Monday, May 20, 2024
Home » குருவாய்… நண்பனாய்… குழந்தையாய்!

குருவாய்… நண்பனாய்… குழந்தையாய்!

by kannappan
Published: Last Updated on

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-59ஆன்மிக அன்பர்கள் அனைவரையும் கவர்ந்த தெய்வமாக கண்ண பெருமான் விளங்குகின்றான். கண்ணபெருமானின் அழகையும், ஆற்றலையும், அவன் இளமைப் பருவக் குறும்புகளையும், அவன் அருளிச் செய்த பகவத்கீதையையும் ஏற்றிப் போற்றாத எழுத்தாளர்களும், கவிஞர்களும் எவருமில்லை என்று கூறிவிடலாம். தமிழ் மொழிக்கு புதுநெறி காட்டிய புலவனாக விளங்கும் பாரதியார் கண்ணபெருமானைப் பலவிதங்களில் அனுபவித்து ‘கண்ணன் பாட்டு’ என்று குறுங்காவியமே படைத்துள்ளார்.கண்ணபெருமானிடம் பாடம்கேட்ட அர்ஜூனனாகவே தன்னைக் கற்பிதம் செய்து கொண்டு அவர் கற்பனைச் சிறகை விரித்த பாங்கு அவரின் பல பாடல்களில் தெரிகிறது. வருகின்ற பாரதத்தை வளமுறச் செய்ய வேண்டிய கடமை இளைஞர்களுக்குத்தானே இருக்கிறது. அவர்களை வரவேற்பதாகப்பாடும்  கவிதையில் ‘அனைத்து இளைஞர்களும் ஆற்றல் மிகுந்த அர்ச்சுனர்களாக ஆகவேண்டும் என்கிறார்.விளையும் மாண்பு யாவையும் பார்த்தன்போல்விழியினால் விளக்குவாய் வா! வா! வா!கண்ணபெருமானிடம் பாடம் கேட்ட வில்விஜயன் அச்சத்தையும், கவலையையும் அடியோடு நீக்கி வீரமும், விவேகமும் பெற்று விளங்கியதைப்போல் இந்திய இளைஞன் விளங்கவேண்டும் என்று அறை கூவல் விடுக்கிறார், அமரகவி.வில்லினைஎடடா !- கையில்வில்லினைஎடடா ! – அந்தபுல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய்திடடா !- என்று அர்ஜூனனுக்கு கண்ணபிரான் ஆண்மை ஊட்டியதைப்போல் சுதந்திரப் போரில் வருங்கால பாரத இளைஞர்களுக்கு பகவத் கீதை பாடம் நடத்துகிறார் பாரதியார். பாரதியார் அன்னை நிவேதிதா தேவியை தன் ஆதர்ச குருவாக ஏற்றார்.‘அருளுக்கோர் நிவேதனம்அன்பினுக்கோர் கோயில்இருளுக்கோர் ஞாயிறுபயிருக்கோர் மழை- என நிவேதிதாவைப் போற்றி அவரிடமிருந்து உபதேசமும், அருள் தரிசனமும் பெறுகிறார். நிவேதிதா தேவியிடம் தாம் பெற்ற அருள் அனுபூதி கிருஷ்ணர் விஜயனுக்குக் காட்டிய விசுவரூபத்தை நிகர்த்தது எனப் புகழ்கின்றார். பரந்தாமனின் விஸ்வரூபத்திலும், அவதாரத்திலும் மனம் பறிகொடுத்த மகாகவி பாரதியார் கண்ணனின் பல்வேறு கோணங்களை தன் பாட்டுத் திறத்தால் படம் பிடிக்கிறார்.தோழன், தாய், தந்தை, சேவகன், அரசன், சீடன், சற்குரு, குழந்தை, விளையாட்டுப் பிள்ளை, காதலன், காதலி ஆண்டான், குல தெய்வம் என நட்பும், உறவும் அனைத்தும் கண்ணபெருமானாகவே காண்கின்றார்.‘கண்ணன் பாட்டு’ என்ற குறுங்காவியத்தை பாரதியார் எப்படிப் பாடினார் தெரியுமா?பரந்தாமனின் பேருருவக் காட்சியான விஸ்வரூபம் விண்ணுக்கும் மண்ணுக்குமாக விரிந்து நின்றது. அதி அற்புதமான கண்ணன் உருவை நிறைவாகப் பார்ப்பது எப்படி?‘அவன் அருளாலே அவன்தாள் வணங்கி’ என்பது போலவும் ‘காண்பாரார் கண்ணுதலான் காட்டாக்காலே’ என்பது போலவும் தவித்த அர்ஜூனனுக்கு காட்சியைக் காணக்கூடிய கண்ணொளி யை தந்தார் கண்ணபெருமான்.அது போலவே பாரதியாரும் கண்ணபெருமானின் கண்களைதன் கவிதை மூலம் வேண்டிப் பெற்ற அவன் விழிகளாலேயேபல்வேறு கோணங்களில் பார்த்து மகிழ்கிறார். பாடல் படைக்கிறார்.இச்செய்தியை ‘கோவிந்தன் பாட்டு’ எனும் தலைப்பில் கவிச்சுவைத்தும்பப் பதிவு செய்கிறார்.என் கண்ணை மறந்து உன் இரு கண்களையேஎன் அகத்தில் இசைத்துக் கொண்டுநின் கண்ணால் புவியெல்லாம் நீயெனவேநான் கண்டு நிறைவு கொண்டுவன் கண்மை, மறதியுடன் சோம்பர் முதற்பாவமெலாம் மடிந்து நெஞ்சில்புன்கண்போய் வாழ்ந்திடவே கோவிந்தாஎனக்கு அமுதம் புகட்டுவாயே!தெய்வ விழிகளைப் பெற்றே தெரியும் காட்சிகளில் எல்லாம் சேரும் உறவுகளில் எல்லாம் கண்ணன் முகத்தையே காண்கிறார் கவியரசர் பாரதியார்.‘உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே ’

 – என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் தெரிவிப்பதைபோலவே பாரதியாரும் கண்ணன் – என் தோழன் கவிதையில் தெரிவிக்கின்றார்.

மழைக்குக் குடை, பசி நேரத்து உணவு, என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்.பாடும் முறையிலும், பாடுபொருளிலும், பதச் சேர்க்கையிலும் பல புதுமைகளைச் செய்த பாரதியார் ‘கண்ணன் பாட்டிலும்’ யாரும் எண்ணிப் பார்க்காத ஒரு அதிசயத்தை நிகழ்த்தி உள்ளார். ஆன்மிக அருளாளர்கள் அனைவருமே ஆண்டவனைத் தலைவனாக மட்டுமே கண்டவர்கள். அதாவது பரமாத்மா மட்டுமே நாயகன். ஜீவர்களாகியநாம் அனைவரும் பெண்பாலே! பாரதியாரின் பாடல் மட்டுமே தெய்வத்தை நாயகி பாவத்தில் தோற்றப்படுத்துகிறது. பெண்மைக்குத் தலைமை தந்த அவரின் சமுதாயச் சிந்தனை தெய்வீகத்திலும் தொடர்கிறது.கண்ணம்மாவாகக் கண்ணனைக் கருதி காதல் கீதம் பாடுகிறார், கவியரசர்.பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம் தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா…!காதலியாகக் கண்ணனைக் கருதி காட்சிபடுத்தியது போலவே கண்ணன் என் சேவகன் என்றும் பாரதியார் பாடுகிற பாடல் அனைவரும் அறிந்த ஒன்று!நண்பனாய், மந்திரியாய், நல் ஆசிரியனுமாய்,பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!பாரதியார் மட்டுமல்ல. கண்ணன் பாட்டைப் படித்து அனுபவிக்கும் நாம் அனைவருமே மேலான தவம் செய்தவர்கள் தான் என்று அறுதியிட்டுக் கூறலாம்!(தொடரும்)திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்…

You may also like

Leave a Comment

seven + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi