தார் தேவி. உயிர் பிரியும் நேரத்தில் அசுரன், தேவியைப் பணிந்து பெண்மையை இழிவாகப் பேசிய என்னை மன்னிக்க வேண்டும் என்றும், இந்தப் பகுதி என் பெயரால் “தஞ்சாபுரி’’ என வழங்க வேண்டும் எனவும் வேண்டினான். தேவியும் அப்படியே ஆகட்டும் என்று வரம் அளித்தார்.

ஆக்ரோஷம் அடங்காத அம்மன்

எருமைக்கிடா உருவம் தாங்கிய அசுரனின் கழுத்தை வெட்டி, தலையை ஒரு கையில் ஏந்துகிறாள். உடல் கீழே சாய்ந்ததும், அசுரன் எருமை உருவம் நீங்கி இறந்துவிடுகிறான்.பார்வதியே காளியாக வந்து, அசுரவதம் முடிந்த பின்னும் அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அப்போது, மாங்காளி வனம் என அழைக்கப்பட்ட வல்லத்தில் அலைந்துதிரிந்தாள். அதனால், நீர் நிலைகள் வறண்டன. வனமெங்கும் தீப்பற்றி எரிந்தது. நிலைமையை உணர்ந்த சிவபெருமான், ஏகெளரி அம்மனிடம் சாந்தம் கொள் என்றார். அம்மனின் கோபம் சற்று தணிந்தது. சிவபெருமான், கோபத்தைத் தணித்துக்கொண்டு அப்பகுதி மக்களுக்குத் தெய்வமாக இருந்து காப்பாற்றும்படி கூறுகிறார். வறட்சி, பஞ்சம் நீங்குகிறது. அப்போது, மக்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அங்கேயே எழுந்தருள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இருமுகம் கொண்ட அம்மன்

மக்களின் வேண்டுகோளின்படி, அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறார். அம்மன் அசுரனை வதம் செய்தது ஆடி கடைசி வெள்ளிக்கிழமை. எனவே, அன்றைய நாளில் மக்கள் பால்குடம் எடுத்து வந்து தீ மிதித்து அம்மனைச் சாந்தப்படுத்துகின்றனர். எட்டுத் திருக்கரங்களுடன் தேவி பத்ம பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். இந்தத் தேவி ஒன்றின் மீது ஒன்றாக அமைந்த இரு திருமுகங்களுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. அசுர குணம் கொண்டவர்களை அழிக்க ஆக்ரோஷத்துடன் ஒரு முகமும், அல்லல்பட்டு வரும் அடியவர்களின் துயர் தீர்க்க சாந்தத்துடன் இன்னொரு முகமும் அமைந்துள்ளது. இப்படி இரு திருமுகங்களுடன் அமைந்த அம்மனை காண்பது அரிது. காட்டில் அம்மன் எழுந்தருளிய இடத்தில் சுதை வடிவத்தில் அம்மன்சிலை எழுப்பப்பட்டது. 2,500 ஆண்டுகளுக்கு மேலாக அந்தச் சுதைவடிவம் இன்றளவும் மாற்றப்படாமல் வழிபடப்பட்டு வருகிறது.

மன்னர்கள் வழங்கிய தானங்கள்

1987-ஆம் ஆண்டில், விழுப்புரம் வட்டத்தில் உள்ள எசாலம் என்ற ஊரில் கிடைத்த செப்பேட்டுத் தொகுதியில் முதலாம் ராஜேந்திர சோழனின் அரச இலச்சினை (முத்திரை) பொறிக்கப்பட்டுள்ளது. அதில் முற்காலச் சோழ மன்னர்களின் வம்சா வழிமுறை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, வல்லப சோழ மன்னனால் தோற்றுவிக்கப்பட்டது. அதில், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கரிகால்சோழ மன்னன் காலத்தில் வல்லம் ஏகௌரியம்மன் கரிகால் சோழ மாகாளி என அழைக்கப்பட்ட விவரம் கூறப்பட்டுள்ளது. அதுபோல, முதலாம் ராஜராஜ சோழனின் ஆறாவது ஆண்டு (கி.பி.991) கல்வெட்டில், அக்காலத்தில் காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை என அழைக்கப்பட்ட ஏகெளரி அம்மனுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிக் கூறுகிறது.பாண்டிய மன்னனுக்குக் குலசேகர தேவர் தனது 13வது ஆட்சி ஆண்டில், வல்லத்துப் பிடாரியான கரிகால் சோழ மாகாளிக்கு (ஏகெளரி) ஒரு வேலி நிலம் தானம் செய்தது குறிக்கப்பட்டுள்ளது.கி.பி.1535-ஆம் ஆண்டில், செவ்வப்ப நாயக்கர் தஞ்சைக்கு அரசரானார். அவரது மகன் அச்சுதப்ப நாயக்கர் இளவரசரானார். இவர்களுடைய ஆட்சியில் வல்லம் நகரம் மிகச் சிறந்து விளங்கியது. இருவரும் இணைந்து வல்லம் ஏகெளரியம்மன் கோயிலைப் புதுப்பித்தனர். இவ்வாறு புராணப் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டது வல்லம் ஏகௌரியம்மன் கோயில்.

திருவிழா

ஆடிபதினெட்டு அன்று வல்லம் கடைவீதியிலுள்ள மாரியம்மன் கோயில் விழாவோடு ஏகௌரியம்மன் கோயில் திருவிழா நடத்தப் பெறுகிறது. ஏகௌரி அம்மன், மாரியம்மன், அய்யனார் ஆகிய உற்சவமூர்த்திகளைத் தனித்தனியே அலங்கரித்து வீதி உலா நடத்துகின்றனர். ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக் கிழமை ஆடிக்கழிவு திருவிழா நடைபெறுகிறது. தீமிதி, அம்மனுக்கு பகலில் சைவபூசை, தொடர்ந்து இரவில் எருமைக்கிடா பூசை போன்றவை நடத்தப் பெறும். கோயில் காவல் தெய்வங்களுக்கு ஆடு, கோழி வெட்டி பூசை செய்கின்றனர். இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவில், தேவிக்கு நடத்தப்படும் சண்டி ஹோமம், திருவிளக்குப் பூஜை, சித்ரா பௌர்ணமி விழா அடங்கும். சண்டிஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை,
லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மிகவும் மகிழ்ந்து வாழ்வில் உள்ள சூனியங்களை அழித்து சகல சுகங்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர்.

சிறப்பு ஹோமம்

மாதந்தோறும் அமாவாசை, பெளர்ணமி நாள்களில் அம்மனுக்குச் சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது இந்தக் கோயிலின் இன்னுமொரு சிறப்பம்சம். இங்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்துகொண்டு அம்மனை வழிபட, சகல சங்கடங்களும் தீர்ந்து மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர். கிரகக் கோளாறுகளால் துன்பம் அடைபவர்களும் இந்த அற்புத ஹோமங்களில் பங்கு கொண்டு பலன் பெறுகின்றனர்.

எலுமிச்சைப் பழமும் மஞ்சள் கிழங்கும்

தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள். திருமணத் தடை உள்ள பெண்கள், இங்கே வந்து அம்மனுக்குப் புடவை சாத்தி அம்மனின் திருப்பாதத்தில் குண்டு மஞ்சளை (குளியல் மஞ்சள்) வைத்து வணங்குகின்றனர். அதிலிருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து, தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள, விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், நாள்தோறும் அம்மன் நம் கூடவே இருந்து காப்பாற்றுகிறாள் என்பதும் ஐதீகம். எனவே, கன்னிப் பெண்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து இங்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இதேபோல, குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், இங்கே எலுமிச்சைப் பழத்தை அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூஜைசெய்து, அதன் சாற்றைக் கோயிலிலேயே சாப்பிட்டுச் செல்ல, விரைவில் குழந்தை பிறப்பது உறுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுபோல, பலனடைந்த பெண்கள் தங்களது குழந்தைக்கு இக்கோயிலில் மொட்டை அடித்து, மாவிளக்கு மாவு படைத்து நேர்த்திக் கடனைச் செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.

கோயில் அமைவிடம்

தஞ்சையிலிருந்து, தஞ்சை – திருச்சி சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ள வல்லம் என்னும் சிற்றூரிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணிவரையும், வெள்ளிக் கிழமை, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் காலை 7 மணி முதல் இரவு 7.30 மணிவரை நடைதிறந்திருக்கும்.

சீர்காழி.ஏ.கே.ஷரவணன்

 

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi